கபிலன்வைரமுத்து எழுதிய ‘சென்னை மழை’ பற்றிய கவிதை!

kabilan-vairamuthuஇரங்கல் அல்ல எழுதல்

சென்னை குடிகள் கனவுகளை

செம்பரம்பாக்கம் அறியாது

தரையில் குழந்தைத் தவழுமென

தாழ்வுநிலைக்குத் தெரியாது

 

 

எல்லாம் அழிந்தத் தண்ணீரில்

மனிதம் மட்டும் அழியவில்லை

தோளில் சுமந்த நாய்க்குட்டி

கரையில் வந்தும் இறங்கவில்லை

 

வெள்ளம் எழுந்த ஓர் இரவில் பல

உள்ளம் எழுந்தது இங்கேதான்

வெள்ளைச் சட்டை பாம்புகளும்

விளம்பரம் செய்வது இங்கேதான்

 

 

பரிச்சயமான பல நடிகர்

கரங்கள் நீண்டது இங்கேதான்

பெயரே தெரியா பொதுமனிதன்

களத்தில் குதித்தது இங்கேதான்

 

 

கோவில் சன்னதி வாசல்களில்

தொழுகை நடந்ததும் இங்கேதான்

க்ளோரின் மாத்திரை கொள்முதலில்

ஊழல் நடந்ததும் இங்கேதான்

 

 

மழையும் வெயிலும் வரும் போகும்

பருவம் என்பது ஒரு நிகழ்வு

மனிதர் கொள்ளும் பேராசை

அதுதான் உலகின் பேரழிவு

 

 

வெறுமை நம்மைச் சூழ்ந்தாலே – ஒரு

குடிமை உணர்வு  முளைத்துவிடும்

நேர்மை நேரடி மேலாண்மை

பேரிடர் எல்லாம் தடுத்துவிடும்  

 

 

இதுவரை காணா பெருமழைதான்

நகரம் மெல்ல மீண்டு வரும்

இதுவரை காணா அரசியலை

ஒருநாள் கோட்டை கண்டுவிடும்.