காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி!

மிருகம், அரவான்,மரகத நாணயம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கிளாப், விரைவில் வெளிவரவிருக்கும் வாரியர். போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆதி. அதேபோல் டார்லிங், யாகாவாராயினும் நா காக்க,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி .

ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வந்தனர். தற்போது குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நடக்க உள்ளது. மே மாதம்18ம் தேதி இவர்கள் திருமணம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் திரையுலகினர், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் இன்று ஊடகங்ளைச் சந்தித்தனர். அப்போது ஆதி கூறியதாவது:

“இதே கிரீன்பார்க் ஓட்டலில் தான் மிருகம் படத்திற்காக உங்களைச் சந்தித்தேன். அதற்குப்பின் என்னை எல்லாருக்கும் கொண்டு சென்றீர்கள்.நீங்கள் இல்லாமல் என் வளர்ச்சி சாத்தியப் பட்டிருக்காது. உங்களை முதலில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நிக்கியுடன் எனது திருமணம் நடக்க உள்ளது.இந்தத் தருணத்தில் இருந்து என்னுடைய திருமண ஏற்பாடுகள் தொடங்குகின்றன.

இருவரும் பல முறை சந்தித்துக்கொண்டபோதும் இருவரும் ஒருவரை யொருவர் காதலிப்பதாகக் கூறிக்கொள்ளவில்லை.ஏழாண்டுகள் நட்புடன் பழகினோம். ஆனால் எங்களுக்குள் காதல் இருந்தது. நிக்கியின் அழகு அவரது துணிச்சல் எனக்குப் பிடிக்கும். எனக்கு நிக்கியை பிடிக்கும் என்னைவிட என் குடும்பத்தினருக்கு அவரை ரொம்பவே பிடிக்கும் .இது வழக்கமான காதல் திருமணம் இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் திருமணம்.

எங்களது திருமணம் திரையுலகினர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடக்க உள்ளது”

இவ்வாறு ஆதி கூறினார்.

நிக்கி கல்ராணி கூறியதாவது:

ஆதியை அவருடன் சேர்ந்து நடித்த மரகத நாணயம் படத்திற்கு முன்பிருந்தே தெரியும் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம். திருமணத்துக்கு பிறகு நான் நடிப்பதா? இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு நிக்கி கல்ராணி கூறினார்.