எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு வெளியீடு!

எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் எழுதிய ‘So I let it be’( …அதனால் நான் இருக்கிறேன்) சிறுகதைத் தொகுப்பு வெளியீடு!
 
திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ஞான ராஜசேகரனின் புதல்வியான சிந்து ராஜசேகரன் எழுதிய ‘So I let it be’( …அதனால் நான் இருக்கிறேன்) என்கிற ஆங்கிலத்தில் தயாரான சிறுகதைத் தொகுப்பு நூல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
 
இந்த நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பேராசிரியை கே பாரதி, எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கவிதா முரளிதரன் மற்றும் எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
விழாவின் தொடக்கத்தில் மறைந்த பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
பின்னர் விழா தமிழ்க் கலாச்சார முறைப்படி குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் நூலின் முதல் பிரதியை வெளியிட, அதனைப்  பேராசிரியை கே பாரதி பெற்றுக்கொண்டார்.
 
இதையடுத்து நூலாசிரியர் சிந்து ராஜசேகரன் தன்னுடைய சிறுகதைத் தொகுப்பினை அறிமுகப்படுத்திப் பேசுகையில்,“ முதல் நாவல் எழுதிய பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன், சேகரித்த தரவுகளின் அடிப்படையில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளை இந்த நூலில் தொகுத்திருக்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
 
இதனைத் தொடர்ந்து இரண்டு சிறுகதைகளில் இருந்து சில பகுதிகளை விழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்கள் முன்னிலையில் வாசித்து, அறிமுகப்படுத்தினார்.
 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசுகையில்,“சிந்து ராஜசேகரனின் இந்த முயற்சியை, எழுத்தாளர் என்ற முறையில் நான் மனதார பாராட்டுகிறேன். 
 
அனைத்து கதைகளிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அழுத்தமாகவும். வித்தியாசமான கற்பனைத்திறனுடனும் எழுதியிருக்கிறார். கதைகளின் முக்கிய பகுதிகளில் கதாசிரியர் அந்தக் கதாபாத்திரத்தின் ஊடாக தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். பல இடங்களில் பெண்களின் மௌனத்தை தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறார். அழுத்தமாக பேசியிருக்கிறார். இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் கதை என்னை மிகவும் கவர்ந்தது.
 
 பெண்கள் தங்களின் திறமை. தகுதி. தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு வாழ்க்கையை எளிதாக வாழ முடியும் என்று சொல்லியிருப்பது கவனத்தை ஈர்த்தது. அனைத்து கதைகளிலும் பெண்களின் கதாபாத்திரத்தை தெள்ளத்தெளிவாக சமகாலத்துடன் படம் பிடித்து காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். ஹிந்து புராணக் கதை மாந்தர்களையும், கடவுள்களையும் மட்டுல்ல , புவி வெப்பமயமாதல், கார்ப்பரேட் கம்பெனிகள் மனித வளம், இயற்கை வளம், மாசு ஏற்படுத்துதல் குறித்து அழகாக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.அதேபோல் ஒரு கதையில் திருமண வைபவங்கள் குறித்த விவரங்களும், வர்ணனைகளும் வாசிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.”என்று பாராட்டினார்.
 
பேராசிரியை கே பாரதி பேசுகையில்,“ சிந்து ராஜசேகரனின் தந்தை ஞானராஜசேகரன் அவர்களை எனக்கு இருபது ஆண்டுகளாக நன்கு தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து  பணியாற்றி இருக்கிறோம். 
 
சிந்து ராஜசேகரன் அவர்களுக்கு திருமணமாகி 3 வயது குழந்தையை வைத்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு எப்படி வளமான கற்பனைகளுடன் கூடிய கதை எழுதுவதற்கான நேரம் கிடைத்தது என்பதை எண்ணி ஆச்சரியப்படுகிறேன். இவருடைய கதைகளில் பெண்களை மையப்படுத்தி இருந்தாலும், பெண்களை அவர்களின் சிந்தனையை நேர்மறையான அணுகுமுறையுடன் பதிவு செய்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன். 
 
கதைகளை வாசிக்கும்போது பல கேள்விகள் எழும். ஆனால் அதற்கான பதில்களை அவர் இடையிடையே சொல்லிக் கொண்டு செல்வது அவருடைய பாணி என்று எடுத்துக் கொள்ளலாம்.” என்றார்.
 
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கவிதா முரளிதரன் பேசுகையில்.
 
“சிந்து ராஜசேகரன் எழுதிய இந்தச்  சிறுகதைத் தொகுப்பை குறித்து நான் ஊடக வெளியில் விமர்சனம் செய்யவும், விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன், அவருடைய பணி அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. 
 
பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகளாக இருக்கட்டும் அல்லது மத ரீதியான பிரச்சினைகளாகட்டும் அனைத்திற்கும் இவர் படைத்திருக்கும் பெண் கதாபாத்திரங்கள் பேசுகின்றன., சமூகத்தில் நிலவும் அனைத்து சிக்கல்களுக்கும் தெளிவான கருத்துக்களை கொண்ட பெண்களாகப் படைத்திருப்பது தனிச்சிறப்பு. 
 
கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை முன்வைத்தது, ‘பெண்களின் குரலை ,பெண்களின் பிரச்சினையை பெண் எழுத்தாளர்கள் முன்வைப்பதில்லை’ என்ற அந்த விவாதத்தில் நான் கலந்துகொண்டு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். ஹிந்து. முஸ்லிம் என்ற பாகுபாட்டிற்குள் பொதிந்திருக்கும் ஒரு சிறிய கருவை எடுத்து கதையாக்கி இருக்கிறார் . சமகாலப் பெண்கள் எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான விஷயங்களுக்கும் இவர் படைத்த பெண் கதாபாத்திரம் மூலமாக பதில் அளித்திருப்பது சமூகத்தில் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.
 
இவருடைய கதைகளில் அன்பு, பெண்கள் இழந்துவரும் தனித்துவ அடையாளங்கள், பாலியல் ரீதியாக சந்திக்கும் கசப்பான அனுபவங்கள் என பல விஷயங்களை நுட்பமான கோணத்தில் அலசி அதனை எழுத்தாக்கியிருக்கிறார்.இவரின் கதை மாந்தர்களான மெஹர், ஆனந்தி பென் ,லதா, பத்மினி என அனைத்து கதாபாத்திரங்களும் பெண்களின் குரலை வலிமையாகவும், உரத்த குரலிலும் பேசியிருப்பது பாராட்டத்தக்கது.
 
சில கதைகள் எழுதுவதற்காக அவர் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழல் மாசு குறித்த கதை, அவரின் சமகால சமூகத்தின் குரலைப் பிரதிபலித்து இருப்பதாகவே கருதுகிறேன். அவர் எழுதிய கவிதையும் நன்றாகவே இருக்கிறது.” என்றார்.
 
அடுத்ததாக விழாவுக்கு  வந்திருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் பதிலளித்த பிறகு,அவருடைய சிறுகதைத் தொகுப்பை வாங்கியவர்களுக்கு அவர் தன் கைப்பட கையெழுத்திட்டு தந்து நிகழ்வை நிறைவு செய்தார்.
 
 
 
 
Pin It

Comments are closed.