கலைமாமணி விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும்: சித்ரா லட்சுமணன் கோரிக்கை!

தமிழ்நாட்டில் சாதனை படைத்த பல்வேறு கலைஞர்களுக்கு வருடாவருடம் கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த எட்டாண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இந்தக் கலைமாமணி விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று நடிகரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, 

வணக்கம்.

அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தைக் கலைஞர்களுக்கு தருவது ரசிகர்களின் கைதட்டல்களும், பாராட்டுக்களும், அவர்களது திறமையை அங்கீகரிக்கும்விதத்திலே வழங்கப்படுகின்ற விருதுகளும்தான்.

கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் சார்பில் இதுவரை வழங்கப்பட்டு வந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாததால் திரை உலகத்தையும், திரைப்பட கலைஞர்களையும் தமிழக அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டது.

அந்த சந்தேகத்தை அடியோடு போக்கி திரைப்படக் கலைஞர்களின் எண்ண ஓட்டத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கு தரப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளை ஒரே நாளில் அறிவித்த தங்களுக்கு கலை உலகம் மிகப் பெரிய அளவிலே நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

விருதுகளோடு இணைந்து சிறந்த தமிழ் படங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையையும் அறிவித்து வாட்டத்தோடு இருந்த பல தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்களது கொடை உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.

இந்த விருதுகளைப் போலவே 1959-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத்தின் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த ‘கலைமாமணி’ விருதுகளும் 2011-ம் ஆண்டு முதல் எந்த கலைஞருக்கும் வழங்கப்படவில்லை என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கான வழங்கப்படாமல் இருக்கின்ற ‘கலைமாமணி’ விருதுகளையும் அன்பு கூர்ந்து உடனடியாக அறிவித்து தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கலைஞர்களையும் தாங்கள் கவுரவிக்க வேண்டுமென்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.”

அன்புடன்

சித்ரா லட்சுமணன்.

இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

சித்ரா லட்சுமணன்  செயற்குழு உறுப்பினர்- தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்,முன்னாள் செயலாளர் – தமிழ்த் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம்,முன்னாள் உறுப்பினர்- மத்திய திரைப்பட தணிக்கைக் குழு,முன்னாள் உறுப்பினர் – தேசிய விருதுக்கான கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் குழு போன்ற பல பொறுப்புகளில் பங்காற்றியவர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Pin It

Comments are closed.