‘என்ன சொல்ல போகிறாய்’ விமர்சனம்

திருமணம் பற்றி தங்களுக்கு என ஒரு கருத்தை வைத்துக்கொண்டு இருக்கும் பாத்திரங்கள் வாழ்க்கையில் இணைய முயற்சி செய்யும்போது அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் கதை.

விக்ரம்(அஸ்வின் குமார்) ஒரு ஆர்.ஜே. தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதில் ஒரு முடிவில் இருக்கிறார். ரொமான்டிக் எழுத்தாளரான அஞ்சலியோ(அவந்திகா மிஸ்ரா) ஏற்கனவே காதலித்து தோல்வி அடைந்தவரை தான் காதலிக்க வேண்டும் என்கிற முடிவில் இருப்பவர்.

நாடக கலைஞரான ப்ரீத்தியோ(தேஜு அஸ்வினி) தான் எப்பொழுது காதலிக்க வேண்டும் என்பதை தானே முடிவு செய்வேன் என்று நம்புகிறவர்.

இந்நிலையில் விக்ரமும், அஞ்சலியும் சந்திக்கும்போது அவரின் முந்தைய காதல் பற்றி கேட்கிறார் அஞ்சலி. தான் ப்ரீத்தி எனும் பெண்ணைக் காதலித்து பிரிந்துவிட்டதாக பொய் சொல்கிறார் விக்ரம்.

ப்ரீத்தியைப் பார்க்க வேண்டும் என்று அஞ்சலி சொல்கிறார்.விக்ரமும் அழைத்து வருகிறார். ப்ரீத்தியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரின் தாத்தாவான டெல்லி கணேஷ் நச்சரிக்கிறார். அதில் இருந்து தப்பிக்க தன் காதலராக நடிக்க வேண்டும் என்று விக்ரமிடம் கூறுகிறார் ப்ரீத்தி.உங்கள் காதலிக்கிறார்களா என்பதுதான் முடிவு. அவர்கள் நிஜமாகவே காதலில் விழுவார்கள் என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் தெரியுமே.

படத்தில் பெரிதாக குறை சொல்லமுடியாத நடிப்பை அஸ்வின் வழங்கியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் மட்டும் சிறிய தடுமாற்றம் தெரிகிறது.நாயகிகள் அவந்திகா, தேஜு அஸ்வினி இருவருக்குமே கனமான பாத்திரம். அதைத் தங்களால் இயன்ற அளவுக்கு தாங்க முயற்சி செய்திருக்கிறார்கள்.காட்சிகளை திரைப்படுத்திய விதம் அழகாக இருக்கிறது. ஏற்கனவே தெரிந்த கதை தான் என்றாலும் அதை ஹரிஹரன் இயக்கிய விதம் நன்று.இருப்பினும் இந்த முக்கோணக் காதல் கதையைக் கொஞ்சம் இழுவையாக்கிவிட்டார் இயக்குநர்.

காமெடிக்கு புகழ். நகைச்சுவை எங்கும் எடுபடவில்லை.

தேஜு அஸ்வினியின் தாத்தாவாக வரும் டெல்லி கணேஷ் குறைந்த காட்சிகளே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

முதல் பாதியில் தேஜு அஸ்வினி – அஸ்வின் இடையில் காதல் மலரும் காட்சிகள் என முதல் பாதி முழுவதும் கதாபாத்திர அறிமுகம், கதாபாத்திரங்களுக்கிடையிலான உணர்வுப் போராட்டம் என ஓரளவு நன்றாகவே செல்கிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் முக்கோணக் காதலைக் காட்சிப்படுத்துகிறேன் பேர்வழி என்று பார்ப்பவர்களைப் படுத்தி எடுக்கிறார் இயக்குநர். முதலில் அஸ்வினுடைய கதாபாத்திரக் குழப்பம் சோதிக்கிறது.
இரண்டாம் பாதி முழுக்கவே அவரை ஒரு தடுமாற்றமான ஆளாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன்.

படத்தில் விவேக் – மெர்வினின் பின்னணி இசை பாராட்டத்தக்கது. பல காட்சிகளில் மெல்லிய மயிலிறகைப் போல மனதை வருடுகிறது. பாடல்களில் ‘க்யூட் பொண்ணு’ பாடலும் ‘நீதானடி’ பாடலும் சிறப்பு. மற்றவை சுமார் ரகம். அதே போல ரிச்சர்ட் எம்.நாதனின் ரிச்சான ஒளிப்பதிவும் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.