ஒரு கனவு ததும்பிய கலை வாழ்க்கை கலைந்த கதை : காலம் பிரித்த வெற்றி ஜோடி இரட்டையர் ராபர்ட் – ராஜசேகர்

robert rajasekarபாலைவனச்சோலை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்கவே இயலாது. அவை ராபர்ட் -ராஜசேகர் என்ற இரட்டையர்களால் இயக்கப்பட்டவை. இருவரையும் தனித்தனியே சந்தித்தோம். ராஜசேகர் நடிகராகிவிட ராபர்ட் ஒளிப்பதிவாளராகத் தொடர்கிறார்.

திரைப்படக்கல்லூரியில் 1971—- 74 -ல் ஒளிப்பதிவைப் படித்தவர்கள்தாம் ராபர்ட்-ராஜசேகர். வில்லிவாக்கத்தில் ராஜசேகரின் வீடு, ஐசிஎப்பில் ராபர்ட்டின் வீடு. வில்லிவாக்கத்திலிருந்து மிதிவண்டியில் வந்து அதை ராபர்ட் வீட்டில் விட்டுவிட்டு இருவரும் சேர்ந்து 47ஏ பேருந்து பிடித்து அடையாறு திரைப்படக்கல்லூரிக்குச் செல்வார்கள். அந்த நட்பு இருவரையும் ஒன்றாக இயங்க வழிவகை செய்ததென்று சொல்கிறார்கள்.

otrஇன்றைக்கும் பேசப்படுகிற குடிசை படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு  ஜெயபாரதியுடன் இணைந்து தயாரித்ததும் இவர்கள்தாம். இவர்களோடு அந்தப்படத்தில் இணைந்திருந்த இன்னும் இருவரில் மனோபாலாவும் ஒருவர். இன்னொருவர் ஆர்.எம்.ரமேஷ் என்பவர். நண்பர்கள் எல்லோரும்

சேர்ந்து எல்லாவேலைகளையும் செய்து உருவாக்கிய அந்தப்படத்தில் ஒளிப்பதிவு என்று இவர்கள் பெயரைப் போட்டுக்கொண்டார்களாம். அந்தப்படத்தில் மட்டும் ராஜசேகர்-ராபர்ட் என்று பெயர் வந்திருக்கிறது. இப்படிச் சொல்வதைவிட ராபர்ட் -ராஜசேகர் என்று  சொல்லும்போது சொல்லழகு(ரைமிங்) இருக்கிறதென்று சொல்லி மாற்றியவர் ராஜசேகர்தானாம்.

குடிசைக்குப் பிறகு ஒருதலைராகம். அந்தப்படத்திலும் திரைக்கதை உருவாக்கத்திலிருந்து தயாரிப்புப் பொறுப்புவரை எல்லாவேலைகளிலும் இருவரும் பங்குபெற்றிருக்கிறார்கள்.

“சினிமா எப்போதும் தனிமனிதருடைய வேலையாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது, தனிமனிதருக்குப் பெயரும் புகழும் கிடைக்கலாம் ஆனால் அது கூட்டுஉழைப்புதான் என்பதில் மாற்றமில்லை. ஒரு படத்தில் மிகவும் வரவேற்புக்குரிய காட்சியை, உதவிஇயக்குநர்கள், அந்தக்காட்சியில் நடித்த நடிகர்கள் அல்லது இயக்குநரின் நண்பர்கள் இப்படி யார் வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஆனால் அதன்பலன் இயக்குநருக்கு மட்டும் கிடைக்கும். இதை நாங்கள் நன்றாக உணர்ந்திருந்ததால் நாங்கள் இருவரும் இணைந்து வேலைசெய்வதில் எவ்விதத்தயக்கமும் இல்லாமல் வேலைசெய்தோம்” என்கிறார் ராஜசேகர்.

palaivanacholaiபாலைவனச்சோலை இவர்கள் இயக்கத்தில் வந்த முதல்படம். பெரியவெற்றியைப் பெற்றபடம். அதற்குப்பிறகு கல்யாணகாலம். அந்தப்படம் ஓடவில்லை. அப்போதே பரீட்சார்த்தமுயற்சியாக அந்தப்படத்தை எடுத்தோம் என்கிறார் ராபர்ட். சுகாசினி, ஜனகராஜ், தியாகு உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் ஒன்றைமணிநேரம் ஓடக்கூடியதாக இருந்தது. 13 அல்லது 14 ரீல் படங்கள் வந்துகொண்டிருந்த நேரத்தில் இது 9 ரீல் படம் என்பதால் மக்களிடம் வரவேற்புப் பெறாமல் போய்விட்டது என்றும் சொல்கிறார்.

அதற்கடுத்து கார்த்திக், விஜி நடித்த தூரம்அதிகமில்லை. இதில் ஒலிபெருக்கிநிலையம் வைத்திருப்பவராக கார்த்திக் நடித்திருப்பார். நாடகக்கலைஞர்களைப் பற்றிப் பேசுகிற படமாக இது இருந்தது. அதுவும் ஓடவில்லை.  “ஆனால் ஏற்கெனவே நாங்கள் ஒருதலைராகம், பாலைவனச்சோலை ஆகிய படங்களில் பெற்ற வெற்றி எங்களுக்குப் பலமாக இருந்தது” என்கிறார் ராபர்ட்.

