‘ஆதார்’ விமர்சனம்

அதிகார வர்க்கத்தின் ராட்சச காலடியில் மிதிபட்டு நசுங்கிக் காணாமல் போகிற எளிய மனிதர்களின் கதைதான் ‘ஆதார்’

கட்டடத்தொழிலாளி கருணாஸ்.அவரது மனைவி ரித்விகா.
மனைவியைப் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்து விட்டு துணைக்கு ஒரு பெண்ணை வைத்து விட்டு வெளியே செல்கிறார் கருணாஸ். வந்து பார்க்கும் போது மனைவி காணவில்லை. உடனிருந்த பெண்ணோ மருத்துவமனையின் கழிவுநீர்த் தொட்டியில் பிணமாக மிதக்கிறார்.

செய்வதறியாமல் தவிக்கும் கருணாஸ் பச்சிளங்குழந்தையை தூக்கிக்கொண்டு காணாமல் போன தன் மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு காவல்நிலையம் செல்கிறார்.

காணாமல் போன தன் மனைவியைக் கருணாஸ் கண்டுபிடித்தாரா? கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்திற்கான காரணம் என்ன ? போன்றவற்றுக்கான பதில் தான் படம்.

எல்லா நகைச்சுவை நடிகர்களுக்கும் அந்த வட்டத்தைத் தாண்டி குணச்சித்திரம் காட்ட ஒரு வாய்ப்பு வரும் .அப்படி கருணாஸ்க்கு வந்திருக்கும் படம் தான் ‘ஆதார்’ எனலாம்.

கைக்குழந்தையோடு மனைவியை தேடித் பரிதவிப்பது , காவல்நிலையத்தில் மனைவியை மீட்டெடுக்க கெஞ்சுவது, அதிகாரவர்க்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இயலாமை என பல இடங்களில் கருணாஸ் தனது பாத்திரத்தின் மூலம் மனதில் பதிகிறார். அந்தப் பாத்திரம் இன்றைய இந்தியாவின் எளிய மனிதர்களின் குறியீடாகத் தோன்றுகிறது.

இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இவர்களைத்தவிர அருண்பாண்டியன் இனியா, உமா ரியாஸ் என மற்றவர்கள் ஏற்ற பாத்திரங்கள் வழக்கமான சித்தரிப்புகள் தான்.

முதல்பாதியில் கருணாஸ் மனைவியைக் தேடும் பயணமும், இராண்டாம் பாதியில் அதிகாரவர்க்கமானது தான் தப்பித்துக் கொள்வதற்காகச் செய்யும் தந்திரங்களும் தான் திரைக்தை.
இப்படிப்பட்ட படங்களில் காட்சி அழுத்தங்களைப் போலவே வசனங்களிலும் அழுத்தம் தேவை. அது இதில் காணவில்லை.படத்தின் பட்ஜெட் போதாமை சில காட்சிகள் தெரிகிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை ஓரளவு கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம். திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யங்களைக் கூட்டியிருந்தால் ‘ஆதார்’ மேலும் கவனம் பெறக்கூடிய ஒரு படமாக அமைந்திருக்கும்