’இரும்புத்திரை’ விமர்சனம்

  

டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு பக்கத்தை உறித்துக் காட்டியிருக்கிறது இந்த ‘இரும்புத்திரை’.

ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியான விஷால், பெண் ஒருவரிடம் அடாவடியாக பேசும் வங்கி ஊழியர் ஒருவரை அடித்து துவைத்தெடுக்கிறார். இதனால் அவர் மீது ராணுவ துறையிடம் புகார் அளிக்கப்படுகிறது. இதையடுத்து மனநல மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கூற, அதன்படி மனநல மருத்துவர் சமந்தாவை விஷால் சந்திக்கிறார். ஆரம்பத்தில் சமந்தா மீது கோபப்படும் விஷால், பிறகு நட்பாக பழகி, அப்படியே தனது காதலை மறைமுகமாகவும் சொல்லிவிடுகிறார். இதற்கிடையே தனது தங்கையின் திருமணத்திற்காக நிலத்தை விற்று நான்கு லட்சம் ரூபாயை தனது அப்பா அக்கவுண்டில் போடுபவர், மீதி பணத்திற்காக வங்கியில் லோன் வாங்க முயற்சிக்கிறார்.

ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு லோன் கொடுக்க வங்கிகள் மறுக்க, தனது அப்பா பெயரில் லோன் வாங்க முயற்சிக்கும் விஷாலுக்கு அங்கேயும் தோல்வி தான் மிஞ்சுகிறது. பணம் கிடைத்தால் தான் தங்கையின் திருமணம் நடைபெறும் என்ற சூழலில், ஒரு ஏஜெண்டின் அறிவுரைப்படி, பொய் சொல்லி வியாபாரம் செய்வது போல காட்டி, பிஸ்னஸ் லோனை தனது அப்பா பெயரில் வாங்கும் விஷால், அந்த பணத்தையும், நிலம் விற்ற பணத்தோடு சேர்த்து மொத்தம் 10 லட்சம் ரூபாயை தனது அப்பா அக்கவுண்டில் போட்டு வைக்க, திடீரென்று அந்த பணம் அக்கவுண்டில் இருந்து காணாமல் போகிறது. வங்கியில் சென்று விசாரித்தால், நீங்கள் தான் ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்திருக்கிறீர்கள், என்று கூறி ஸ்டேட்மெண்டை கொடுக்கிறார்கள். லோன் வாங்கி கொடுத்த ஏஜெண்டைப் பார்த்தால், அவர் இருந்த இடமும் காலியாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல், சமந்தா மூலம், போலீஸ் உயர் அதிகாரியிடம் விஷால் உதவி கேட்கிறார். ஆனால், அவரோ போலியான டாக்குமெண்ட்களை தயார் செய்து வங்கியில் கடன் வாங்கியதற்காக உன்னை தான் முதலில் கைது செய்ய வேண்டும், என்று விஷாலையே கழுவி ஊத்துகிறார்.

 

ராணுவ பயிற்சி அதிகாரியாக ஆரம்பத்தில் அதிரடிக்காட்டும் விஷால், இழந்த பணத்தை திரும்ப பெருவதற்காக, சில காட்சிகளிலேயே டிஜிட்டல் திருடணை நெருங்கினாலும், உட்கார்ந்த இடத்தில் இருந்தே, விஷாலை திணறடிக்கும் அர்ஜுனின் ஆரம்பமே மிரட்டலாக இருக்கிறது.தனது ஒயிட் டெவில் என்ற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, மிரட்டலான அதே சமயம ஸ்டைலிஷான வில்லனாகவும் ஜொலிக்கிறார்.

டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்படும் இளைஞரின் தற்கொலை, அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரியிடம் மோசடி, என்று ஆரம்பத்திலேயே டிஜிட்டல் சேவையை பயன்படுத்துவதற்கு பின்னால் எப்படிப்பட்ட ஆபத்துகள் இருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே காட்டி நம்மை பயத்தோடு படத்திற்குள் இழுத்துவிடும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், அதில் இருந்து நமது கவனம் சிதறாத வகையில் திரைக்கதையை நகர்த்தி செல்கிறார். 

விறுவிறுப்பாக படம் நகரும் போது, காதல் காட்சிகள் மூலம் ரசிகர்களை கடுப்பேற்றுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அந்த காதல் காட்சிகளையும் ரசிக்கும்படி ஷாட் அண்ட் ஸ்வீட்டாக காட்டும் இயக்குநர் மித்ரன், ரோபோ ஷங்கரையும் மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

விஷால் ஹீரோ என்றால் அர்ஜூனும் இப்படத்தின் ஹீரோ தான், என்பது போல தனது காட்சி ஒவ்வொன்றிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அர்ஜுன், இறுதியில் தனது அதிரடி ஆக்‌ஷனிலும் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் படம் முழுவதுமே ஒரே வண்ணத்தை பயன்படுத்தி மூட் கிரியேட் பண்ணியிருப்பதோடு, சென்னையில் மக்கள் நிறைந்த இடங்களில் தனது கேமராவை சுழல வைத்து வித்தை காட்டியிருக்கிறார். பின்னணி இசை மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, பாடல்களையும் திரைக்கதைக்கு ஏற்பவே கொடுத்திருக்கிறார்.

படிப்பறிவு இல்லாதவர்கள் கூட ஏடிஎம், ஸ்மார்ட்போன் போன்ற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துகிறார்கள், என்பது பெருமையாக இருந்தாலும், அதன் மறுபக்கத்தில் நடக்கும் மோசடிகள் குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆதார் கார்ட் என்ற ஒன்றின் மூலம் நமது தகவல்கள் மற்றவர்களுக்கு எப்படி சர்வசாதாரணமாக கிடைக்கிறது, அந்த தகவல்கள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும், என்று அவர் சொல்லியிருக்கும் விஷயங்களும், அதை சொல்லிய விதமும், டிஜிட்டல் சேவையை பயன்படுத்தும் அனைவருக்கும் நிச்சயம் பயத்தைக் கொடுக்கும்.

 

மொத்தத்தில், இந்த ‘இரும்புத்திரை’ டிஜிட்டல் உலகில் இருக்கும் விபரீதத்தை மட்டும் சொல்லாமல், அதில் இருந்து நம்மை காத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் படமாக உள்ளது.

Pin It

Comments are closed.