‘அட்ரா மச்சான் விசிலு’ விமர்சனம்

adra1சூப்பர் ஸ்டார் மாதிரி பெரிய ஸ்டார் பவர்ஸ்டார் .அவரை நம்பி விசிலடித்து ரசிகர் மன்றம் அமைத்து எதிர்காலத்தை வீணடிக்கும் சில இளைஞர்கள். இவர்கள் பற்றிய கதை தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.

பவர்ஸ்டார் ரசிகர்களில் ஒருவர் சிவா . அவரது நண்பர்கள்  சென்ட்ராயன், அருண்பாலாஜி. பவர்ஸ்டாரைத் தங்கள் நட்சத்திரமாக மட்டுமல்ல கடவுளாகவே எண்ணிப் போற்றுகிறார்கள்.அதற்காக பல இடங்களில் வம்பு வளர்த்து வருகிறார்கள்.

இப்படி சிவா பொறுப்பற்றுத் திரிவதால் பெண் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில்  நைனா சர்வாரைக் காதலிக்கிறார் .

தங்கள் நாயகனின் மேலுள்ள அபிமானத்தில் மூன்று நண்பர்களும் சிரம்ப்பட்டு கடன் வாங்கி வாழ்க்கையைப் பணயம் வைத்து பவர்ஸ்டாருடைய படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள்.படம் படு தோல்வி அடைகிறது. பல லட்சங்கள் இழப்பு.பலவற்றை இழக்கிறார்கள். வாழ்வா சாவா  என்கிற போராட்டம்.

pwr77எல்லாமும் இழந்து  பவரை, நெருங்கினால் அவரது முகம் வேறாக இருக்கிறது.   நம்பிப்போனவர்கள் துரத்தியடிக்கப்படுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் இழந்த்தை மீட்க  ஒரு விபரீத முடிவெடுக்கிறார்கள்.  ஐடி ரெய்டு என்று திட்டமிட்டு நாடகமாடி பவர் ஸ்டாரின் பணத்தை 25 கோடி ரூபாயை வெளிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இது பவர் ஸ்டாருக்குத் தெரிகிறது பழிவாங்கத் துடிக்கிறார் முடிவு என்ன என்பதே’அட்ரா மச்சான் விசிலு’ வின் உச்சக்கட்ட காட்சி.

பவர்ஸ்டார்  சீனிவாசன் பவர்ஸ்டராகவே வருகிறார். படப்பிடிப்பில் அவர் செய்யும் அழும்புகள், கதை கேட்கும் போது செய்யும் அடாவடிகள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைக்கின்றன.

கொடுத்த வேலையை முடிந்ததை செய்துள்ளார் நாயகன் சிவா . அவர் போடும் திட்டங்கள் பணால் ஆவதும் அசடு வழிவதும் சிரிப்பூக்கள். நாயகி  நைனா சர்வார் வெள்ளையாக இருக்கிறார்.  நடிப்பில் முகபாவம் போதாது .பாவம்.

ரசிகர்களின் கண்மூடித்தனமான அபிமானம்,நடிகனின் ரசிகனை  கேவலமாக மதிக்கும் ஆணவம்  போன்ற எல்லாவற்றையும் நன்றாகக்  காட்டியுள்ளார்கள்.

ஒரு நட்சத்திரத்தை நம்பி எதிர்காலத்தை வீணடிக்கும் இளைஞர்கள் என்கிற கரு நன்றாகவே இருக்கிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை  இயக்குநர் திரைவண்ணன் தெளிவாகச் சொல்லாதது குறை .பவர்ஸ்டார்  மேனேஜராக வரும் சிங்கமுத்து கோமாவில் போகும் ஆஸ்பத்திரி காட்சிகளை அப்படியே தூக்கிவிடலாம் ,அவ்வளவு ஆபாசமான அறுவை.

ரஜினி லிங்கா சம்பவங்களை நினைவு படுத்தும் கதை .இப்படி யாரையாவது நடிகரை  மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் பிடிக்கும் ,விசிலடிக்கலாம் .