‘இவன் தந்திரன் ‘ விமர்சனம்

ivanthanthiran4கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். பலவிருதுகளைக் குவித்த கன்னட படமான ‘யூ டர்ன்’ நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் ஆறாவது படமாக இதை இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.கண்ணன்,எம்.கே.ராம்பிரசாத்துடன் இணைந்து தயாரித்தும் உள்ளார்.

அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் அப்பாவிகள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதே கதை.

பொறியியல் படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டவர்கள் கெளதமும், அவருடைய உயிர் நண்பன் ஆர்.ஜே.பாலாஜியும். படிப்பை கைவிட்டாலும் படிப்பில் கற்ற வித்தை  அவர்களைக் கைவிடவில்லை. துறை சார்ந்த தொழில் நுட்ப அறிவும் நிரம்பவே இருக்கிறது இந்த இளைஞர்களுக்கு.

ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இவரிடத்தில் லேப்டாப் வாங்கிய நாயகி ஷ்ரத்தா அது வேலை செய்யாததால் கொடுத்த காசை திருப்பித் தரும்படியும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். ஆனால் தராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் கெளதம்.

இந்த நேரத்தில் தமிழகம் முழுவதிலும் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் தரம் குறைவாக இருப்பதாகவும், கட்டமைப்பற்ற அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி இழுத்து மூடும்படி உத்தரவிடுகிறார் மத்திய அரசின்  மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தேவராஜ் என்னும் சூப்பர் சுப்பராயன். ஆனால் உண்மையில் சுப்பராயன் இப்படியொரு உத்தரவை போட்டுவிட்டு மறைமுகமாக கல்லூரியின் உரிமையாளர்களிடத்தில் கல்லூரியைத் திறக்க லஞ்சம் வாங்கிக் குவிக்கிறார்.

இந்த நேரத்தில் அமைச்சர் சுப்பராயனின் வீட்டில் சிசிடிவி கேமிராவை பொருத்தும் பணியில் ஈடுபடுகிறார் கெளதம். அதற்கான தொகையான 23000 ரூபாயை அமைச்சரின் மைத்துனர் சில்வாவிடம் கேட்கிறார் கெளதம். இழுத்தடித்து  ஏமாற்றுகிறார் சில்வா. இதனால் நேரடியாக அமைச்சரிடமே சென்று புகார் சொல்கிறார்கள் இருவரும். இது சில்வாவுக்கு தெரிய வர அவர்களை அழைத்து அவமானப்படுத்தியதுடன் அவர்களுடைய பைக்கையும் ஆள் வைத்து தூக்கிச் செல்கிறார் சில்வா.

கல்லூரிகளிடம் அமைச்சர் வாங்கும் லஞ்சப் பணம் கெளதமுக்குத் தெரிய வருகிறது.அது அவர் மனதைக் குடைகிறது. அமைச்சர் செய்யும் மோசடிகளை வெளிக்கொணர முடிவெடுக்கிறார் கெளதம்.

பணம் அமைச்சருக்கு லஞ்சமாக செல்வதை ,தான் கண்டுபிடித்த ஈ கேமிரா மூலமாக படம் பிடிக்கிறார். இந்த வீடியோவில் அமைச்சரின் மைத்துனரான சில்வா சிக்கிக் கொள்கிறார். கெளதம், இதனை யூ டியூபில் போஸ்ட் செய்ய அது வைரலாகப் பரவி இந்தியாவே பற்றிக் கொள்கிறது.

அமைச்சருக்கு பதவி பறி போகிறது. சில்வாவுக்கும், அமைச்சருக்குமான நட்பு உடைகிறது.  விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது.

ஆத்திரமடையும் அமைச்சர் சுப்பராயன் இந்தச் செயலை செய்தது யார் என்பதை கண்டறியும் வேலையில் இறங்குகிறார்.  கௌதம் அவரிடம்  வசமாகச் சிக்கிக் கொள்கிறார்.அப்போதுதான் இவன்  தந்திரன் எனக்காட்டுகிறார்.

முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதையின் பயணம்.

ivanகெளதமுக்கு ‘ஏற்ற கேரக்டர். அதுவும் ரிச்சி தெருவில் கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞன் எப்படியிருப்பானோ அது போலவே காட்சியளித்திருக்கிறார்.  படத்தில் மாணவர்களின் பிரதிநிதியாய் இவர் எழுப்பும் அனைத்து வினாக்களுக்கும் தியேட்டரில் கை தட்டல்களை அள்ளும்.

முதலில் இருந்து கடைசிவரையிலும் ஒரு துடிப்பான இளைஞனாக, உழைத்த பணத்தை திரும்ப வாங்கியே ஆக வேண்டும் என்கிற கொள்கை பிடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் கெளதம்.

இவருக்கு படத்தின் கடைசிவரையிலும் தோள் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி . அவ்வப்போது வசனங்களில் எள்ளல்களை ,கேலிகளை அனாயாசமாக அள்ளித் தெளிக்கிறார்

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் முதல் அறிமுகம். அழகு முகம்.அழுத்தமான அறிமுகம்தான்.
அச்சு அசலாக ஒரு அயோக்கிய அரசியல்வியாதியை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் அமைச்சர் தேவராஜாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன்.

மற்றபாத்திரங்களில் வரும் பலரையும் மிக அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவும், செல்வாவின் படத்தொகுப்பும் இயக்குநருக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். இரவு நேரக் காட்சிகளையும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் ஒரு பிரேம்கூட தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதற்கான சண்டைப் பயிற்சியாளரையும் இந்த நேரத்தில் பாராட்டலாம்.

தமனின் இசையில் இரண்டு பாடல்களும் கேட்கும் ரகம் என்றாலும் பின்னணி இசையை அடக்கி வாசித்து ,வசனங்களையும், காட்சிகளையும் நன்கு ரசிக்க உதவியுள்ளார்.

கல்விக்கட்டணக்கொள்ளையை,அதன் கொடுமையைத்தான் படத்தில் பல இடங்களில் வசனமாகவும், காட்சிகளாகவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஒட்டு மொத்தமாய் ஒரு திரைப்படமாய் இரண்டே கால் மணி நேரத்தில் நமது நாட்டு நடப்பைப்பற்றி ப் புத்தியில் ஏற்றுகிறது இப்படம்.

எல்லாவகையிலும் நல்லா அமைந்த படம்தான் ‘இவன் தந்திரன் ‘.

Pin It

Comments are closed.