எச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்பைகள் !

ஒரு முறை அண்ணா சொன்னார் தணிக்கை இல்லாத ஒரு படத்தை வெளியிட வாய்ப்பு கொடுத்தால் நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் .அதாவது புரட்சிகரமான சிந்திக்க வைக்கும் கருத்துக்களையும் உண்மைகளையும் சொல்வதற்குத் தணிக்கை ஒரு தடையாக இருக்கிறது கருத்து சுதந்திரம் முழுமையாக வெளிப்படுத்தும்படி ஒரு திரைப்படம் அமைந்தால் மாற்றங்களை சாதிக்க முடியும் என்ற பொருளில் கூறியிருந்தார் .

திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே தணிக்கை உள்ளது. வெப் சீரீஸ்சுக்குத் தணிக்கை இல்லை என்கிற நிலை உள்ளது. இதைப் பயன்படுத்தி வெப் சீரிஸ் என்ற பெயரில் ஆபாசக் குப்பைகளை எடுத்துப் பல்வேறு ஊடக வடிவங்களில் விநியோகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் காசு ஒன்றே குறியாக நினைக்கும் வியாபாரிகள் .இந்த வகையில் தான் ஆட்டோ சங்கர் என்ற வெப் சீரீஸ் உருவாகி பத்திரிகையாளர்களுக்குத் திரையிடப்பட்டது . பத்திரிகையாளர்கள் கொதித்தெழுந்து கேள்வி கேட்டார்கள். ஏனென்றால் இந்த சீரீஸில் ஆபாச வசனங்களுக்காகவே திட்டமிட்டு ரூம் போட்டு யோசித்து காட்சிகளையும் வசனங்களையும் வைத்திருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .

அதே வகையில் திரவம் வெப் சீரீஸ் வருகிறது. இதை அபிராமி ராமநாதன் தயாரித்துள்ளது அடுத்த அதிர்ச்சிகரமான தகவல் . அவருடைய முதல் வெப் சீரிஸ் தயாரிப்பான ‘திரவம்’, ‘ஜீ 5’ இணையதள அப்ப்ளிகேஷனில் வெளியாகியுள்ளது. இந்த படம் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்தவர் சந்திக்கும் இன்னல்களை சொல்லக்கூடிய வெப் சீரிஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்க, பிரசன்னா, இந்துஜா, சுவயம்சதா, அழகம் பெருமாள், சம்பத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை என்னவோ சற்று சுவாரசியமாகத்தான் இருக்கிறது,

ஆனால் நோக்கம்?தவறாக எண்ண வைக்கிறது.

படத்தில் தேவையின்றி திணிக்கப்பட்டிருக்கும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய வசனங்கள்..குமட்ட வைக்கின்றன.

திரைப்படம் என்பது அற்புதமான அறிவியல் ஊடகம். கலை ஊடகம். இந்த ஊடகத்தில் சைக்கிள் கேப்பில் கள்ளச்சாராயம் விற்பதுபோல் வெப் சீரிஸ் மூலம் கல்லா கட்ட முனைகின்றன வியாபார வர்க்கம் .

இவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நடந்து போகும் சாலையில் அசிங்கம் கிடந்தால் அதைத் தாண்டி கடந்து போவது போல இவற்றைக் கண்டு கொள்ளாமல் புறக்கணித்துக் கடந்து செல்ல வேண்டும். என்னதான் என்று மிதித்து யாரும் பார்க்க மாட்டார்கள். அதேபோல் என்னதான் இருக்கிறது என்று வெப் சீரீஸ் உள்ளே சென்று பார்த்து தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ள வேண்டாம் .அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தால் இந்த ஆபாச விஷக் கிருமிகள் வைரஸ் போல் பரவத் தொடங்கிவிடும் என்று எச்சரிக்க வேண்டி இருக்கிறது.

Pin It

Comments are closed.