‘காடு’ விமர்சனம்

காடு என்பது இயற்கை வளம். காடு வேண்டிய எல்லாம் தரும். அதை அழிக்கக் கூடாது காடழிந்தால் நாடு அழியும். இப்படி காட்டை அழிக்கக் கூடாது என்கிற கருத்தை வெறும் செய்தியாகச் சொன்னால் அது எடு படாது.
Kaadu-Movie-Stills-13rs
இதே கருத்தை காடு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையாகச் சொன்னால் ரசிக்கப் படும். அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது. ‘காடு’.

வேலு என்கிற விதார்த் காடு சென்று பட்டுப் போன விறகுகளை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பவர். அப்படி ஒரு உணவு விடுதிக்கும் கொடுப்பதோடு விடுதியின் மகள் சம்ஸ்கிருதாவையும் விரும்புகிறார். அந்தக் காட்டில் நல்ல உயிர் மரங்களை வெட்டுவதுடன் சந்தனமரங்களையும் கடத்துகிறது ஒரு கும்பல்.

வேலுவான விதார்த்தின் நண்பன் கருணாவாக  முத்துக்குமார். காட்டிலாகா அதிகாரி கனவில் இருப்பவர். அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க முடியாமல் தவிக்கும் அவர், மரக்கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுகிறார். நண்பனின் அரசு வேலைக் கனவை நிறைவேற்ற கடத்தலில் பழிசுமந்து ஜெயிலுக்குச் செல்கிறார் விதார்த்.ஆனால் ஜாமீனில் மீட்பதாக கூறிய நண்பன் வார்த்தை தவறுகிறார். விதார்த்துக்கு சிறையில் சமுத்திரக்கனியின் நட்பு கிடைத்து காடழிப்புக்கு எதிராக பொங்கி எழுகிறார் விதார்த்.அவர்  நண்பனை பழிவாங்கினாரா? காதலில் ஜெயித்தாரா என்பதே மீதிக்கதை.

காட்டின் பின்னணியில் நல்ல தொரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம்.

விதார்த் காதல், ஆவேசக் காட்சிகளில் பளிச்சிட்டுள்ளார். சம்ஸ்கிருதா குடும்பப் பாங்கான வரவு. சமுத்திரக்கனிக்கு அழுத்தமான வேடம். புரட்சிக்காரராக வந்து திடுக் முடிவில் மனதில் தைக்கிறார்.

காடு சார்ந்த மக்கள் வாழ்க்கையை, கொண்டாட்டத்தை,அநியாயங்களை, அரசியலை , அழகாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர். வேலு,கருணா பாத்திரங்கள் மூலம் வேறு பிரபாகரன், கருணா குணசித்திரங்களை குறியீடாக எண்ணும்படி அமைத்துள்ளார்கள். காடு என்பதை நாடு என்றும் கொள்ள முடியும்.

மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு காட்டை ரசிக்க வைக்கிறது. இமானின் இசையில் பாடல்கள் இதம்.

இயக்குநர் காட்சிகளில் மட்டுமல்ல வகனங்களிலும் பளிச்சிடுகிறார். ‘காடு’ வரவேற்கப்பட வேண்டிய படம்.

காடு செழித்தால் நாடு செழிக்கும் காடு ஓடினால் நல்ல சிந்தனைகள் சினிமாவில் வளரும்.