‘காடன் ‘ விமர்சனம்

வனமும் வனம் சார்ந்த பகுதிகளுமே படத்தின் ஆதாரம். யானைகள் நடமாட்டம் நிறைந்த ஒரு வனப்பகுதியை ஒரு சாமியாரும் ஒரு மத்திய அமைச்சரும் கார்ப்பரேட் கம்பெனி என்ற பெயரில் ஆக்ரமிக்கத் திட்டமிட்டு வனத்தின் ஒரு பகுதியில் மிகப் பெரிய காம்பவுண்ட் சுவர் எழுப்புகிறார்கள். 


ஈசா மையத்தின் ஜக்கி வாசுதேவ் நினைவுக்கு வர வேண்டும் என்பதற்காகவே அவரைப் போலவே ஒரு சாமியாரை ரெடி செய்து இதில் டான்ஸ் ஆட விட்டிருக்கிறார், இயக்குநர் பிரபு சாலமன். 


அந்த காம்பவுண்ட் சுவரால் தங்கள் வழித்தடத்தில் குழப்பம் கொண்ட யானைகள் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் நுழைகின்றன. சிறுவனாக இருந்தபோதே அந்த யானைகளுக்குத்  தமிழ் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்து அவைகளுடனே பயணிக்கும் ஹீரோ, அந்த மத்திய அமைச்சரை எதிர்த்து யானைகளின் வழித்தடத்தை எப்படி மீட்டுக் கொடுத்தான் என்பதுதான் கதை.

கொஞ்சம் பிசகினாலும் காடுகள், அதன் வளங்கள், அதனால் நாம் அடையும் பயன்பாடுகள், அங்கே யானைகளின் மூலம் மரங்கள் வளரும் உண்மைகள் என்று ஒரு டாக்குமெண்டரி படமாக வேண்டிய கதையை, கமர்ஷியலாக வடிவமைத்து ஒரு ஒளிச்சித்திரமாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் பிரபு சாலமன். ஒளிப்பதிவின் ஒவ்வொரு ஷாட்டிலும் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ராஜி. வனப்பகுதிகளின் ஒலிக்கலவையை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஆஸ்கார் வென்று வந்த ரசூல் பூக்குட்டி. 
தெலுங்கில் பிரபல நட்சத்திரம் ராணா, ஹீரோவாக இதில் அறிமுகமாகிறார். கூடவே நம்மூர் விஷ்ணு விஷாலும் உண்டு. இவர் ஒரு கும்கி யானையின் பாகனாக வருகிறார். மேலோட்டமாக இருக்கிறது இவரது பாத்திரம். அந்த வனத்திற்குள் இருக்கும் ஒரு தீவிரவாத பெண்ணை இவர் விரும்புவதாக சில காட்சிகள். இறுதியில் அந்த கும்கி யானையும் அந்தப் பெண்ணும் இறந்து போக இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்ற கேள்வி எழாமல் இல்லை.
படம் முழுக்க ஹீரோ ராணாவின் முகம் சில நேரம் அலுப்பைத் தருகிறது.. அடிக்கடி அவர் தலையைச் சிலுப்பிக் கொள்ளும் மானரிசம் பிதாமகனில் விக்ரம் கேரக்டரை நினைவுபடுத்துகிறது. இவைகளை தவிர்த்திருக்கலாம். ஆக்ரோசமான ஆக்க்ஷன் ப்ளாக்குகளில் ராணாவின் கடுமையான உழைப்பு தெரிகிறது.
வியட்நாம், தாய்லாந்து, இந்தியாவின் பல வனப்பகுதிகள் என்று நான்கு வருடங்கள் பயணித்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சொல்லப்பட்ட துணிச்சலான மையக்கருத்துக்காக பல விருதுகளை அள்ளி வரலாம்.