‘ஒருநாள் கூத்து’ விமர்சனம்

orunal-koothuதிருமணம் என்றதும் கல்யாணக்களை ,சந்தோஷம் என்றதெல்லாம் அந்தக்காலம். திருமணம் குறித்த பதற்றம் வருவது இந்தக்காலம். அப்படி இந்தச் சமூகச்சூழலில் உள்ள மூன்று பெண்களின் திருமணம்  பற்றிய  பதற்றம் குறித்து பேசுகிற படம்தான் இந்த ‘ஒருநாள் கூத்து’ படம்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கார் விபத்தையும் காட்டி  பார்வையாளனை பதற்றம் கொள்ள வைத்துவிட்டு, முகத்தில் நீர் தெளித்தது போல அடுத்ததாக நிதானமாக்கி கடந்த காலத்துக்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிவேதா பெத்துராஜ் ஒருவர்.தனியார் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாக பணிபுரியும் ரித்விகா மற்றொருவர். வீட்டில் திருமணத்துக்குக் காத்திருக்கும் ஆசிரியரின் மகளான மியா ஜார்ஜ் இன்னொருவர் என வெவ்வேறு  அடுக்குளில் உள்ள 3 பெண்களின்  வெவ்வேறு கதைகளாக காட்சிகள் விரிகின்றன.

இந்த மூன்று பெண்களைச் சுற்றி நடக்கும் கதைதான் படம்.

ஐடி கம்பெனி வேலை பார்க்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தினேஷும்,  கூடவே பணிபுரிந்து வரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த நிவேதா பெத்துராஜுவும் காதலித்து வருகிறார்கள்.

வீட்டுச்சூழலால் வாழ்க்கையில் செட்டிலான பிறகுதான் கல்யாணம் என்ற முடிவில் இருக்கிறார் தினேஷ். ஆனால், நிவேதாவோ விரைவில் கல்யாணம் பண்ண நிர்ப்பந்திக்கிறார். அதற்காகத் தனது பெற்றோரிடம் தினேஷை அறிமுகப்படுத்தி வைக்கிறார்,ஆனால், தினேஷுக்கு இது பிடிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்.அதனால்  நிவேதாவுக்கும் தினேஷுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுப் பிரிகிறார்கள்.

onk1மறுபுறம்,  எப்.எம். ஆர்.ஜே.வாக பணிபுரியும் ரித்விகா நீண்டநாட்களாக மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கிறார். கடைசியில் ஒரு மாப்பிள்ளை பார்த்து அவருக்கு நிச்சயமாகிறது. ஆனால்  நிச்சயதார்த்தத்துக்கு பிறகு மாப்பிள்ளைக்கு ரித்விகாவை பிடிக்காமல் போய்விடுகிறது. இருப்பினும், மாப்பிள்ளையை சமரசம் செய்யும் முயற்சியில் அண்ணன் கருணாகரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இன்னொரு பக்கம் பெரிய இடத்தில்தான் தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு வருகிற வரன்களை எல்லாம் தட்டிக் கழித்து வருகிறார்  மியா ஜார்ஜின் அப்பா. இந்நிலையில், ஒரு பெரிய பணக்காரரின் சம்பந்தம் கிடைக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் மியா ஜார்ஜின் குடும்பம் தங்களது குடும்பத்தின் தகுதிக்கு குறைவானது என்று கூறி இந்த சம்பந்தத்தை தட்டி கழிக்கின்றனர். ஆனால், மாப்பிள்ளைக்கு மியா ஜார்ஜை பிடித்துப்போக, தனது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, மியா ஜார்ஜை கைப்பிடிக்க முடிவெடுக்கிறார்.

இப்படியாக மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள்  ஒரு கட்டத்தில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்போது அங்கு என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகின்றன என்பதை  சொல்லும் படமே ‘ஒருநாள் கூத்து’.

கல்யாணம் என்பது புனிதமானது  இனிமையானது என்பது போய் அது பல நடிகர்கள் நடிக்கும் ஒருநாள் கூத்து என்கிற வகையில் சற்றுவிலகி நின்று சிந்தித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

படத்தில் ஒரு கதையை  சொல்லும் போதே பல இயக்குநர்கள் பாதிப்படத்திலேயே  கதையை நகர்த்த திணறிப்போவார்கள்.

இதில் அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மூன்று பெண்களின் கதையை சிறு குழப்பமும் இல்லாத திரைக்கதை உத்தியில் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் சொல்லி இருக்கிறார் .

miyaமியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா மூவருமே தங்களது கதாபாத்திர குணங்களை உள்வாங்கி தேர்ந்த நடிப்பால் அவரவர் பாத்திரங்களை சிறப்பாக மிளிரச் செய்திருக்கிறார்கள்.

மியா ஜார்ஜ் ஒரு மோனாலிசா பார்வையுடன் அனுதாபங்களை அள்ளுகிறார்.படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் அழியாத ஓவியமாக மனதில் பதிகிறார்.

நிவேதா புதுமுகம் என நம்ப முடியாத முதிர்ந்த நடிப்பு. சபாஷ்.

பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும்  நடுத்தர வர்க்க இளைஞனாக   தினேஷ். தோற்றமும் நடிப்பும் கச்சிதம். தன் பங்கைச் சரியாகச்செய்திருக்கிறார் பாலசரவணன்.

ஆர்.ஜே.வாக வரும் ரமேஷ் திலக். தனக்கே உரிய தோற்றத்தில் நடிப்பில் கலகலப்பு செய்திருக்கிறார்.

ரித்விகாவின்  அண்ணனாக வரும் கருணாகரன் நடிப்பு அளவு,அழகு.

படத்தின் மூன்று வெவ்வெறு கதைகள் இருப்பதால் படத்தின் ஆரம்பம் கொஞ்சம் நீளமாக செல்வது போலத் தெரிகிறது. இருந்தாலும், பிறகு சுதாரிக்கின்றன காட்சிகள்.பிற்பாதியில் கிளைமாக்ஸ் காட்சியை சுவாரஸ்யமாக முடித்திருப்பது சிறப்பு.

ரித்விகா-ரமேஷ் திலக்  உடல் ரீதியாக இணைந்த காட்சி படத்தை திடீரென அசைவ வாசனை வீச வைத்துவிடுவது நெருடல். திருமணம் என்பதே உடல் இச்சை தீர்க்க த்தானா  ”சே… இவ்ளோதானா. இதுக்காவா இவ்ளோ போராட்டம்?” என்று ரித்விகா மூலம் சொல்ல வைத்திருப்பதுதான்  இயக்குநரின் பார்வையா? சரளமான திரைக்கதையில் ஏதாவது அதிர்ச்சிகரமான  காட்சி வரவேண்டும் என்கிற கட்டாயமில்லை.

ஐஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களை விட பின்னணி இசை தேவைக்கேற்ப அழகாக இருக்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டமாக,  பெரும் பலமாக இருக்கிறது.காட்சிகளில் அழகுணர்ச்சி பார்வையோடு சுழன்றுள்ளது அவரது கேமரா.

மொத்தத்தில் திருமண்ம் சார்ந்து புதிய கோணத்தில் விமர்சன நோக்கில் சுவாரஸ்யமாகச்  சொல்லப்பட்ட கதை எனலாம்.