‘இஞ்சி இடுப்பழகி’ விமர்சனம்

injiiduppalagi-posterகுண்டாக இருப்பவர்கள் சமுதாயத்தில் கேலியாகப் பார்க்கப் படுகிறார்கள். அவர்களது நோக்கில்,பார்வையில் ஒரு கதை சொல்ல நினைத்து உருவாகியுள்ள படம்தான் ‘இஞ்சி இடுப்பழகி’.

அனுஷ்கா தகப்பனில்லாத பெண். வாயைக் கட்டத் தெரியாததால் உடல் எடை கூடி விடுகிறது.  திருமணம் செய்ய  அதுவே தடையாகிப் போகிறது. இதனால் தாய் ஊர்வசி கவலைப்படுகிறார். வருகிற வரன்கள் எல்லாம்  குண்டு அனுஷ்காவைப் பார்த்து விலகி தெறித்து ஓடுகிறார்கள். அவர்களை அனுஷ்கா கோபத்துடன் பேசி அனுப்புகிறார். அப்படி வந்த ஒருவரும்  ஆவணப்பட இயக்குநருமான ஆர்யாவும்கூட திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லைதான், என்றாலும்  ஆர்யா, அனுஷ்கா இருவரும் நட்புடன் இருக்கிறார்கள்.

தன் எடையைக் குறைக்க பிரகாஷ்ராஜ் நடத்தும் சைஸ் ஜீரோ ஜிம்மில் சேர்கிறார் அனுஷ்கா. ஆனால் அங்கே சேர்ந்த தன் தோழி அங்கு எடுத்த தவறான மருந்துகளால் கிட்னி பாதித்து உயிருக்குப் போராடுவது தெரிகிறது. ஆர்யாவை துணைக்கு அழைத்துக்கொண்டு  பிரகாஷ்ராஜுக்கு எதிராகப் போராடுகிறார்.

ஒருகட்டத்தில் அனுஷ்கா ஆர்யாவை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார்.ஆர்யா வேறு ஒரு பெண் சோனல் செனகானைக் காதலிக்கிறார். இதை அறிந்து அனுஷ்கா கொதிக்கிறார்.

ஜீரோ ஜிம் மை எதிர்த்துப் போராட்டத்தில் அனுஷ்கா வென்றாரா?ஆர்யா யாருடன் சேர்கிறார். தோழி காப்பாற்றப் பட்டாரா? என்பதே முடிவு.

அனுஷ்கா  இப்படத்துக்காகத் தன் எடை யைக் கூட்டி உழைத்துள்ளார். இது முழுக்க பெண்ணின் பார்வையில் அனுஷ்காவை முன்னிறுத்தி எழுதப்பட்ட கதை. எனவே அனுஷ்கா மட்டுமே உருவத்திலும் பங்களிப்பிலும் பெரிதாகத் தெரிகிறார். ஆர்யா கௌரவ வேடம் போல வருகிறார். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல தன் பங்கை ச் செய்துள்ளார். ஆதிவ் சேஷ் தணிகலபரணி போன்று நிறைய தெலுங்கு முகங்கள் இருப்பதால் டப்பிங் பட உணர்வு வருகிறது. அனுஷ்காவை மட்டுமே நம்பி மற்றவர்களை கைவிட்டதால் படம் இளைத்து கதை மெலிந்த படமாகி, சதை மெலிந்த இடுப்பழகியாகி விட்டது.