‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ விமர்சனம்

நடிகர் சூர்யா தயாரிப்பில் புதுமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் மிதுன் மாணிக்கம் ,ரம்யா பாண்டியன் வாணிபோஜன்,வடிவேல் முருகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. 

திருமணத்துச் சீராக வழங்கப்படும் வெள்ளையன் கருப்பன் என்ற இரண்டு காளை மாடுகளை மிதுனும், ரம்யா பாண்டியனும் குழந்தை போல பாவித்து வளர்த்து வருகின்றனர்.ஒரு நாள் அவை காணாமல் போகின்றன.
காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க நினைக்கிறார் மிதுன். ஆனால் பலனில்லை .

உயிருக்கு உயிராகக் குழந்தைகள் மாதிரி வளர்த்த மாடுகளை அவர் தேடிக் கண்டிபித்தாரா, இல்லையா, அந்த மாடுகள் காணாமல் போனது ஏன், எப்படிக் காணாமல் போனது, மாடுகள் தொலைந்ததால் அந்த ஊர் எப்படி மாறுகிறது என்பதே ‘இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாலும்’ திரைக்கதை.


காளை மாடுகளைத் தேடி தொடங்கும் பயணத்தில் ஏழை விவசாயிகளுக்கு போலியாக வழங்கப்படும் நலத்திட்டங்கள், நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களின் பெயரால் நடத்தப்படும் ஊழல் என பல்வேறு சமூக அவலங்களை சமரசமின்றி கேலி செய்கிறது இந்த திரைப்படம்.


இப்படிக் கதை சொன்னால் சாதாரணமாகத் தெரியலாம் ஆனால் இப்படி ஒரு நூலிழை கதையை எடுத்துக்கொண்டு விரிவுபடுத்தி கிராமம் ,கிராமத்து மக்களின் அறியாமை, அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகம் , ஏமாற்றும் அதிகாரிகள், மீடியா உலகின் பசி, பிரச்சினையில் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள், ரேஷன் கடை பஞ்சாயத்து ,வாக்களிக்கும் மக்களைச் சூறையாடும் மனோபாவம்,  நாட்டு நடப்பில் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசுகிறது இந்தப் படம்.

கிராமங்களில் எளிய மக்கள் வாழ்க்கைமுறையை அப்படியே பதிவு செய்ய முயற்சித்து உள்ள இந்தத் திரைப்படம் சமகால அரசியல் தலைவர்கள் பலரையும் பகடி செய்கிறது.

குறைந்த செலவில் எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு புதிய முயற்சியாக இந்த திரைப்படத்தை கொண்டாடலாம்.

 ‘ இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் நமக்கு ஒரு விடிவு இல்லை என்று கூற வைக்கும் படியான கதையமைப்பு.
இப்படத்திற்கான பின்புல நிலக் காட்சிகளும் நடிகர்களின் நடிப்பும் இசையும் வசனங்களும் இது கரகாட்டக்காரன் போன்ற கிராமத்துப் படம் அல்ல .விழிப்புணர்வூட்டும் ஒரு சமகால கிராமத்துப் படம் என்று உரத்துச் சொல்கிறது.இப்படத்தைப் பார்ப்பவர்கள் எதிர்பாராத திரை அனுபவத்தைச் சந்திப்பார்கள் என்பது நிச்சயம் . இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள்..