அசாத்திய கலைஞன் சூரி! – நடிகர் சூரிக்கு சீமான் வாழ்த்து!

நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி  செந்தமிழன் சீமான் அறிக்கை வெளியிட்டு  அதில்,seeman-222கூறியிருப்பதாவது:

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடகக் காலம் தொட்டே நகைச்சுவைக் கலைஞர்களின் ஊடாகவே சுதந்திரம் தொடங்கி சுரண்டல் வரையிலான அத்தனை பிரச்னைகளும் மக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நகைச்சுவை திறமையால் சதுரம் நடுங்க வைத்தார் சார்லி சாப்ளின். அந்த விதத்தில் நாட்டின் நல்லது கெட்டதுகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஆகப்பெரும் கடமை நகைச்சுவை soori1கலைஞர்களுக்கு இருக்கிறது. தம்பி சூரி தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகவும், தமிழ் வாழ்வியலின் அப்பட்டமான சாட்சியாகவும் ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மூன்றாம் தமிழின் அரிய கலைஞனாக, மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக விளங்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் அரிய சொத்து. வளைந்து நெளியும்  உடல்மொழியும் அருமையான வட்டார மொழியுமாய் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சூரி, தமிழ்த் திரையுலகில் இன்னும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி தமிழ் மக்களைக் குளிர்விக்க நாம் தமிழர் கட்சி வாழ்த்துகிறது.

திரைத்துறைத் திறமையிலும் தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து இதயக்கூட்டில் வைத்திருக்கும் சூரி, தமிழ் மண்ணுக்கான நகைச்சுவை அடையாளமாகக் காலம் முழுக்கத் தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கான பக்க பலமாக, ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுமிக்க ஆதரவாக  நாம் தமிழர் கட்சி எந்நாளும் விளங்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.