‘களத்தில் சந்திப்போம்’விமர்சனம்

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள்.கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். ஒருவரை ஒருவர்  ஜாலிக்காக கலாட்டாவுக்காக கலாய்த்துப்பேசி, கவிழ்த்து விளையாடுவார்கள். அப்படி ஒருமுறை அருள்நிதி பற்றி ஜீவா கூறிய வேடிக்கையான சீண்டல் விபரீதமாக அவரது வாழ்க்கையைப் பாதிக்கிறது. அவர்களுக்குள் விரிசல் உண்டாகிறது . அதன்பின் .பிறகு அது சரி செய்யப்படுகிறதா இல்லையா என்பது கதை.
 .

ஜீவா, அருள்நிதி என இருவருமே அந்தந்தக் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்கள். சின்னச்சின்ன சேட்டைகளில், கலாய்ப்புகளில் ஜீவாவும், ஆவேசமாக சண்டையிடுவதில், அடங்கிப் போவதில், அப்பாவி முகம் காட்டுவதில் அருள்நிதியும் ஈர்க்கின்றனர்.

இரட்டை நாயகர்கள் இருக்கும் கதையில் அதி முக்கியக் கதாபாத்திரமாக, நடக்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது மஞ்சிமா மோகனின் கதாபாத்திரம். முதலில் யோசித்து முடிவெடுப்பது, எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது, தன் காதல் மேல் தைரியமாக இருப்பது என நடிப்பில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படம்.

மற்றொரு நாயகி பிரியா பவானி சங்கர் திரையில் இருக்கும் நேரம் குறைவென்றாலும் அவர் நடிப்பில் குறையில்லை. அவரது கதாபாத்திரமும் திரைக்கதையில் முக்கியமான ஒன்றாகவே படைக்கப்பட்டுள்ளது. நாயகர்களை வழிநடத்தும் அனுபவஸ்தராக ராதாரவி, எப்போதும் போல தனது நிஜ நடிப்பு அனுபவத்தோடு அந்தக் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். ஆடுகளம் நரேன், இளவரசு, ரேணுகா என மூத்த நடிகர்கள் அனைவருமே கச்சிதம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய ஏமாற்றம் . பின்னணி இசை பரவாயில்லை . 

தமிழ் சினிமாவில் இரட்டை நாயகர்கள் இருக்கும் திரைப்படங்களில் அதிலும் இருவருமே முதன்மை கதாபாத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் யாராவது ஒருவர் இன்னொருவருக்காக சற்றே அதிக இடம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் இருவருக்குமே சரிசமமான முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சியமைப்புகளாலும், திரைக்கதையினாலும் பாராட்ட வைக்கிறார் இயக்குநர் ராஜசேகர். 
  ஒருவருக்கொருவர் பெண் பார்க்கும் காட்சிகள் ,கபடி விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நல்ல மணமுள்ள கமர்சியல் தாளிப்புகள்.
கலகலப்பாக தன்னை மறந்து தியேட்டரில் ரசிக்கும்படியான வணிக மசாலாப் படம்