இன்று தகுதியில்லாத விமர்சகர்கள்  வந்துவிட்டார்கள்: இயக்குநர் வேதனை!

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ்  பெற்றுக் கொண்டார். 

இந்நூலை  பத்திரிகையாளர்  அருள்செல்வன் தொகுத்துள்ளார்.

விழாவில்பத்திரிகையாளரும் இயக்குநருமான த.செ.ஞானவேல் பேசும் போது தகுதியில்லாத விமர்சகர்கள் பற்றிக் கவலையை வெளியிட்டார். அவர் பேசும் போது, 

நான் எம்.ஜி.வல்லபன் அவர்களைப் பார்த்தது கிடையாது. இந் நூலைப் படித்தே அவரைப்பற்றி முழுதும் அறிந்து கொண்டேன். ‘சகலகலா வல்லபன்’ நூல் எனக்கு ஒரு முழுமையான பத்திரிகையாளரை அறிமுகப்படுத்தி இருக்கிறது . வாழ்தலுக்கும் பிழைத்தலுக்கும் வித்தியாசம் உண்டு. அந்த வகையில் எம்.ஜி.வல்லபன் வாழ்வாங்கு வாழ்ந்தவர். 

பத்திரிகை என்பது எப்போதும் எதிர்க்கட்சி மனநிலை உடையது. தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுதான் பத்திரிகை தர்மம். மக்களுக்கான சமூகத்திற்கான மேம்பாட்டு விஷயங்களுக்காகத் தன் குரலை ஓங்கி ஒலிக்கும் பணியை பத்திரிகை எந்த நேரத்திலும் நிறுத்தக் கூடாது.

இன்று பத்திரிகைகளை  இருமுனைக்கத்தி குத்திக் கிழிக்கிறது . ஒருபக்கம். விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் முற்றாக சமூகத்தில் ஒழிந்து விட்டது.

இன்னொரு புறம் விமர்சனம் எழுத எந்தத் தகுதியும்  இருக்க வேண்டாம்  என்கிற நிலை.

எம்.ஜி.வல்லபன் காலம் பொன்னான காலம் .அந்த எண்பதுகள் பத்திரிகை சுதந்திரத்தின் பொற்காலமாக இருந்திருக்கும் .

எழுத்தில் நேர்த்தியாக இருந்ததுடன் வாசகனை மேம்படுத்தவும் வேண்டும் என்று அவர் இருந்திருக்கிறார்.

இந்த நூல் இளம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய நூல் என்பேன். வெறும் பேட்டி எடுப்பதும் புகழ்வதும் திட்டுவதும் மட்டுமே பத்திரிகையாளனின் வேலையல்ல. நல்ல விஷயத்தை அறிமுகப் படுத்துவதும் சமூகத்துக்குக் தேவையான கடமை.

அப்படிக் கடமையாற்றிய வல்லபன்  போன்றோரின் நினைவுகள் போற்றப்பட வேண்டும்.” என்றார்