‘ஒரு கதை சொல்லட்டுமா’ விமர்சனம்

ஆஸ்கார் நாயகன் ரசூல் பூகுட்டி நடிப்பில், பிரசாத் பிரபாகர் இயக்கம் தயாரிப்பில்,  வெளியாகியிருக்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ எப்படி ?.

திருச்சூர் பூரம் விழாவில் இசைக்கப்படும் வாத்தியங்கள், வாண வேடிக்கை, யானைகள், நிகழ்ச்சியின் ஆரவாரம், மக்களின் சந்தோஷம் என்று அத்தனை ஒலிகளையும் இயல்பு மாறாமல் துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதை ஆஸ்கார் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூகுட்டி தனது கனவாக வைத்திருக்கிறார். அதே சமயம், கேரள மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பூரம் விழாவை டாக்குமெண்டரி படமாக தயாரிக்க முடிவு செய்து, அதை ரசூல் பூகுட்டியை வைத்து தயாரித்தால், பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கிறார். அதன்படி, பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார்.

தனது கனவை நிஜமாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே இதை பார்க்கும் ரசூல் தயாரிப்பாளரின், எண்ணத்தை அறியாமல், தனது குழுவினருடன் கேரளாவில் முகாமிட்டு, பூரம் விழா பற்றிய அத்தனை தகவல்களையும் சேகரிப்பதோடு, அதற்காக இரவு பகல் பார்க்காமல் பணியாற்ற தொடங்குகிறார். பணத்தில் மட்டுமே குறியாக இருக்கும் தயாரிப்பாளர் ரசூலின் உழைப்புக்கு மரியாதை கொடுக்காமல், அவரிடம் அநாகரிகமாக நடந்துக் கொள்ள இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.

உலக அளவில் பிரசித்திப் பெற்ற இந்திய கலாச்சார திருவிழாக்களில் ஒன்றான திருச்சூர் பூரம் விழாவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், மற்ற சினிமாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமாக இருக்கிறது. 

ரசூல் நடிப்பை விட, அவரது பணி எப்படிப்பட்டது என்பதை காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது. இருந்தாலும், தயாரிப்பாளரிடம் மோதலில் ஈடுபடுவது, கண் பார்வையற்றவர்களிடம் அன்பாக பேசுவது, தனது கனவு சிதைந்து விடுமோ என்று அச்சப்படுவது என்று இயல்பான எக்ஸ்பிரஷன்கள் மூலம் ஒரு நடிகராகவும் நம்மை கவர்கிறார்.

ரசூலுடன் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக மேனஜராக வரும் சேகர் கதாபாத்திரமும், தயாரிப்பாளர் கதாபாத்திரமும் கச்சிதம்.

பூரம் விழாவின் தகவல்களை தெளிவாக எடுத்துக்கூறும் இப்படம் காட்சிகளாக விழாவின் பிரம்மாண்டத்தை சரியாக காட்டவில்லை. பூரம் விழா என்று கூகுலில் தேடினால் என்ன கிடைக்குமோ அத்தகைய நிகழ்வுகள் மட்டுமே படத்திலும் காட்டியிருப்பது, பூரம் விழாவில் பங்கேற்பவர்களை ரசூல் பேட்டி எடுப்பது என்று படம் டாக்குமெண்ட்ரியாக நகர்வதும் சற்று சலிப்படைய வைக்கிறது. இருந்தாலும், டாக்குமெண்ட்ரியை கூட இப்படி திரைப்படமாக எடுக்கலாம் என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் பிரசாத் பிரபாகரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில், ‘ஒரு கதை சொல்லட்டுமா’ பூரம் விழா என்றால் என்ன, என்பதை நமக்கு புரிய வைக்கிறது.

Pin It

Comments are closed.