‘உடன்பிறப்பே’ விமர்சனம்

ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி இருக்கும் ‘உடன்பிறப்பே’  ஓடிடி அமேசான் ஒரிஜினல் தளத்தில் இன்று வெளியாகிறது.சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, வேல ராமமூர்த்தி ,தீபா ,ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இரா. சரவணன் இயக்கியுள்ளார்.அண்ணன் தங்கை பாசத்தை வைத்து ‘பாசமலர்’ தொடங்கி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. இந்த சைபர் யுகத்தில் அந்தப் பாசத்தை வைத்து உருவாகி இருக்கும் படம் இது.


சசிகுமார் தடி எடுத்தவன் தண்டல்காரன் போல் நியாயம் நீதிக்கு தட்டிக்கேட்கும் ஒரு முரட்டு ஆசாமியாக வாழ்ந்து வருகிறார் .அவரது ஹீரோயிசத்தை அவரது தங்கை ஜோதிகாவின் மகன் வியக்கிறான்.தன் மாமனைப் போல் அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் ஆளாக வர விரும்புகிறான் .இது ஜோதிகாவின்  கணவர் ஆசிரியர் சமுத்திரக்கனிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சிறுவனாக இருக்கும்போதே இன்னொரு சிறுவனைத் தட்டிக்கேட்க போய் கிணற்றில் விழுந்து இறந்து விடுகிறான் அந்தச் சிறுவன். இதனால் ஜோதிகா, சமுத்திரக்கனி குடும்பத்திற்கும் சசிகுமார் குடும்பத்திற்கும் பகை.  சமுத்திரக்கனி சசிகுமாரால்தான் தன் மகனை பறிகொடுத்தோமென்று சகவாசமே வேண்டாம் என்றிருக்கிறார். சசிகுமாரால் கவரப்பட்டதுதான் தன் மகன் திசைமாறி இறக்கக் காரணம் என்று நம்புகிறார். இரு குடும்பத்திற்கும் இடைவெளி விழுகிறது.
நீதி நியாயம் சட்டம் என்று பேசும் ஆசிரியராக சமுத்திரக்கனி வருகிறார். ஒரு கட்டத்தில் 15 ஆண்டுகள் முடிந்து சமுத்திரக்கனி  ஜோதிகாவின் பெண்ணை சசிகுமாரின் மகனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார்கள். நீண்ட தயக்கத்துக்குப் பின்புதான் சமுத்திரக்கனி  ஒப்புக்கொள்கிறார்.அந்த நேரத்தில் சமுத்திரக்கனி மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாக்கப்படுகிறாள்.  ஊரெல்லாம் வம்பு இழுத்து வளர்த்து வைத்திருக்கும் சசிகுமாரால் தான்  தன் மகளுக்கு இப்படி நேர்ந்தது என்று நினைக்கிறார். ஆனால் அதன் பின்னே உள்ள சதிகள் என்ன? என்று அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன.  அண்ணனுக்கு நேரும்பழியைத் துடைக்க தங்கை செய்யும் தியாகமும் தங்கைக்காக அண்ணன் செய்யும் தியாகமும்  என க்ளைமாக்ஸ் நோக்கிப் படம் நகர்கிறது.

படத்தில் ஜோதிகா சசிகுமார் சமுத்திரக்கனி என்ற மூன்று பாத்திரங்கள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. மூவரும் தங்களது நடிப்பை மூன்று விதமாக தனித்தன்மையுடன் வழங்கியிருக்கிறார்கள்.இரா.சரவணன் தங்கை அண்ணன் பாசத்துடன் உலக யதார்த்தம்,  நடப்பு அரசியலையும் ஆங்காங்கே கொஞ்சம் தூவி இருக்கிறார்.
மொத்தத்தில் அனைத்து பெண்களும் விரும்பி ரசிக்கும் ஒரு குடும்பப் படமாக அண்ணன் தங்கை பாசக் கதையாக இது உருவாகி உள்ளது.
 படத்தில் ஜோதிகா பாத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. பிரதான பாத்திரம் ஏற்று நடித்ததுடன் படத்தை சூர்யாவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் ஜோதிகா.வாழ்த்துகள்!