சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி

velaramamuthi2மண்மணம் மாறாத  இலக்கியப் படைப்புகளை வழங்குவதில் வல்லவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி.

அவர் தற்போது திரைப்பட நடிகர் என்கிற புதியதொரு அவதாரமெடுத்திருக்கிறார்.
அண்மையில் அவரைச்சந்தித்து எழுத்து,நடிப்பு பற்றி உரையாடினோம்.

இலக்கியவாதியாக பல ஆண்டு காலமாக இருந்த உங்களிடமிருந்து , நடிகர் எப்போது வெளிப்பட்டார்?

இலக்கியப் பணியாற்றிக்கொண்டிருந்த என்னை திரு பிரளயன் அவர்கள் தான் நாடகத்துறைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் பயணித்து நாடகத்தின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, பல மேடை நாடகங்களை நடத்தியவன் நான். அறிவொளி இயக்கம், தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர்கள் சங்கம் ,கம்யூனிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட பல தளங்களில், பல களங்களில், பல மேடைகளில் நானே எழுதி, இயக்கி நடித்திருக்கிறேன். என்னுடைய நாடகத்தின் மூலம் ஏராளமான நடிகர்களும் உருவாகியிருக்கிறார்கள். அதனால் நடிப்பு எனக்குப் புதிதல்ல. ஆனால் சினிமாவிற்கு புதிது.  ‘மதயானைக்கூட்டம் ‘என்னுடைய முதல் படமாக அமைந்தது.

சினிமாவில் நடிக்கும் போது உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளர் எந்த வகையிலாவது தலையெடுப்பாரா? உதவுவாரா?

நிச்சயமாக எழுத்தாளர் அந்தத் தருணத்தில் தலையெடுக்க மாட்டார். தலையெடுக்க விட மாட்டேன். அந்த படத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நடிகன் மட்டுமே. அந்த எல்லைக்கோட்டுக்குள்ளேயே நின்று கொள்வேன். இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிக்கும் சாதாரண நடிகனாக மட்டுமே இருப்பேன். அதே சமயத்தில் இயக்குநர் சொல்லித் தரும் வசனத்தில் பிழை இருந்தாலும் கூட நான் எதுவும் சொல்லமாட்டேன்.அவர் எதிர்பார்ப்பின் படியே செயல்படுவேன். ஒரு வேளை யாராவது அந்த தருணத்தில் ஆலோசனையாகக் கேட்டால் மட்டுமே இது சரி இது தவறு என்று சுட்டிக்காட்டுவேன். மற்றபடி நான் அப்போது நடிகனாக மட்டுமே இருப்பேன்.

‘மதயானைக்கூட்டம் ’என்ற படத்தின் வெற்றிக்கு பின்னால்  தென்தமிழ்நாட்டுக் கதாபாத்திரங்கள் மற்றும் பகைநிழல் விழும் பாத்திரங்களாக வருகின்றனவே..?

தென் மாவட்டத்து கதாபாத்திரங்களுக்கு என் முகம் சரியாக பொருந்துகிறது என்று நினைக்கிறார்களோ என்னவோ..? ஆனாலும் தற்போது வட தமிழ்நாடு வாழ் பாத்திரங்களும் கிடைக்கின்றன. ‘எய்தவன்’ படத்தில் ஆரணியில் வசிக்கும் கதாபாத்திரம்தான். அத்துடன் நான் வேட்டிதுண்டு என்றில்லாமல் கோட் சூட்போட்டுக் கொண்டு நடித்து இருக்கிறேன். வரவிருக்கும் திரைப்படங்கள் இந்த அபிப்ராயத்தை மாற்றும் என்று நம்புகிறேன். நெகடிவ் கேரக்டர் என்றில்லாமல் ஜாலியான கேரக்டர்களிலும் நடித்து வருகிறேன்.

