’அயோக்யா’ விமர்சனம்

விஷால் நடிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘அயோக்யா’ எப்படி என்பதைப் பார்ப்போம்.
 
 சிறு வயதில் திருட்டு வேலைகளில் ஈடுபட்ட விஷால் ,போலீசாகிவிட்டால், யாரிடம் வேண்டுமானாலும் பணம் வாங்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறார். உடனே போலீசாக வேண்டும் என்ற முடிவுக்கு வருவதோடு, அதற்கான பாதையில் பயணிப்பவர் போலீஸ் இன்ஸ்பெக்டராகி விடுகிறார்.
 
 திருடுவதற்காகவே போலீசான விஷால், எங்கயாவது கொலை நடந்தால் கூட அந்த பிணத்தை வைத்து எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு எந்த நேரமும் பணம், லஞ்சம் என்றே வாழ்ந்து கொண்டிருப்பவர், போதை மருந்து கடத்தல் தாதா பார்த்திபன் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் செய்யும் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.
 
இதற்கிடையே ராஷி கண்ணாவைப் பார்த்ததும் காதல் கொள்ளும் விஷால், தனது திருட்டுத்தன ரூட்டில் போய் அவரைத் தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறார்.
 
எதிரிகளிடம் சிக்கி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்த ஒரு பெண்ணின் வழக்கை கையில் எடுக்கும் விஷால், தான் அதுவரை பணத்திற்காக வேலை செய்து வந்த ரவுடி பார்த்திபனையே எதிர்த்து அவனது தம்பிகள் நால்வரை சிறையில் தள்ளி கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார். முக்கியமான ஆதாரம் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட இந்த நால்வரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருப்பதற்காக விஷால் ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார் அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
 
வில்லனாக வரும் நாயகன், பிறகு மனம் திருந்தி நல்லவனாகி வில்லன்களை புரட்டி எடுத்து, மக்களுக்கு நல்லது செய்வது, ஏற்கனவே சில படங்களில் பார்த்தது தான் என்றாலும், இப்படத்தின் க்ளைமாக்ஸ் தான் படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, பாராட்டு பெறவும் செய்துவிடுகிறது.
 
 விஷால், எப்போதும் போல ஆக்‌ஷனில் அதிரடி காட்டுபவர், நடிப்பில் கொஞ்சம் மிகை காட்டியிருக்கிறார். வில்லன்களிடம் பஞ்ச் பேசுவதில் அசத்தும் விஷால், காதலியிடம் ரொமான்ஸ் செய்யும் போது மட்டும் சற்று தடுமாறுகிறார்.
 
 அயோக்யனாக இருக்கும் விஷாலை நல்லவனாக மாற்றும் ராஷி கண்ணா, படத்தில் கொஞ்சமாக வந்தாலும், ரசிகர்களில் நெஞ்சில் நின்றுவிடுகிறார்.
 
 வில்லனாக நடித்திருக்கும் பார்த்திபன் தனது நக்கல் பேச்சால் ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார். 
 
ஒரு சில காட்சிகள் வந்தாலும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார்.
 
சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் தான். ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். 
 
 போலீஸ் இன்ஸ்பெக்டரான விஷாலுக்கு ஒரு காட்சியில் கூட காக்கி சட்டையை போடாத இயக்குநர், இதுதெலுங்கு படத்தின் ரீமேக் என்று சொல்லாமலேயே நமக்கு புரிய வைத்துவிடுகிறார்.
 
 எத்தனை பேர் வந்தாலும் புரட்டி எடுப்பதோடு, பலமான ஆயுதங்களால் அடி வாங்கி, மண்ணில் புதைந்தாலும் எழுந்து வருவது, என்று ஆரம்பத்தில் இருந்தே மசாலாப் படமாக காட்சிகளை நகர்த்தி வரும் இயக்குநர் வெங்கட் மோகன், கிளைமாக்ஸின் போது காட்டிய வித்தியாசம் அத்தனை மாஸ் காட்சிகளையும், மசாலத்தனத்தையும் நம்மை மறக்க செய்துவிட்டு, படத்தைப் பாராட்ட செய்துவிடுகிறது.
 
 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்த தண்டனை, எப்படி கொடுத்தால் குற்றவாளிகளுக்கு பயம் வரும் என்பதையும் இயக்குநர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை ஒன்றே சரியான தண்டனை என்பதை வலியுறுத்தி உள்ளதற்காக படத்தின் மற்ற குறைகளை மறந்து இயக்குநர் வெங்கட் மோகனை தாராளமாகப் பாராட்டலாம்.

Pin It

Comments are closed.