‘கப்பல்’ விமர்சனம்

kappal-movie-stills-1பள்ளி வயது முதல் வைபவ் மற்றும் நான்கு நண்பர்கள் இணைபிரியாதவர்கள். திருமணம் தங்கள் நட்புக்குத் தடையாக இருக்கும் என்பதால் திருமணம் செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து சத்தியம் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரான வைபவ் ,சென்னைக்கு வேலைதேடி வருகிறார். வந்த இடத்தில் சோனாக்ஷி யைப் பார்க்கிறார். மனம் மாறி காதலிக்க தொடங்குகிறார். சென்னை போன வைபவைக் காண நண்பர்கள் வருகிறார்கள். நால்வரில் ஒருவருக்கு திருமணமாகி விடுகிறது,. அவரை இறந்துவிட்டதாக கூறுமளவுக்கு வெறுப்பு காட்டுகிறார்கள். சென்னை வந்து வைபவ் அறையில் மூவரும் தங்குகிறார்கள். முதலில் தன் காதலை வைபவ் மறைக்கிறார். ஆனால் நண்பர்களோ ஒரு கட்டத்தில் கண்டு பிடிப்பதுடன் பிரிக்கவும் திட்டம் போட்டு செயல் படுகிறார்கள். காதலர்களை நண்பர்கள் பிரித்தார்களா?.. நட்பு வென்றதா காதல் வென்றதா என்பதே ‘கப்பல்’ க்ளைமாக்ஸ்

பள்ளிப் பருவக் காட்சிகள், தத்துப்பித்துத் தனங்கள் என்று முதல் பாதியை நகர்த்திய இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் மறுபாதியில் பிரிக்கத் திட்டமிடுவது என்று தொடங்கியதும் கலகலப்பும் மிதமான விறுவிறுப்பும் கூட்டி விடுகிறார். வைபவ் ஒரு பக்கம் சேரவும்,  நண்பர்கள் ஒரு பக்கம்  பிரிக்கவும் போடும் அசட்டுத் திட்டங்கள் பணால் ஆவது சிரிப்பு வரவழைக்கும்  காட்சிகள்.

வைபவ், கருணாகரன், அர்ஜுனன்,  விடிவி கணேஷ், எல்லாருமே விளையாட்டுத்தனங்களால் சிரிப்பு பட்டாசு கொளுத்துகிறார்கள். காமெடியில் சிலமலிவானவை. பொலிவை விட மலிவே அதிகம்.நாயகி சோனம் பாஜ்வா பொம்மை போல தோன்றுகிறார். கவர்ச்சி பொம்மை போலவே நடிக்கிறார்.

படம் மிகைப் படுத்தப்பட்ட காமெடிஷோ. எனவே திரைக்கதையின் பயணத்தில் செல்லும் ஊர்தியில் ஏறிப் பயணம் செய்பவர்களாகவே அனைவரும் வருகிறார்கள்.நடிப்பில்  குறிப்பிட்ட ஒருவரின் கை  ஓங்க வாய்ப்பில்லை.

பாடல் காட்சிகளில் பிரமாண்டம், கலர்ஃபுல் மயம்  தெரிகிறது. ஷங்கரின் வாசனையும் அடிக்கிறது.கதை காட்சிகளில், பாடல்களில் கலகலப்பு இளமைத் துள்ளலும் உண்டு. சிறுபிள்ளைத்தனமும் உண்டு.சிலவற்றில் அருவருப்பும் கூட உண்டு என்பதுதான் கசப்பு.

அரை மணி நேரத்தில் முடிகிற ஒருகதையை,அதன் திரைக்கதை விளையாட்டை இரண்டு மணி நேரம் விரித்ததில் இயக்குநரின் கீர்த்தி தெரிகிறது. நேர்த்தி தெரிய வில்லை.அடடா..போர்க்கப்பலா. பயணிகள் கப்பலா என்று  எதிர்பார்த்து வந்தால் பாய்மரக் கப்பலாகிவிட்டதே.

காட்சியளவில்தான் கலர்ஃபுல்  கப்பல்.ஆனால் வேகம் குறைவு .