இலக்கிய உலகில் உங்களுக்கென தனித்துவம் மிக்க ஓரிடம் இருக்கிறது. இந்நிலையில் கேலிக்குரிய வேடங்களில் நடிக்க தயங்குவீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. இது சாதாரண நடிப்பு தான். வில்லனாக நடிக்கும் போது நான் வில்லனுமில்லை. கேலியாய் நடிக்கும் போது நான் தாழ்ந்துவிடவுமில்லை. இது நூறு சதம் நடிப்பு மட்டுமே. எனவே வாழ்க்கையில் இருக்கும் யதார்த்தத்திற்கும் நடிப்பிற்கும் முடிச்சு போட்டு பார்க்கவேண்டிய அவசியமில்லை. அது வேறு. இது வேறு. நான் ‘பதுங்கி பாயும் தல ’என்ற படத்தில் கலாட்டவான  கதையில் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறேன்.அதில் எல்லாரும்  சிரிக்க வைப்பார்கள். நான் மட்டும் அப்படி இருக்கமாட்டேன்.அப்படி ஒரு பாத்திரம்.

ஓர் எழுத்தாளர் நடிக்கும் போது திரையுலகில் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?

நன்றாகவே நடத்துகிறார்கள். அன்பாக நடத்துகிறார்கள். மரியாதையாக நடத்துகிறார்கள். என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே நான் கால்ஷீட் தருகிறேன்.அவர்கள் படப்பிடிப்புத் தளத்தில் என்னை உயரே வைத்து கொண்டாடுகிறார்கள். அய்யா என்று அன்போடு அழைக்கிறார்கள்.எனக்கும் பெருமிதமாக இருக்கிறது. என்னைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் என்னிடம் வருவதில்லை.

உங்களுடைய படைப்புகளிலுள்ள பாத்திரங்கள் நடிக்கும் வேடங்களில் எதிரொலிக்குமா?

நான் நேரில் பார்த்த,கவனித்த, அனுபவித்த பல பாத்திரங்கள்தான் என்னுடைய கதைகளில் வந்திருப்பார்கள். நான் நடிக்கும் படங்களிலும் என் கதை மாந்தர்கள் எட்டிப்பார்ப்பார்கள். பாதிக்கச் செய்வார்கள்.அது இயல்பானது. நடிக்கும் பாத்திரத்திற்கு நான் படைத்த பாத்திரத்தின் பாதிப்பு செழுமை சேர்க்குமே  தவிர சிறுமை சேர்க்காது. மதயானைக்கூட்டம் வீரத்தேவனைப் போல், கிடாரி கொம்பையா பாண்டியனைப் போல் நானும் நிறையவே படைத்திருக்கிறேன்.

velaramamuthi1.cpஇத்தனை ஆண்டுகளாக எழுதி வந்த போது தெரியாத உங்களை, சினிமா எல்லோருக்கும் தெரியவைத்துவிட்டதே. இதைப் பற்றி..?

எழுத்து எழுத்து தான். சினிமா சினிமாதான். நான் முப்பதைந்து ஆண்டுகளாக எழுதி வருகிறேன். மேடைகளில் பேசி வருகிறேன். நடித்து வருகிறேன். எவ்வளவோ ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் சினிமாவில் நடித்ததன் மூலம் கிடைத்திருக்கிறது.

நான் இருபத்தைந்து ஆண்டுகளாக வசித்து வரும் தெருவில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றிருக்கிறேன்.இப்போதும் செல்கிறேன். இந்நிலையில் ஒரு அம்மா இப்படி சொன்னார்.‘ இனிமே இப்படியெல்லாம் சட்டுபுட்டுன்னு எங்க வீட்டுக்கு வரக்கூடாது. நீங்க இப்போ சினிமா ஸ்டாராயிட்டீங்க..’ என்றார்.  நேற்று வரை பார்த்த அவர்களைச் சினிமா எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள்.

 இது எந்த துறையிலும் கிடைக்காத அடையாளம். பார்க்கும் இடங்களில் எல்லாம் எல்லோரும் சினேகமாக சிரிக்கிறார்கள். சிலர் முறைக்கிறார்கள். எல்லாம் படம் பார்த்ததன் விளைவு தான். திடீரென்று போன் வரும், வெளியூரிலிருந்து பேசுவதாகச் சொல்வார்கள். நீங்கள் இப்படி பண்ணலாமா?என்பார்கள். எனக்கு ஒன்றுமே புரியாது. ‘சேதுபதி’ படத்தில் மகள் சொன்னாள் என்பதற்காக மருமகளை எரித்துவிட்டீர்களே.. இப்படி செய்யலாமா? எனக் கேட்பார்கள். அப்போதுதான் நான் அப்பாடா எனப்  பெருமூச்சு விடுவேன்.இதுதான் சினிமாவின் வீச்சு. அதனால் எழுத்தையும் சினிமாவையும் ஒப்பிட மாட்டேன்.

