’அடங்க மறு’ விமர்சனம்

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்‘அடங்க மறு’
 
அதிகாரத்தை வைத்துக்கொண்டு தன் குடும்பத்தைப் படுகொலை செய்துவிட்டு தப்பித்தவர்களின் ,  வாரிசுகளை திட்டம் போட்டு படுகொலை செய்யும் ஒரு முன்னாள் சப்-இன்ஸ்பெக்டரின் கதைதான் அடங்க மறு திரைப்படம்.

காக்கி சட்டை போட்டு செய்ய வேண்டியதை, காக்கி சட்டை இல்லாமல் பொதுமக்களில் ஒருவராக இருந்து நாயகன்செய்கிறார், என்பது தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

சுபாஷ் ரவி என்னும் ஜெயம் ரவி புதிதாக வேலையில் சேர்ந்துள்ள சப்-இன்ஸ்பெக்டர். அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் பணிக்குச் சேர்ந்துள்ளார். ஜெயம் ரவி ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.அவரிடம், ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.

அப்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அறிகிறார். அவரது எல்லைக்குட்பட்ட ஒரு இடத்தில் பல மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்பே மேலிருந்து தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணையில் கண்டறிகிறார் ஜெயம் ரவி.

அதுமட்டுமல்ல அதேபோல  பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதையும்,கண்டுபிடிக்கிறார். இக்கொடுமைக்குக் காரணமானவர்கள் யார்? என்பதையும் கண்டுபிடிக்கிறார். ஆனால், அவர்கள் அத்தனை பேரும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் கைதான சில நிமிடங்களில் வெளியே வரு கிறார்கள். குற்றவாளிகள் ஜெயம் ரவியின் குடும்பத்தையே கொலை செய்துவிடுகிறார்கள். அதற்கு காவல் துறையும் துணைபோகிறது.

 

இதனால், தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்யும் ஜெயம் ரவி, அதே போலீஸ் மூளையுடன் தனது குடும்பத்தை அழித்த அந்த நான்கு இளைஞர்களையும் பழிவாங்க நூதனமாகத் திட்டமிடுகிறார்.அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பது தான் ‘அடங்க மறு’ படத்தின் கதை.

 

 பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சினையை மையப்படுத்தி சொன்னாலும், அதை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார் இயக்குநர்.

 

ஜெயம் ரவியின் மென்மையான அவரது குரல் இப்படத்தில் கம்பீரமாக இருக்கிறது, அதுவே அவருக்கு பெரிய வெற்றி என்று சொல்லலாம். மற்றபடி , தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.

நாயகி ராஷி கண்ணா. அவரைப் பற்றிச் சொல்ல படத்தில் ஒன்றுமில்லை. அழகம் பெருமாள், முனிஷ்காந்த், சம்பத் மற்றும் நான்கு இளைஞர்கள் என்று படத்தில் நடித்தவர்கள் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமை என்ற களத்தை பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் தங்கவேல், தமிழ் சினிமா அடித்து துவைத்து கிழித்த பழைய பார்முலாவை பயன்படுத்தியிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

 

முதல் பாதியிலே படத்தின் கதை என்னவென்று இயக்குநர் சொல்லிவிடுகிறார். எனவே தலைப்பில் இருக்கும் வீரியம் திரைக்கதையில் இல்லாமல் போகிறது.

 

பழைய கதையை பழையபடியே எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் தங்கவேல், படத்தில் எந்தவித ட்விஸ்ட்டும் வைக்காமல், திரைக்கதையை நகர்த்தியிருப்பது ரசிகர்களை சோர்வடைய செய்துவிடுகிறது.

 

மொத்தத்தில், ‘அடங்க மறு’  புதிய மொந்தையில் பழைய கள் எனலாம்.

 

Pin It

Comments are closed.