அதற்கடுத்து சின்னப்பூவே மெல்லப்பேசு. ராம்கி அறிமுகமான படம். அந்தப்படத்தில்தான் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரும் அறிமுகமாகிறார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதற்கடுத்து பறவைகள் பலவிதம் படத்தைத் தொடங்குகிறார்கள். அது தடைபடுகிறது. அதற்குப் பிறகு தொடங்கும் படம் மனசுக்குள் மத்தாப்பூ. பிரபு சரண்யா நடித்த அந்தப்படம் வெற்றி. அதன்பின் பறவைகள் பலவிதம் படமும் வெளியாகிவிடுகிறது.

கதை விவாதங்களில் உங்களுக்குள் ஏதேனும் முரண்பாடுகள் வந்தால்? என்று கேட்டவுடன், “ராபர்ட் என்னைவிட ஐந்தாறு வயது பெரியவர் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வேன்” என்கிறார் ராஜசேகர். “அதுபோன்ற நேரங்களில் இரண்டில் எது சரியாக வரும் என்பதை ஒருமுறைக்குப் பலமுறை விவாதித்து முடிவெடுப்போம், நான் சொல்வது சரியாக இருக்கும் என்று நம்பினால் அவரைத் திருப்தியடையவைத்துவிட்டுத்தான் அதைத் தொடர்வேன்” என்கிறார் ராபர்ட்.   படப்பிடிப்புத்தளத்தில் யார் ஒளிப்பதிவு செய்வது யார் இயக்குவது, வேலையைப் பிரித்துக்கொண்டு செய்வீர்களா? என்று கேட்டதற்கு, “அப்படிக் கறாராகப் பிரித்துக்கொள்வதில்லை சிலபடங்களில் முழுக்க அவர் ஒளிப்பதிவு செய்வார் சிலபடங்களில் நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்” என்கிறார் ராஜசேகர்.

cover_mமனசுக்குள் மத்தாப்பூ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை ஏன்?

“மனசுக்குள் மத்தாப்பூ படத்தின்போது சரண்யாவோடு ஏற்பட்ட காதல் காரணமாக நான் அவரைத் திருமணம் செய்தேன். அதில் ராபர்ட்டுக்கு உடன்பாடில்லை என்று நினைக்கிறேன். அவர் அவருடைய நண்பர் முருகானந்தம் என்பவருக்காக ஒருபடத்தின் தயாரிப்புபொறுப்பைக் கவனிக்கப்போக அதில் பெருத்த இழப்புக்கு ஆளானார். அதை தொடக்கத்திலேயே நான் வேண்டாமென்று சொன்னேன் அவர் கேட்கவில்லை. இந்தக்காரணங்களால் நாங்கள் சேர்ந்து பணியாற்றமுடியாமல் போய்விட்டது” என்கிறார் ராஜசேகர்.

“நாங்கள் இருவரும் ஒருமித்து எடுத்த முடிவுகள் சரியாக இருந்தன. அவருக்குப் பிடிக்காததை நான் செய்தததும், எனக்குப் பிடிக்காததை அவர் செய்ததும் வெற்றிபெறமுடியவில்லை. நாங்கள் இருவரும் பிரிந்ததுதான் மிச்சமாகிவிட்டது” என்றும் சொல்கிறார் ராஜசேகர்.

“நாங்கள் கிருஷ்ணன்-பஞ்சு போலக் கடைசிவரை பிரியாமல்தான் இருப்போம் என்று நினைத்தேன். இப்படிப் பிரிவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்கிறார் ராபர்ட்.

இருவரும் இணைந்திருந்த காலத்தில் சம்பள விசயங்களில் எப்படி? என்றால், அப்போதெல்லாம் பணம் ஒரு விசயமாகவே எங்களுக்குப் படவில்லை என்கிறார் ராஜசேகர். கிடைக்கிற சம்பளத்தைச் சரி பாதியாகப் பிரித்துக்கொள்வோம். பெரும்பாலும் நண்பர்களுக்காகவே வேலை செய்வதால் பெரியஅளவில் சம்பளத்தைப் பற்றிய பேச்சுகள் இருக்காது என்றும் சொல்கிறார். மனசுக்குள் மத்தாப்பூ படத்துக்காக இவர்கள் வாங்கிய சம்பளம் ஐந்து இலட்சம் என்கிறார்கள். அந்தப்படத்தின் நாயகனுக்கு எழுபதாயிரம் சம்பளம் என்பது கூடுதல்தகவல்.

