இறுதி கட்ட படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் “மாயவன்”

cvk4அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் சி.வி. குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருபவர்.

அட்டக்கத்தி மூலம் இவர் அறிமுகப்படுத்திய ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் இன்று சூப்பர் ஸ்டாரின் கபாலியில் பணியாற்றுவது இவர் தேர்ந்தெடுப்பவர்களின் திறமைக்கு சிறந்த சான்று. தனது ஒவ்வொரு படத்திற்க்குமான திரைக்கதை சிறப்பாக தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளரான C.V.குமார், அவரே ஒரு படத்தினை இயக்குகிறார் என்றால், அதன் திரைக்கதை எப்படியிருக்கும் என அனைவருக்கும் ஆவல் மேலோங்கியுள்ளது.

சந்தீப் கிஷன் மற்றும் லாவண்யா திரிபாதி நடிப்பில் உருவாகி வரும் “மாயவன்” படத்தினை இயக்கி வரும் C.V.குமார் தனது இயக்குநர் அனுபவத்தை பற்றி கூறுகையில் “முதலில் இப்படத்தின் கதை உருவான பின் நலன் குமாரசாமியை அழைத்து இதை இயக்கி தர சொன்னேன். கதையினை படித்தவர் நன்றாக இருப்பதாகவும் தான் திரைகதையினை மேற்கொள்வதாகவும் என்னை இயக்கும்படியும் கூறினார். எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்ற நம்பிக்கையை அளித்தனர்.

அதன் பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. இப்படத்தின் கதாநாயகனாக யாருடா மகேஷ் படத்தில் தமிழில் அறிமுகமான சந்தீப் கிஷனும், ப்ரம்மன் படத்தில் நாயகியாக நடித்த லாவண்யா திரிபாதியும் நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை க்ரைம் த்ரில்லர் பின்னணியில் அமைத்திருக்கிறோம்.

படம் நாங்கள் நினைத்தவாறு சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு இது வரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குநரை வேலை வாங்குவதற்க்கும், இயக்குநராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது.

இப்படத்தினை நான் இயக்குகிறேன் என கூறியவுடன் தான் தயாரிப்பதாக ஞானவேல்ராஜா முன் வந்தார். அவரின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து எங்கள் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. இத்தருணத்தில் இது வரை எங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஞானவேல்ராஜா மற்றும் அபினேஷ் இளங்கோவன் ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.