‘அரண்மனை 2 ‘விமர்சனம்

aranmanai2-rwபாதிக்கப்பட்டவர்கள் பேயாக மாறிப் பழி வாங்கும் பேய்க்கதை சூத்திரம்தான் கதை.

இந்தப் பேய்ப்பட சீசனில் ‘அரண்மனை’ படத்துக்குப் பிறகு உருவாகி இருக்கும் பாகம் 2 படம், சுந்தர். சி இயக்கத்தில் மீண்டும் சித்தார்த் – ஹன்சிகா நடிக்கும் படம், சுந்தர். சி – சூரி இணையும் முதல் படம் என்கிற இந்த கூட்டணிக்  காரணங்களே ‘அரண்மனை 2’ படத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்த போதுமானது.

பேய்ப் படங்களில் ஒரே மாதிரியான சாயல் இருப்பதைத் தவிர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளலாமா?   கேட்டால் இயக்குநர் சுந்தர். சி  இதை ஒப்புக்கொள்வார்.

கதை என்ன? ராதாரவி ஊர்ப் பெரிய மனிதர்அரண்மனையில் இருக்கும்   குடும்பம்  அவருடையது.அவர் அவ்வூர் கோயில் கும்பாபிஷேக வேலைகளைக் மும்முரமாகக் கவனித்து வருகிறார். அவரை ஒரு பேய் பழிவாங்கத் துடிக்கிறது. இதனால் கோமாவில் தள்ளப்படுகிறார் ராதாரவி. அந்த பேய் யார்? ஏன் த் ? யார் யாரை என்ன செய்தது? கும்பாபிஷேகம் எப்படி முடிகிறது? என்பதுதான் கதை.

‘அரண்மனை’ படத்தின் அதே அச்சில் ‘அரண்மனை 2’  ஐயும்  பொருத்தியிருக்கிறார் சுந்தர். சி .

படத்தின் ஆரம்பத்திலேயே பேய் வரத் தொடங்கி விடுகிறது.

அரசியலில் ஆட்சி மாறியுள்ளது காட்சி மாறவில்லை என்பார்கள்.அது போல இதில் கதாபாத்திரங்கள் மாறி இருக்கின்றன. கதைக் களம் மாறவில்லை. பிளாஷ்பேக் முன்கதை  எந்த அழுத்தம்  அதிர்ச்சியும்  தரவில்லை. மேலோட்டமானதாக இருக்கிறது.ஒட்ட வைக்கப்பட்ட படம் பழைய படத்தை மட்டுமே நினைவுபடுத்துவதுதான் நெருடலாக இருக்கிறது.இவை போதும் என்று இயக்குநர் சுந்தர். சி முடிவெடுத்தாரா?

சித்தார்த்  படத்தில் சும்மா வந்து போகும்  கதாபாத்திரம்தான். மற்றபடி சித்தார்த் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

த்ரிஷா முதல் பாடலில் ‘தாராளமாகத்தெரிகிறார். இடையிடையே நானும் உள்ளேன் என்கிறார். அதற்குப் பிறகு இரண்டாம் பாதியில் பேயாக ஆக்கிரமிக்கிறார்.  இறுக்கமான முகத்தை வைத்தே பயமுறுத்த முயற்சித்திருக்கிறார்.ஆனால் இது போதாதே,சந்திரமுகி ஜோதிகாவை அவர் ஒருமுறை பார்த்திருக்கலாமே?

ஹன்சிகாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். ஆனால், அதற்கான அழுத்தம் இல்லை.

மனோபாலா, கோவை சரளா, வினோதினி, ராதாரவி, ராஜ்கபூர், வைபவ், திண்டுக்கல் சரவணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

சூரி வரும் காட்சிகளில் மட்டும்  சிரிப்பு  எழுகிறது.

”நீ ஜாடை காட்டி வர்றதுக்குள்ள பாடையில போய்டுவாங்க.”

”பேயைப் பார்த்து ஒண்ணுக்கு போறதை பார்த்திருக்கேன். பேய் கூட ஒண்ணுக்கு போறதை இப்போதான் பார்க்கிறேன். ” என  வசனங்களில் சந்தானம் பாணி  தெரிகிறது. இருந்தாலும் நடிப்பில் கலகலக்க வைக்கிறார் சூரி.பஞ்சு சுப்புவை  பயங்கர நடிகராக காட்டி இருக்கிறார்கள்.அந்த யாகசாலைக் காட்சிகள் பிரமாண்டம்.

அட பேய்க்கதையில் கூட  காதல் கௌரவக் கொலையையும் புகுத்தியுள்ளார் இயக்குநர்.

ஹிப் ஹாப் தமிழாவின் இசையும், யு.கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் பலம்., குருராஜின் கலை இயக்கமும் படத்துக்குப் பெரும் பலம் உதாரணம் அந்த அம்மன் சிலை. அடடா  பிரமாண்டத்தில் மிரட்டியுள்ளார்.பேய் விரட்டும் நம்பூதிரியாக ஜெயபாலன் மிரட்டுகிறார்.சுந்தர் சி யும் நடித்துள்ளார்.ஏராளமான நட்சத்திரங்களை கட்டி மேய்த்துள்ள இயக்குநர்  அவர்களை சரியாகப் பயன் படுத்தாதது குறை.

அம்மன் பாடலில்  ஆதி திணறி இருக்கிறார் இந்த ரிதம் போதாது.அது மட்டும் சரியாக அமைந்திருந்தால்  பாடலில் ஆடும் குஷ்புவுக்கு இன்னொரு 108 அம்மன் பாடலாக அமைந்திருக்கும்.

பழக்கப்பட்ட சாயலில் படம் இருப்பதால்  சில இடங்களில் அலுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

விட்டு விட்டு சிரிக்க வேண்டும்  என்பவர்களுக்கான பொழுது போக்குப்படம்.