DCIM-35அதற்குப் பிறகு ராஜசேகர், முழுநேரமாக நடிக்கப்போகிறார். நடிப்பு எப்படி? என்றால், 80ஆம் ஆண்டு வந்த நிழல்கள் படத்தில் அவர்தான் நாயகன். வைரமுத்துவின் முதல்பாடலான இதுஒருபொன்மாலைப்பொழுது பாடல் இன்றளவும் அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது. “என் வாழ்க்கையில் மட்டுமல்ல வைரமுத்துவின் வாழ்க்கையிலும் அவருடைய முதல்பாடலில் நடித்தவன் என்கிற முறையில் நான் இருப்பேன்” என்கிறார் ராஜசேகர். நிழல்கள் படத்துக்குப் பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் பிரிந்தபின்னால் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கப்போய்விட்டார். இதுவரை ஆயிரம் தொடர்களுக்குமேல் நடித்துவிட்டார் இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறார். பிரிவுக்குப் பின்னால் ராபர்ட், சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கேயார் படங்களான இரட்டைரோஜா, மாயாபஜார், டான்சர் ஆகிய படங்களுக்கு ராபர்ட்தான் ஒளிப்பதிவு. அதற்குப் பிறகு அவரும் பணியாற்றவில்லை ஏன்?“ நானாக யாரிடமும் போய் வாய்ப்புக்கேட்டதில்லை எனக்கு வந்த படங்களை நான் செய்தேன், கேயார் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது அவருடன் இணைந்து வேலை செய்துகொண்டிருந்தேன். இப்போது அவர் படமெடுப்பதில்லை” என்கிறார்.

இப்போது ஆவணப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு திரைப்படப்பிரிவுக்காக ஆவணப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இருவரும் பிரிந்த பின்னால் இருவரையும் சேர்த்துப் படம் செய்ய வைக்க  சில முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அவை எதுவும் முழுமை பெறவில்லையாம்.

“தமிழ்த் திரைப்படங்களில் முதன்முறையாக ஸ்ட்ரீட் பாய்ஸ் அதாவது தெருப்பையன்கள் என்கிற பாத்திரங்களைப் படைத்தது நாங்கள்தாம். அவர்களுக்கு வீடு உறவுகள் பற்றிப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமிருக்காது. எந்நேரமும் தெருவோரத்திலேயே கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதோடு ஒரு ஹீரோவோடு நான்கு பேர் கூடவே இருப்பார்கள் என்பதையும் நாங்கள்தான் முதன்முதலில் ஒரு தலை ராகம், பாலைவனச்சோலை ஆகிய படங்கள் மூலம்கொண்டுவந்தோம், அதற்கு முன்பெல்லாம் ஒரு ஹீரோவாடு ஒரு காமெடியன் இருப்பார் அவ்வளவுதான். ஹீரோவோடு நான்குபேர் என்பது இன்றுவரை தொடர்கிறது” என்கிறார் ராஜசேகர்.

“நாங்கள் படிக்கிற காலத்தில் வயதான ஹீரோக்கள் விக் வைத்துக்கொண்டு காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடிப்பார்கள். அதைப் பார்க்கவே பிடிக்காது. அதனால் ஒருதலைராகத்தில் உண்மையான கல்லூரி மாணவர்களையே நடிக்கவைத்துப் படமெடுத்தோம்” என்கிறார் ராபர்ட்.

“திரைப்படக்கல்லூரியில் படித்து முடித்துவிட்டு தொல்பொருள் துறையில் புகைப்படக்காரனாக வேலை செய்தேன். ஓராண்டுகூட அதில் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. அந்த வேலை பிடிக்காமல் அதைவிட்டுவிட்டு திரைப்படக்கல்லூரியிலேயே ஒளிப்பதிவைக் கற்பிக்கும் ஆசிரியரானேன். அப்படி ஆசிரியரானதன் பலன் எல்லோருக்கும் ஊக்கம் கொடுத்து வளர்த்தெடுக்கும் மனப்பாங்கு வந்துவிட்டது. எல்லோருக்கும் உதவிகள் செய்யவேண்டும் என்கிற எண்ணத்திலேயே இருந்தேன்” என்கிறார் ராபர்ட். இவர் ஆசிரியராக இருந்தபோது படித்த மாணவர்களில் பி.சி.ஸ்ரீராம், கிச்சாஸ், அழகப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் ராஜசேகருக்கு முதல்திருமணம் முறிவாகிவிடுகிறது. அதன்பின்னர் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்.  ராபர்ட்டுக்கு இப்போது வயது 64. இன்றுவரை அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.  ஆரம்பத்தில் கவனம் முழுவதும் தொழில் மேலேயே இருந்தது. திருமணம் பற்றி எண்ணுகிற நேரத்தில் தொழில் பெரிய இழப்பைச் சந்தித்துக் கையில் காசில்லாமல் இருக்கிறோம் இந்தநேரத்தில் இன்னொரு பெண்ணையும் சிரமப்படுத்தவேண்டாம் என்று நினைத்து திருமணம் செய்துகொள்ளவில்லை” என்கிறார் ராபர்ட். தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்துவருகிறார் இவர்.

— அ.தமிழன்பன்.

நன்றி: ‘அந்திமழை’ இலக்கிய இதழ்

Pin It

Comments are closed.