கபிலன்வைரமுத்து வசனம் எழுதும் படம்!

kabilan-vairamuthu.lgthகவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் “மீன்”. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன்வைரமுத்து எழுதுகிறார். இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு புதுவிதமான ”ஃபர்ஸ்ட் லுக்”கோடு இம்மாத இறுதியில் படத்தின் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் வெளியான கபிலன்வைரமுத்துவின் மெய்நிகரி நாவலைப் படித்திருக்கிறார் இயக்குநர் ஹரிபாஸ்கர். அது பிடித்துப் போகவே கபிலன் வைரமுத்துவை வசனம் எழுதக் கேட்டிருக்கிறார். கதை தொடர்பான விவாதத்திற்கு பின் கபிலன்வைரமுத்து ஒப்புக்கொண்டார். உதயம் NH4 முதல் அநேகன் படத்தின் தலைப்புப் பாடல் வரை பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதிய கபிலன்வைரமுத்து தற்போது பேய்கள் ஜாக்கிரதை, களம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் இயக்குநர் கலாபிரபு இயக்கி கெளதம்கார்த்திக் நடிக்கும் “இந்திரஜித்” படத்தின் அனைத்துப் பாடல்களையும் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கிறார்.