’அக்னிதேவி ’ விமர்சனம்

பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ், எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், சஞ்சய் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ’அக்னி தேவி’

இது க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஸ்வாதி கொலையை களமாக்கி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும், பணம் மதிப்பிழப்பு, கறுப்பு பணம் பதுக்கல், அரசியல் அடாவடி பினாமிகள் என சமகால அரசியல் நடப்புகளையும் சேர்த்து  படத்தை விறுவிறுப்பாக மாற்றியிருக்கிறார்கள்.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், ஒரு நேர்மையற்ற அடாவடிப் பெண் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் முட்டல் மோதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகமும் தான் இப்படத்தின் கரு.

பரபரப்பான பேருந்து நிலையம் ஒன்றில் பட்டப்பகலில் நடந்த ஒரு பெண் நிருபரின் கொலை வழக்கைக் கையிலெடுத்துக் களமிறங்கும் போலீஸ் ஆபீஸர் பாபி சிம்ஹாவிற்கு, அந்த கொலைக்கேசில் குற்றவாளிகளை நெருங்க முடியாத அளவிற்கு பாபிக்குத் தெரியாமலேயே பல தொல்லைகளைக் கொடுக்கிறார் பெண் பொதுப்பணித்துறை அமைச்சர் சகுந்தலா தேவி எனும் மதுபாலா. மேலும், குற்றவாளிகளை ஒரு கட்டத்தில் நெருங்கிடும் பாபி சிம்ஹாவை கூலிப்படையை வைத்துக் கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு இறங்குகிறார் பெண் அமைச்சர் மதுபாலா.

பெண் அமைச்சர் மதுபாலாவிற்கும் அந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? மதுபாலாவின் கொலை முயற்சிகளிலிருந்து பாபி சிம்ஹா தப்பிப் பிழைத்தாரா? கொலைக் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றினாரா? இல்லையா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்குகடந்த கால மற்றும் நிகழ்கால நம்மூர் அரசியலைக் கலந்துகட்டி வித்தியாசமும், விறுவிறுப்புமாக விடை சொல்லி வந்து இருக்கிறது “அக்னிதேவி” படத்தின் மீதிக் கதை!

தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெ பி ஆர் எனும் ஜான் பால்ராஜும், ஷாம் சூர்யாவும் இணைந்து இயக்கியுள்ளனர். படத்தில் இன்றைய அரசியல் அனைத்தையும் மொத்தமாக திணித்து, காட்சிப்படுத்தியிருப்பது சற்றே இத்திரைப்படத்தை காணும் ரசிகனுக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. மற்றபடி ,”அக்னி தேவி” யில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை

படத்தின் முதல் பாதி, தொடங்கியதும் முடிந்ததும் தெரியாதபடி படு வேகமாக நகர்கிறது. பேருந்து நிலையத்தில் பெண் கொலை, அதனை விசாரிக்க பாபி சிம்ஹா களத்தில் இறங்கியவுடன், விறுவிறுப்பாக நகரும் படம்,  ரசிகர்களிடமும் விறுவிறுப்பைத் தொற்றிக் கொள்ள செய்கிறது.

நேர்மையும் மிடுக்கும் நிரம்பிய போலீஸ் அதிகாரி அக்னிதேவ் கதாபாத்திரத்தில், பாபி சிம்ஹா, பக்கா.

ஊழல் மற்றும் சமூக விரோத செயல்களுக்கு எதிராக அவர் ஆக்சன் ஹீரோவாக அசத்தும் இடங்கள் கலர்ஃபுல்! அதேநேரம் கதாநாயகி ரம்யா நம்பீசன் உடன் அவருக்கு பெரிதாகக் காட்சிகள் இல்லாதது சற்று வருத்தத்தை தருகிறது.

ரம்யா நம்பீசன் சேனல் நியூஸ் சேகரிப்பாளராக, நிருபராகப் பொருத்தம்.வில்லி மற்றும் பெண் பொதுப்பணித்துறை அமைச்சர் என இரு முகம் கொண்ட பாத்திரத்தில் மதுபாலா மிரட்டல். ஆனால், அது சில இடங்களில் ஓவர் மிரட்டல்! மிகை நடிப்பு ரசிகனைச் சோதிக்கிறது!

சதீஷ் நாயகன் பாபி சிம்ஹாவின்  போலீஸ் தோழராக,படம் முழுக்க வருகிறார். முடிந்த அளவிற்கு இந்த சீரியஸ் சப்ஜெக்ட் கதையில் செம சீரியஸாக காமெடி செய்திருக்கிறார் .

 ஊர்நியாயம் பேசித்திரியும் கட்சி தலைவர்களில் ஒருவராக எம் எஸ் பாஸ்கர் கச்சிதம்! அவரை மாதிரியே நியாயமில்லாத என்கவுண்டரில் எதுவும் செய்யமுடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில்மௌனியாக இருக்கும் போலீஸ்காரராக டெல்லி கணேஷ், நாயகனின் அப்பாலிவிங்ஸ்டன், கூலிப்படை கத்திக்குத்தில் அகால மரணமடைந்த பெண்நிருபரின் அண்ணனாக சில காட்சிகளே வரும் சஞ்சய்…. உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

“துருவங்கள் பதினாறு”, “சென்னையில் ஒரு நாள்” உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜாக்ஸ் பிஜாய்தான் இசை. 

படத்தின் ஓட்டத்திற்கு பாடல் தேவை இல்லை என்பதால், படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. அதனால், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பீஜாய், பின்னணி இசைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அது படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது. ஜனாவின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களமாக உள்ளது.
 
 முதல் பாதியில் இருந்த நேர்த்தி மறுபாதியில் இல்லை. சகுந்தலா தேவியாக வரும் மதுபாலாவின் ஓவர்ஆக்டிங் நடிப்பு தெலுங்குப்பட வாசனை நெருடல் தருகிறது.

இருந்தாலும்    துணிச்சலாக இன்றைய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் “டயர் நக்கிகள்” பன்ச் சை எல்லாம் டயலாக்குகளாக இப்படத்தில் திணித்து, இப்படத்தை இயக்கியிருக்கும் இரட்டை இயக்குநர்கள் ஜெ பி ஆர் மற்றும்ஷாம் சூர்யா இருவரையும் பாராட்டலாம்!

 

Pin It

Comments are closed.