‘எழுமின்’ விமர்சனம்

 
தற்காப்புக்கலையின்  பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள  திரைப்படம்  ‘எழுமின்’ , விளையாட்டுத்துறையிலுள்ள அரசியலைச்சொல்லும் கதை.
 
 
விவேக் வசதியானவர். அது மட்டுமல்ல  நல்லவர்.அவர் மனைவி  தேவயானி ,அத்தம்பதிக்கு  ஒரு மகன் . அவன் படிப்பில் மட்டுமல்ல  பாக்ஸிங் எனப்படும் குத்துச்சண்டையிலும் சிறந்து விளங்குகிறான்.  அச்சிறுவனைப் போல, பல சிறுவர்கள் தற்காப்புக் கலை மீது ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களைப் பெரியமனதுடன்  ஊக்கப்படுத்திவரும் விவேக் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருபவர்.
 
 
திறமை இருந்தும் வறுமை உள்ளதால் பணம் இல்லை என்ற காரணத்திற்காக ஏழை மாணவர்கள் விளையாட்டு அகடாமியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.  தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அவர்களுக்கு இடையூறு  செய்கிறார்கள் சதிகாரர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவேக், அந்த ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பயிற்சி அளிக்க முன் வருகிறார்.
 
ஆனால் துரதிர்ஷடவசமாக  விவேக்கின் மகன் திடீரென்று உயிரிழக்க நேரிடுகிறது. தன் மகன்  நினைவாக விளையாட்டு அகாடமி ஒன்றை தொடங்கும் விவேக் ,அதன் மூலம் திறமையுள்ள ஏழைச் சிறுவர்களை தயார் படுத்துகிறார்.அவர்களைப்  போட்டியில் வெற்றி பெறச் செய்ய முயல்கிறார். ஆனால் , எப்போதும் போல பணம் தனது சதி வேலையைத் தொடங்குகிறது. இதனால், திறமையுள்ள சிறுவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.  போட்டியில் மட்டும் அல்லாமல், தங்களுக்கு நிஜ வாழ்க்கையில் வரும் சவாலிலும்  அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்? என்பது தான் ‘எழுமின்’ படத்தின் கதை.
 
 
தற்காப்புக் கலை என்பது பதக்கம் ,பாராட்டுக்கு  மட்டுமல்ல, நமக்கு  ஆபத்து  ஏற்படும் போது நம்மை காத்துக்கொள்வதற்காகத்தான், என்பதை அழுத்தமாக சொல்லும் இப்படத்தில், தற்காப்புக் கலைகளில் இருக்கும் பல வகைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு அதில் சிறந்த அனுபவம் பெற்ற சிறுவர்களையே நடிக்க வைத்திருப்பது சிறப்பாக உள்ளது.
 
அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என்கிற ஆறு குழந்தைகளும் ஆறு தூண்களாக இருந்து படத்தை தாங்கி பிடிக்கின்றனர். விவேக் குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார். பாசமிகு தந்தையாகவும், ஊக்கம் தரும் நண்பராகவும் விவேக் தனது வேலையை சரியாக செய்துள்ளார். அவரது மனைவியாக வரும்  தேவயானியும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.விவேக்குடன்  வரும் செல் முருகன்  அவ்வப்போது சிரிக்க வைத்துவிடுகிறார்.
 
 

சிறுவர்கள் குறிப்பாக அந்த கால்மணி நேர க்ளைமாக்ஸ் காட்சியில் உலுக்கி எடுத்து விடுகின்றனர். ஒவ்வொரு சிறுவரும் ஒவ்வொரு தற்காப்பு கலையில் சிறந்து விளங்க, இறுதிக் காட்சியில் அனைவரும் சேர்ந்து போடும் அதிரடி ஆக்‌ஷன் நமக்கு ட்ரீட்டாக இருக்கிறது.குழந்தைகளின் பாதுகாப்பை விரும்பும் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் சென்று பார்க்கவேண்டிய படம் இது.
இப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் வி.பி.விஜி மக்களுக்கு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த படத்தை எடுத்திருக்கிறார். சிறுவர்,சிறுமிகளுக்கு தற்காப்புக் கலை எந்த அளவுக்கு முக்கியம், என்பதை ரொம்ப அழுத்தமாக சொல்வதோடு ரசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார். 
ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கிள் மைக்கேலும் குழந்தைகளின் ஆக்ஷன் காட்சிகளை மிகையில்லாமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.  இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரின் பாடல்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும்  கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன  . 
 
இந்த ‘எழுமின்’ சிறுவர்களை எழுச்சியடைய செய்வதோடு, பெற்றோர்களை யோசிக்கவும் வைக்கும்..

மொத்தத்தில், சிறுவர்களுக்கான படமாக  உருவாகி பெற்றோர்களுக்கும் வழி காட்டும் திரைப்படமாக மாறியுள்ளது எனலாம்.

Pin It

Comments are closed.