எஸ்.ஏ. சந்திரசேகரனை கெட்டவார்த்தையில் நையப்புடைத்த உதவி இயக்குநர்: ஒரு கொடுமையான அனுபவம்

IMG_0033sacஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின்  முக்கிய நாயகனாக    நடிக்க, அவருடன் இன்னொரு நாயகனாக பா.விஜய்யும்  நடித்துள்ள படம் ‘ நையப்புடை’. . இப்படம் வருகிற 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது . நடிகை ராதிகா ட்ரெய்லரை வெளியிட்டார்.

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது

” எனக்கு வயது 73 என்று இங்கே பேசினார்கள்.  எனக்கு வயது 35 என்றுதான் நினைப்பேன். இது நாள் வரை இயக்குநராக காலத்தை ஓட்டி விட்டோம்.இப்போது  நடிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் எப்போதும் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி எனக்குள் இருக்கும்.

இந்த படம் பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும் இயக்கியிருப்பவர் 19 வயது இளைஞர், நடித்து இருப்பவர் 73 வயது ஆனவர். இந்த கூட்டணி எப்படி இருக்கும்? இப்படம் எல்லா வயதினரும் ரசிக்கும்படி இருக்கும்.அப்படித்தான் படத்தை விஜய் கிரண் எடுத்திருக்கிறார்.

ஓய்வுபெற்ற வயதில் இருப்பவர்களைக் கூட நாம் ஏன் இப்படி இருக்க வேண்டும்? என்று நினைக்கும்படி இப்படம் இருக்கும். மாடர்ன் தாத்தா, வேகமான தாத்தா, நகைச்சுவை உணர்வுள்ள தாத்தா என்று என் கேரக்டரைக் கூறலாம். எனக்கு ஏழு வயது பையன் நண்பனாக நடித்துள்ளான்.

இந்தக் கதையில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று ஒரு குப்பத்தில் வந்து சேர்கிற எனக்கு ,முதலில் அந்த  ஏழு வயது பையன்தான் நண்பனாகிறான். பிறகு ‘அப்பா’ என்று அழைத்து சாந்தினி கேரக்டரின் உறவு வருகிறது. சாந்தினி மூலம் பா.விஜய் வருகிறார். இப்படி வருகிற அந்த மூன்று சொந்தங்களுக்கு ஒரு பிரச்சினை வருகிற போது இந்த வயதானவர் என்ன செய்கிறார் என்பதே கதை.  காஸ்மோ சிவகுமாரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியும் சரியாக நீளத்தைக்கூட குறைக்காத நிலையிலேயே இந்தப் படத்தை பார்த்து விட்டு சில நிமிடங்களில் தமிழ்நாடு முழுக்க நாங்கள் வெளியிடுகிறோம் என்று  படத்தை வாங்கிக்கொண்டது பெரிய பெருமை. நல்ல சினிமாவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இங்கே ராதிகா வந்திருக்கிறார். அன்றுமுதல் இன்று வரை அதே சிரிப்பு. இந்தச் சிரிப்பில்தான் எல்லாரும் விழுந்தார்கள். இன்றும் அதே குழந்தைச் சிரிப்பு.அவரைப் பார்க்கும் போது எனக்குப் பழைய ஞாபகம் வருகிறது.   இவருடைய குறும்புத்தனம் இப்போது ஞாபகம் வருகிறது.அவர் முதலில் என்  ‘நீதியின் மறுபக்கம்’ படத்தில் நடித்தார்.ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு  முடிந்து இரவு மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்தோம். என் உதவி இயக்குநர் செந்தில்நாதன்  என்பவர் ‘குடி’ப் பழக்கம் உள்ளவர். அப்போது ஒருநாள் இரவு  அவருக்கு ராதிகா சரக்கு வாங்கிப் போட்டுவிட்டுப் பேச வைத்தார். ‘உங்க டைரக்டர் எப்படி?’ என்று  எல்லாம் உசுப்பி விட, அவர் காலையில் நான் திட்டியதை எல்லாம் மனதில் வைத்து ‘ அவன் கிடக்கிறான்….  ப்பயல் ‘ என்று எல்லாம் போதையில் என்னை கன்னாபின்னாவென்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். என்னால் காது கொடுத்து கேட்க முடியவில்லை. வேடிக்கை என்னவென்றால் இதைநான் ஜன்னல் வழியே வீடியோ கேமராவில் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எல்லாமும் ராதிகா ஏற்பாடுதான்.

இதைவிட வேடிக்கை என்னவென்றால் காலையில் சூசைட் பாயிண்டில் படப்பிடிப்பு. ‘இப்படித்தான் இன்று எடுக்கப் போகிறோம் ஒரு சாம்பிள் வீடியோ பாருங்கள்  ‘என்று உதவி இயக்குநர் செந்தில்நாதனை  உட்காரவைத்து ராதிகா டிவி பிளேயரில் , இரவு  குடித்துவிட்டு செந்தில்நாதன் உளறியதை அவரிடமே போட்டுக்காட்ட ஆடிப் போய்விட்டார் அவர். அப்படி ஒரு குறும்புக்காரர்தான் இந்த ராதிகா. அவர் சின்னத் திரையின் சி. எம். தான் அதில் சந்தேகமில்லை. ” என்றார்.

நிகழ்ச்சியில் ராதிகா, ‘நையப்புடை’படத்தின் இயக்குநர் விஜய் கிரண், ஒளிப்பதிவாளர் ஜீவன், கவிஞர் பா.விஜய்,  இசையமைப்பாளர் தாஜ்நூர், தயாரிப்பாளர் பி,டி .செல்வகுமார், ,எடிட்டர் டான்பாஸ்கோ, கலை இயக்குநர் வீரமணி , படத்தில் நடித்துள்ள நாயகி சாந்தினி,சிறுவன் ஜாக்சன் ஆகியோரும் பேசினார்கள்.

,