‘எந்த நேரத்திலும் ‘ விமர்சனம்

பேய்ப்பட சீசன் இன்னமும் முடியவில்லை என நம்பி வந்துள்ள இதுவும் ஒரு பேய்ப்படம்தான்.

நாயகன் இராமகிருஷ்ணன் லீமா பாபுவைத் துரத்தித் துரத்திக் காதலித்து ஒரு வழியாக ஓகே ஆன பின் தன்  காதலி லீமாவை தன் குடும்பத்தினரான அப்பா, அக்கா சான்ட்ரா, அவரது கணவர் யஷ்மித் ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அனைவரும் லீமாவைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன என்று அறியும் முன்பே அக்காவின் கணவர் யஷ்மித் மற்றும் அப்பா கார் விபத்தில் இறந்து விடுகின்றனர். இந்த அதிர்ச்சியில் மீளாத சான்ட்ராவையும் மகள் விஜிதாவையும் மன மாற்றம் தேடி தங்கள் கோத்தகரி பங்களாவிற்கு அழைத்துச் செல்கிறார் தம்பி இராமகிருஷ்ணன்.

அங்கு போனதும்  சான்ட்ரா அமானுஷ்ய சக்தியால் பயமுறுத்தப்படுகிறார்.

லீமா உருவத்தில் உள்ள ஒரு ஆவி சாண்ட்ராவின் குழந்தை மீது புகுந்து கொண்டு அட்டகாசம் செய்கிறது,அவரைக் கொலை செய்ய முயற்சிக்கிறது.

லீமா உருவத்தில் இருக்கும் அந்த ஆவி ஏன் சாண்ட்ராவை கொலை செய்ய முயற்சிக்கிறது?

சான்ட்ராவின் மகள் விஜிதாவும், சான்ட்ராவும், இராமகிருஷ்ணனும் எவ்வாறு இந்த ஆவியிடமிருந்து தப்பித்தார்கள்? இதற்குக் காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

இயல்பான நடிப்பில் ரெக்ஸாக இராமகிருஷ்ணன் வருகிறார். பாரதியாகவும், ஆவியாகவும் இரு வேடங்களில் லீமா பாபு, அக்கா ஜெனிபராக சான்ட்ரா எமி, காமெடி என்கிற பெயரில் சிங்கம்புலி, டேவிட்டாக யஷ்மித்,குழந்தை நட்சத்திரங்கள் விஜிதா, தனஸ்ரீ,மனிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கேற்ற பணி. சபேஷ்-முரளியின் பின்னணி இசை சபாஷ் முரளி எனச் சொல்ல  வைக்கிறது. பி.சதீஷின் பாடல்களின் இசை பரவாயில்லை.,

எழுத்து-இயக்கம்-ஆர்.முத்துக்குமார். ஒரே மாதிரியான தோற்ற ஒற்றுமை கொண்ட இரண்டு பேரை வைத்து வித்தியாச கற்பனையாக ஒரு பேய்ப்படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் .பணக்கார காதலன்- ஏழைக் காதலி குறுக்கே நிற்கும்  பணக்கார குடும்பத்தினர் காதலியைக் கொலை செய்வது ,  ஆவியாக மாறி பழி வாங்கும் காதலி என்ற திரைக்கதை பழகிப்போன பழங்கதைதான் என்றாலும்  செயற்கை பயமுறுத்தலின்றி தேக்கமில்லாதபடி  இயக்கியிருக்கிறார் ஆர்.முத்துக்குமார்.

தவறு செய்தால் யார் மூலமாவது எந்த நேரத்திலும் ஆவி பழி வாங்கும் என்பதுதான் கதை சொல்லும் நீதி.

Pin It

Comments are closed.