இளையராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை : ‘கடம்’ கார்த்திக்!

    

இளையராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை ‘கடம்’ கார்த்திக்கின் 30 ஆண்டு இசைப்பயணம்!இசைக்கருவிகள் வாசிப்பதில் தனக்கென தனிப்பெயர் பெற்ற இசை ஆளுமைகளில் பெரும் புகழ் பெற்றவர் .’கடம்’ கார்த்திக். கேட்போரைக் கவர்ந்திழுக்கும் லய வாத்தியமான கடத்தில் தனது கற்பனை திறத்தாலும், லய ஞானத்தாலும், தனித்துவமான வாசிப்பாலும் வசீகரிக்கும் தோற்றத்தாலும் இன்றைய தலைமுறை கலைஞர்களுள் மிக சிறந்தவராகத் திகழ்கிறவர் முனைவர் ‘கடம்’ கார்த்திக்.

இவர் கல்வித்துறையில் ஸம்ஸ்கிருதத்தில், விவேகானந்தா கல்லூரி மூலம் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர். சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் இந்திய இசையில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளவர்.

இவர் கர்நாடக இசையின் மிகச்சிறந்த முன்னணி கலைஞர்களுடன் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவரது குருநாதர்கள் ‘பத்மபூஷன்’ ‘கலைமாமணி’ ‘ஸங்கீத கலாச்சாயா’ திரு. ‘விக்கு’ வினாயக்ராம் மற்றும் ‘கலைமாமணி’ திரு.டி.எச்.சுபாஷ் சந்திரன் ஆகியோர் ஆவர்.’கடம்’ கார்த்திக். சென்னை அகில இந்திய வானொலி மற்றும் தொலைகாட்சியில் முன்னணியில் முதலிடம் பெற்ற ‘ஏ -டாப்’ கலைஞராகத் திகழ்கிறார்.

இவர் இசைக்காக உலகளாவிய பயணம் மேற்கொண்டவர்.இந்தியாவிலிருந்து தொடங்கி தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, நார்வே, பஹ்ரேன், துபாய், கத்தார், மஸ்கட், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய உலக நாடுகள் யாவற்றிலும் கச்சேரிகள் செய்து அங்குள்ள ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘ஸமஸ்(க்)ரிதம்’ ஆகிய இசை குழுக்களை சிறப்பாக நடத்தி வருகிறார் ‘கடம்’ கார்த்திக். ஒரு தலை சிறந்த இசையமைப்பாளராகப் பல்வேறு இசை வடிவங்களை உருவாக்கியுள்ளார்.

தில்லானாக்கள், கிருதிகள். வர்ணங்கள், ராகமாலிகைகள், வாத்தியவடிவங்கள், இசைக்கலவைகள், பக்திப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் ,நாட்டிய நாடகங்கள் என பலவும் புனைந்து படைத்துள்ளார்.

பல்வேறு ஜகல்பந்திகள் மற்றும் ப்யூஷன் நிகழ்ச்சிகளில் இவர் வாசித்துள்ளார் .திரையிசையிலும் மதிப்பு பெற்ற இளையராஜா, ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் உலகில் பல மாணவர்களுக்கு இசையைக் கற்றுகொடுத்துள்ளார்.இசையின் பன்முக வடிவ கோணங்களிலும் பல்வேறு விதமான தலைப்புகளிலும் உலகம் முழுவதும் விரிவுரையாற்றியுள்ளார்.

இவரைப் பலப்பல விருதுகளும் பட்டங்களும், சிறப்புகளும் நாடி வந்துள்ளன. சங்கீத நாடக அகாடெமியின் ‘உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார்’ பெற்ற முதல் கடம் கலைஞர் இவரே.

காஞ்சி மற்றும் ஸகடபுரம் மடங்களின் ஆஸ்தான வித்வானாக அங்கீகரிக்கப் பட்டுள்ளார். ‘கடநாதமணி’, ‘சங்கீத கலாபாரதி’. ‘ஷண்முக சிரோமணி, ‘லயகலா விபஞ்சி,. ‘நாதகலா நிபுணா’ போன்ற பலப்பல பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவர் கண்தானம், இரத்ததானம் போன்ற பலவித மனிதநேய செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நற்காரியங்கள் செய்து வருகிறார். இவரே 65 முறை ரத்ததானம் செய்துள்ளார். பல சேவை அமைப்புகளுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் செய்தும் உதவியுள்ளார்.

பல்வேறு ஆன்மீக குருமார்கள், இசை மேதைகள், இசை ஜாம்பவான்கள்,இசை நட்சத்திரங்கள்,இசை விமர்சகர்கள் என யாவரும் கார்திக்கின் இசைப் புலமையை மதித்தும் அங்கீகரித்தும் பாராட்டியும் உள்ளார்கள்.

இவை யாவும் பாமரர்களின் இதயத்திலும் ரசிகர்கள் உள்ளத்திலும் பண்டிதர்கள் சிந்தையிலும் ஓர் உயர்ந்த, உன்னத ஸ்தானத்தை இவருக்கு அளித்துள்ளன.

இவரது படைப்பாக ‘பூரணகும்பம்’ என்கிற இசை ஆல்பம் உருவாகி மிளிர்ந்துள்ளது.

இந்தப் ‘பூரணகும்ப’த்தில் தனது முப்பதாண்டுகால இசைஅனுபவத்தையும் ,தன் இசையுணர்வின் செழுமையையும் வழியவழிய ஊற்றி நிரப்பியிருக்கிறார். இதில் கர்நாடக இசை, பக்தி, ஜாஸ், கலப்பிசை, மெல்லிசை, கஜல், தில்லானா போன்ற 30 ரகத்திலான இசை வகைமைகளை ரசிக்க ருசிக்க வழங்கியுள்ளார்.

