‘எவனவன்’ விமர்சனம்

evanavan4ஜெ.நட்டிகுமார் இயக்கியிருக்கும் படம்  ‘எவனவன்’ .

டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ்  வழங்கும் இப்படத்தை தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

உணர்வெழுச்சியில் விளையாட்டுக்காக செல்போனில் எடுக்கப்படும் வீடியோக்கள் எந்த அளவுக்கு விபரீதமாகிவிடும் என்பதைச் சொல்லும் கதை.

படத்தின் நாயகன் அகில், அப்படி விளையாட்டுத்தனமாகவே தனது காதலியின்  குளியலை செல்போனில் வீடியோ எடுத்துவிடுகிறார் , அந்த செல்போன் தொலைந்துவிடுகிறது. அது  சரணிடம் கிடைக்க, ஆரம்பத்தில் அதை உரியவரிடத்தில் ஒப்படைத்துவிடத்தான் அவர் முடிவு செய்கிறார். இதற்கிடையே  அந்த போனில் இருக்கும் வீடியோவை சரண் பார்த்துவிட்டு, புத்தி மாறுகிறது.அதை வைத்து அகிலை பிளாக் மெயில் பண்ணுகிறார்.

தான் சொல்வதைச் செய்தால் தான் போனை திரும்ப தருவேன், என்று அகிலை மிரட்டும் சரண், சில அபாயமான விஷயங்களை செய்யச் சொல்லி மிரட்டுகிறார். சரண் எதற்காக  இப்படிச் செய்கிறார், என்ற புதிர் அவிழ்வதற்கு முன், சரணை அகில் கொலை செய்துவிடுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் முடிவை நோககிய திரைக்கதையின் பயணம்.

தொலைந்துபோன செல்போன் பின்னணியிலான ஒரு கதையை வைத்துக் கொண்டு காட்சிக்கு காட்சி முடிச்சு போட்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக்காக எடுக்கப்படும் வீடியோக்கள் பெரிய விபரீதத்தில் முடியும் என்பதை உணர்த்துகிறார்கள்.அவ்வகையில், இணையதளங்களில் பரவும் ஆபாச வீடியோக்கள் பற்றிச்  சொல்லி எச்சரிக்கிறார்கள். இருந்தாலும், முழுப்படமும் சிறப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக அமைந்துள்ளது.

அறிமுக நடிகர் அகிலின் இயல்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பலம் . சரண் சொல்வதையெல்லாம் எந்தவித தயக்கமும் இன்றி செய்வது என்று படம் முழுவதும் பதற்றமே இல்லாமல் நடித்திருக்கிறார்.

இரண்டாவது நாயகன் சரண், வில்லத்தனத்தையும், அப்பாவித்னத்தையும் ஒருசேர செய்து, பார்ப்பவர் மனதில் பதிகிறார். போலீசாக வரும் சோனியா அகர்வால், வின்சென்ட் அசோகன்,டெல்லி கணேஷ்,    சந்தோஷ்    போன்றவர்களும் தங்கள் பணியைச்சரியாகச் செய்திருக்கிறார்கள்.

பெடோ பீட்டின் இசையில் பாடல்களைவிட பின்னணி இசை ரசிக்கும் விதத்தில் உள்ளது. ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத்தின் பணி சோடைபோகவில்லை..

படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை, பல இடங்களில் டிவிஸ்ட் வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் நட்டிகுமார்,  தன்னால் முடிந்த உயரத்துக்கு பூப்பறித்துள்ளார்.சிறிய பட்ஜெட்டில் நிறைவான  படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

பட்ஜெட் காரணமாக  சில குறைகள் தெரியலாம்.இருந்தாலும், திரைக்கதையில் எந்தவித குறைபாடும் இல்லாத படம் இந்த ‘எவனவன்’ .