‘அரண்மனை3’ விமர்சனம்

இது பேய்ப் படங்களின் காலம். சுந்தர் சி எந்தப் படத்தையும் அலட்டிக் கொள்ளாமல்,மிக இலகுவாக அனாயாசமாக எடுப்பவர். அதனை வணிகரீதியிலான வெற்றியும் பெற வைப்பவர். இந்த ‘அரண்மனை3’ ம் அப்படித்தான்.
இப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் – பென்ஸ் மீடியா தயாரித்துள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.


அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களைத் தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. முந்தைய பாகங்களை விட இப்படத்தை பிரம்மாண்டமாகக் கொடுத்து இருக்கிறார்.
சரி இதன் கதை என்ன? ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தி வைக்கச் செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரைக் கட்டாயமாகத் திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்துவிடுகிறார். அந்த குழந்தை தான் ராஷி கன்னா.

மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத். பள்ளிப் பருவத்தை எட்டிய ராஷி கன்னா, தனது அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி ஹாஸ்டலில் தங்குகிறார். படிப்பு முடிந்தபிறகே அரண்மனைக்குத் திரும்புகிறார்.

இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் ஆர்யா. ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறுவிறுப்படைகிறது. அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதை அறியும் இவர்கள், இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்கு அரண்மனையில் தங்கி இருக்கின்றன? பேய்களை விரட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நாயகியாக வரும் ராஷி கன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கவர்ச்சிப் பதுமையாக வரும் ஆண்ட்ரியா,இதில் ஒரு பாசமுள்ள தாயாக தனது நடிப்பால் பார்ப்பவரைக் கவர்கிறார் .
ஆக்ரோஷமுள்ள பேயாகவும் மிரட்டுகிறார்.
தனக்கே உரிய பாணியில் சுந்தர் சி. நடித்தும் அசத்தி இருக்கிறார்.

சாக்ஷி அகர்வால், சம்பத், விவேக், யோகி பாபு ,மனோபாலா, வேல ராமமூர்த்தி, நளினி,மதுசூதன் ராவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத்,மைனா நந்தினி, ஹரிகரன் ,சங்கர் மகாதேவன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் உண்டு. அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து இருக்கிறார்கள்.
ஓர் இயக்குநராக நடிகரகளிடம் திறமையாக நினைவில் பதியும்படி வேலை வாங்கி இருக்கிறார் சுந்தர் சி. அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.

படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். பல இடங்களில் இக் காட்சிகள் தத்ரூபமாக அமைந்து,ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கிறார் சுந்தர்.சி.
எல்லாக் காட்சிகளையும் வண்ணமயமாகவும் பிரமாண்டமாகவும்
காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் யூ.கே. செந்தில்குமார்.
படத்திற்கு போடப்பட்டுள்ள அந்தப்பிரமாண்ட மலைக்கோயில் அரங்கமைப்பு ,விழிகளை விரிய வைக்கும்.கலை இயக்குநர் குருராஜின் கைவண்ணம் பாராட்டத்தக்கது.

சத்யா இசையில் பாடல்கள் சிறப்பு.குறிப்பாக ஆண்ட்ரியா பாடும் அந்தத் தாலாட்டு அருமை. பின்னணி இசை மிரட்டல்.

மொத்தத்தில் ‘அரண்மனை 3’ ஜாலியான பயங்கரம்.