இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

msv-2மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழ்த் திரையிசைக்குப் பொற்காலம்  தந்தவரே! போய்விட்டீரா என்று புலம்புகிறேன்.
அரை நூற்றாண்டு காலமாய்த் தமிழர்களைத் தாலாட்டித் தூங்கவைத்த கலைஞன் இன்று இறுதியாக உறங்கிவிட்டார். அவரது இசை இன்பத்துக்கு விருந்தானது; துன்பத்துக்கு மருந்தானது. அவரது இசை தமிழின் ஒரு வார்த்தையைக்கூட உரசியதில்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜி என்ற இருபெரும் பிம்பங்களைக் கட்டியெழுப்பிய இசைச் சிற்பி. திராவிட இயக்க அரசியலைக் கட்டியெழுப்புவதற்கும் அவரது பாட்டு பயன்பட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வின் எல்லாச் சம்பவத்திலும் அவர் பாடல் புழங்காத இடமில்லை. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை எங்கள் வாழ்வோடு நடந்து வரும் பாடல்கள் மெல்லிசை மன்னர் படைத்தவை.

ஒரு நகைக் கலைஞன் ஆபரணம் செய்வதற்காக சுத்தத் தங்கத்தில் கொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி கர்நாடக இசையில் மேற்கத்திய இசையைப் பொருத்தமாய்க் கலந்து புதுமை செய்தவர். அவர் தொடாத ராகமில்லை; தொட்டுத் தொடங்காத பாடலில்லை.

கடந்தவாரம் மருத்துவமனையில் அவரது கடைசிப் படுக்கையில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தேன். அவரது வலதுகை விரல்களை வருடிக்கொண்டே இந்த விரல்கள்தானே ஆர்மோனியத்திலிருந்து அமிர்தம் பொழிந்த விரல்கள் – காற்றுமண்டலத்தையே கட்டியாண்ட விரல்கள் – நீங்கள் தொட்ட உயரத்தை யாரும் தொடமுடியாது. பலதலைமுறைகளுக்கு நீங்கள் நினைக்கப்படுவீர்கள் என்று    உரத்த குரலில் சொன்னேன். அவரது ஒரு கண்ணின் ஓரத்தில் ஒரு கண்ணீர் முத்து திரண்டு விழுந்து உடைந்தது. அதுதான் அவரை நான் கடைசியாய்ப் பார்த்தது.

பதி பக்தி – மகாதேவி – பாசமலர் – பாலும் பழமும் – பாவமன்னிப்பு – கர்ணன் – ஆயிரத்தில் ஒருவன் – ஆனந்த ஜோதி – சந்திரோதயம் – உலகம் சுற்றும் வாலிபன் – அபூர்வ ராகங்கள் என்று பலநூறு படங்களின் பாடல்கள் காலமெல்லாம் அவர் பெருமை பேசும்.

அவர் இசையமைத்த ‘நீராருங் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்து அவர் புகழைத் தாங்கிப்பிடிக்கும்.

“விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே”
–    என்ற பாடல்தான் நான் எழுதிக் கடைசியாய் அவர் பாடிய பாடல்.
ஒரு சகாப்தத்திற்கு எப்படி விடை கொடுப்பது? நெஞ்சு விம்முகிறது. காற்றுள்ள வரையில் அவர் கானங்கள் வாழும்.

“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை எம்.எஸ்.வி”
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.