இந்த ஆல்பத்தை கார்த்திக்கே தயாரித்தும் இருக்கிறார்.

இந்த ஆல்பத்தில் ஷரத், எஸ்.பி.ராம் ,மதுபால கிருஷ்ணன், பாலக்காடு ஸ்ரீராம், அபிஷேக் ரகுராம், குன்னக்குடி பால முரளிகிருஷ்ணா, ஸ்ரீராம் பார்த்தசாரதி, பரத் சுந்தர், விக்னேஷ் ஈஸ்வர், டாக்டர் நாராயணன், ஜி.ஸ்ரீகாந்த், மகேஷ் விநாயக்ராம், அமுதா வெங்கடேஷ், அக்கரை சகோதரிகள் ,டாக்டர் பேபி ஸ்ரீராம், ஸ்ரேயாஸ் நாராயணன். ராதா பத்ரி, அனன்யா அசோக், ஆர்.பி.ஷர்வன், சிக்கில் குருசரண் போன்றோர் பாடியுள்ளனர்.

புகழ்பெற்ற வீணை பவானி பிரசாத், நாதஸ்வரம் பாலசுப்ரமணியம், மிருதங்கம் விஜயராகவன்,என்.ராமகிருஷ்ணன், தபலா கணபதி, மாண்டலின் யூ பி.ராஜு,. புல்லாங்குழல் பாலக்காடு ஸ்ரீராம், மிருதங்கம் பிரபஞ்சம் ரவீந்திரன், மோர்சிங் ராமன், தபலா சுந்தர், தவில் சேகர், ஹேண்ட் சோனிக் சர்வேஷ் கார்த்திக் எனப் பலரும் தங்களது இசைக்கருவிகள் மூலம் பங்களிப்பைச் செய்து ஆல்பத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்..

பாலக்காடு கே.எல். ஸ்ரீராம் இந்த ஆல்பத்துக்கு ஆர்க்கெஸ்ட்ரா இசைக் கோர்ப்பு செய்துள்ளார்.கார்த்திக் இசையில் பன்முகம் கொண்டவர். ஓர் இசையமைப்பாளராக இசை நிகழ்ச்சி நடத்துநராக வியக்கத்தக்க வகையில் திறமைகளை வெளிப்படுத்திய ஓர் ஆளுமை எனலாம்.

இசை மொழியை வெளிப்படுத்தும் இவரது தனித்திறன் அபாரமானது. ஸ்வர அட்சரப் பொருத்தங்களில் மேதைமை கொண்டவர். இவரது லயக் கணக்குகளும் பொருத்தமான ஒத்திசைவுகளும் இவரது படைப்புகளின் தனி முத்திரைகளாகும். அப்படிப்பட்ட பிரபல கடம் இசைக் கலைஞர் ‘கடம்’ கார்த்திக் இசைத்துறையில் 30 ஆண்டுகளாக பரந்துபட்ட , பண்பட்ட அனுபவம் கொண்டவர் .

‘கடம் ‘கார்த்திக் அவர்களின் இசைப் பயணத்தின் 30 ஆண்டுகள் பெருமையைக் கொண்டாடும் விதத்தில் “வே-தாளம் : 30 ஒலி ஆண்டுகள் ” ( Way-Thalam : 30 Sound Years ) என்கிற விழா 23.11.2017 வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் ரசிகரஞ்சனசபாவில் ( முகவரி :30/1 , சுந்தரேஸ்வரர் தெரு , சிவ ஸ்வாமி பள்ளி அருகில் , மயிலாப்பூர் ,சென்னை 600 004.) நடைபெற்றறது.

விழாவில் ‘ பூர்ண கும்பம் ‘ இசைஆல்பம் ஆன்லைன் தொடக்க விழாவும்
கும்பம் , கலசம் , கடாட்சம் என்கிற குறுந்தகடுகள் வெளியீடும் நடைபெற்றன .

சிறப்பு விருந்தினர் பத்மபூஷன் குருஸ்ரீ டி.எச் .விக்கு விநாயக்ராம் அவர்களால் ‘ பூர்ண கும்பம் ஆல்பம்’ ஆன்லைன் அறிமுகம் நடை பெற்றது. கும்பம் , கலசம் , கடாட்சம் என்கிற குறுந்தகடுகள் வெளியீடும் நடைபெற்றது. இவற்றை குருஸ்ரீ டி.எச் .விக்கு விநாயக்ராம் வெளியிட இசையமைப்பாளர்கள் சி.சத்யா , ஷான் ரோல்டன் , பாடகர் சித் ஸ்ரீராம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கார்த்திக்கின் குருக்களான இசை மேதைகள் டி.எச்.சுபாஷ் சந்திரன் . பேராசிரியர் டாக்டர் எஸ்.ராம ரத்னம் பேராசிரியர் வா.வே.சு ஆகியோர் குரு மரியாதை செய்து கெளரவிக்கப் பட்டனர் அவர்கள் தங்கள் மாணவருக்கு ஆசிகள் வழங்கினர்.

இவ்விழாவில் கர்நாடக இசையுலக ஆளுமைகள் பலரும் கலந்து கொண்டு கடம் கார்த்திக்கை வாழ்த்தினர்.நிறைவாக கடம் கார்த்திக் நன்றியுரையாற்றினார் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருமதி அஞ்சனா கார்த்திக் செய்திருந்தார்.

 

Pin It

Comments are closed.