அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழுவினர்!

imvசினிமாவில் பால பாடம்  கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்கிற  காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர்.இனி அவருடன்!

உங்கள் அறிமுகம்?

“மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம், ஏ.ஆர்.காசிம் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறேன். இயக்குநராக இது எனக்கு முதல் படம்”

’வசந்தமாளிகை’ படத்தில் சிவாஜி பாடிய பாடலின் வரியை படத்தின் தலைப்பாக வைத்ததன் காரணம் என்ன?

“நடிப்புக்கு உதாரணமாக இருக்கும் நடிகர்திலகம் நடித்த பாடலின் வரியை அறியாத ரசிகர்கள் இங்கே குறைவுதான். அப்படி பிரபலமான பாடலின் வரி எங்களுக்கு தலைப்பாக கிடைத்ததில் மகிழ்ச்சியே. தவிர கதைக்கு பொருத்தமாகவும் இருந்ததால் வைத்தோம்.”

என்ன கதை, எப்படி பொருந்தி வருகிறது?

ஒரு சுனாமியில் தொலைந்து போகும் ஒரு குழந்தையைத் தேடி அலையும் நாயகன். சூழ்நிலையின் பொருட்டு தன்னிடம் வந்து சேரும் அந்த குழந்தையை வளர்க்கும் நீதிபதி. குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் இந்த இருவருக்குள்ளும் நடக்கும் பாசப்போராட்டமும் அதைச்சுற்றிய சம்பவங்களுமே கதை. ஹீரோ, நீதிபதி தவிர கதையோட்டத்தில் டிராவல் ஆகும்  அத்தனை கதாபாத்திரங்களுக்குள்ளும் அலையடிக்கும் இரண்டு குணங்களின் குறியீடாகவும் இருக்கும் என்பதாலேயே ‘இரண்டு மனம் வேண்டும்’ என்ற தலைப்பை வைத்தோம்.”imv-dr

ஹீரோ, ஹீரோயின் பற்றி?

“ஷஜித் சுரேந்தர் என்ற புதுமுகம்தான் நாயகன். நாயகிகளாக நடித்திருக்கும் சிலங்கா, சைனாவும் புதுமுகங்களே. நீதிபதியாக மோகன் சர்மா, அரசியல்வாதியாக அழகு, காமெடியும் குணச்சித்திரமும் கலந்த கதாபாத்திரத்தில் கிரேன்மனோகர், சப் இன்ஸ்பெக்டராக படத்தின் தயாரிப்பாளர் அனில், வில்லனாக மணிமாறன், அருள்மணி, பழம்பெரும் மலையாள நடிகை ஸ்ரீமாஜிநாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் வேறென்ன ஸ்பெஷல்?

“நாகர்கோயிலில் உள்ள ஒரு கிராமத்து கடற்கரைதான் கதைக்களம். படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவும் இந்த கடற்கரை இருக்கும். ஒரு சோகப் பாடல் காட்சியை இந்த கடற்கரையில் எடுத்திருக்கிறோம். நாயகிகளில் ஒருவரான சிலங்கா, கடற்கரையை ஒட்டி நடந்துவருவது போன்ற காட்சியை எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று வந்து நாயகியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. நாங்களெல்லாம் அதிர்ச்சியாகி நின்றோம். அலையடித்து நின்றபோது கரையில் இருந்து சில மீட்டர் தொலைவில் கடலில் போராடிக்கொண்டிருந்த நாயகியை நீச்சல் தெரிந்த தொழிலாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி கரை சேர்த்தபோதுதான் எங்களுக்கு உயிரே வந்தது.”

எந்த நம்பிக்கையில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்தீர்கள்?

“அந்த நம்பிக்கையை கொடுத்தது கதைதான். பிரபல நடிகர்கள் நடித்தால் கதையில் நிறைய சமரசம் செய்துகொள்ளவேண்டி இருக்கும் என்பதால் புதுமுகங்களை நம்பினோம். இன்றைக்கு பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் புது முகங்களாக இருந்தவர்கள்தானே.”

கவர்ச்சி, கமர்ஷியல் உண்டா?

“கமர்ஷியலா இருக்கும்  கவர்ச்சி இருக்காது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருந்ததால்தான் சென்சாரில் ஒரு கட்கூட வாங்கவில்லை. படத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் எனக்கு இரண்டாவது சிந்தனை இல்லை” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் பிரதீப் சுந்தர்.