ஹாலிவுட்டில் எழுதப்பட்ட கதைகளே அதிகமாகப் படமாகின்றன. தமிழில் மட்டும் ஏன் நாவல்களையோ, கதைகளையோ படமாக்க தயக்கம் காட்டுகிறார்கள்?

அண்மையில் வெளியாகிப் பாராட்டும் விருதும் வென்ற ‘விசாரணை’, ‘குற்றம் 23 ‘ போன்றவை கூட நாவல்கள்தானே?. இருந்தாலும் நாவல் என்பது வேறு மொழி. சினிமா என்பது வேறுமொழி. ஒன்று இன்னொன்றாக மாறும் போது சில மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அதை சிதைப்பு என்றோ சிதைவு என்றோ எடுத்துக் கொள்ளமுடியாது.அது சரியானபடி அமைய இயக்குநருக்கு நாவலை திரைக்கதையாக்கும் திறன் இருக்கவேண்டும்.

நானே பாலாவிடம் முதலில் தயங்கினேன்.ஆனால் அவரிடம் அந்தத் திறமையைக் கண்டபோது வியந்தேன். நான் ‘குற்றப்பரம்பரை ‘கதையை ஒன்லைனாக சொன்னவுடன் அவர் காட்சியாகச் சொல்லும் போது வியந்து பார்த்தேன். கதை என்னுடையது சினிமா பாலாவினுடையது. நான் கதையை ஓரிடத்தில் தொடங்குவேன். அவர் சினிமாவாக வேறு ஓர் இடத்தில் தொடங்குவார். பிரமித்துவிட்டேன். என் நாவல் நூறு மடங்கு வீரியமுள்ளதாக சினிமாவில் வந்திருக்கிறது. எழுத எழுத எனக்கு மகிழ்ச்சி அதிகரித்தது. எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு, அது ஒரு மகிழ்ச்சிகரமான பயணமாக போய்க் கொண்டிருக்கிறது. குற்றப்பரம்பரை உலகத்தரத்திலான படமாக வரும் என்பது நிச்சயம்.

velaramamuthi1.book‘குற்றப்பரம்பரை ‘ கதை சர்ச்சை குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அதைப் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை. எனக்குள் பொங்கிய கோபத்தைவிட பாலா பன்மடங்கு பொங்கிவிட்டார். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நூறு குற்றப்பரம்பரை வரட்டும் ஆனால்  வேல ராமமூர்த்தியின் உழைப்பில் வரும் குற்றப்பரம்பரைக்குள் வராதீர்கள்.

இப்போதெல்லாம் கதைத்  திருட்டும் அது குறித்த சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றனவே..?

உண்மை தான்.நிறைய திருட்டுகள் நடக்கின்றன.ஆனால் அதை நிரூபிக்க நடைமுறை தெரியாமல் இருக்கிறார்கள். எம்முடைய கதையை சினிமாவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றை செய்தது எமக்கு தெரிந்த நண்பர்கள் தான். அவர்கள் என்னிடம் சொல்லியிருக்கலாம். இதைப் பற்றி ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ‘ முழு தேங்காயைத் திருடிய நாய்அதை உடைத்துத் தின்ன முடியாது. உருட்டிக் கொண்டே திரியும். ’ அது போல என் கதையை என்னைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக திரைக்கதையாக உருவாக்க முடியாது.

velaramamuthi1 - Copyதற்போது எழுதி வரும் இலக்கியபடைப்பு..?

தினசரி தமிழ் இந்து  இதழில் வெளியான ‘குருதியாட்டம் ’ என்கிற தொடரை நூலாகத்  தொகுத்து வருகிறேன். மேலும் சில அத்தியாயங்கள் எழுத வேண்டியிருக்கிறது. இதற்கான பணியில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன். மூன்று திரைக்கதைகளை உருவாக்கும் பணிகளிலும் என்னை  ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். இவையனைத்தும் படபிடிப்பு நாட்களின்  நடுவே கிடைக்கும் இடைவெளிகளில் செய்து வருகிறேன்.