‘கார்பன் ‘ விமர்சனம்

மீண்டும் மீண்டும் தோன்றும் காட்சிகள் வரும்படி கதை சொல்வது இப்போதைய போக்காக மாறியுள்ளது .மாநாட்டைத் தொடர்ந்து அதே பாணியில் வந்திருக்கும் படம் ‘கார்பன் ‘. ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்?

நல்லது நடந்தால் சரி. ஆனால் கெட்டது நடந்தால்? இந்தக் கற்பனையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் ‘கார்பன்’.

நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது.

அப்பா தண்டச்சோறு என்று திட்டியதால் வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கித்தான் அப்பாவிடம் பேசுவேன் என்று வாட்ஸ் அப் மூலம ஆடியோ அனுப்பிய தொடர்புகொள்ளும் வைராக்கிய மகனாகவும் தன் தந்தை ஆபத்தில் இருப்பதை உணர்ந்து காப்பாற்ற துடிக்கும் பாசமுள்ள மகனாகவும் குற்றவாளிகளைப் பிடிக்க புத்திசாலித்தனமாக செயல்படும் ஒரு அறிவுள்ள இளைஞனாகவும் பல காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

நாயகி ஸ்வப்னாவின் வேடம் வித்தியாசமானது. டூயட் பாடி காதலிப்பது மட்டும்தான் தன் வேலை என்று நினைத்து இருந்தால் வில்லத்தனமான இன்னொரு முகம் காட்டி படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து,
பிள்ளைகள் நன்றாக இருப்பதைப் பார்க்கும் சந்தோஷத்தை விட அப்பாவிற்கு வேறென்ன வேண்டும் என்றும் தன் மகனை போலீசாக்கி அழகு பார்ப்பதே தனது கனவு என்றும் மிடில் கிளாஸ் மனதோடு வாழ்கிறார்
பாசக்கார அப்பாக்களின் அச்சு அசலான பிரதியாக நெகிழ வைத்திருக்கிறார்.

தலைமைக்காவலர் மூணார் ரமேஷ், இளநீர் வியாபாரி விக்ரம் ஜெகதீஷ், காப்பீட்டுத்திட்ட முகவர் டவுட் செந்தில்,ஏடிஎம் பாதுகாவலர் மூர்த்தி எனப்பலரும் மனதில் பதிகிறார்கள்.அந்த அளவிற்கு அவர்களைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்தோடு இணைந்திருக்கிறது.

சாம்.சி.எஸ்ஸின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை சிறப்பு.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், முதல்பாதியிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கார்பனை எழுதி இயக்கியிருகும் ஆர்.சீனுவாசன்,நல்லதொரு கதைக்களத்தை வைத்துக் கொண்டு நேர்த்தியான படத்தைக் கொடுத்திருக்கிறார்.குறைவான பட்ஜெட்டில் நிறைவான படைப்பைக் கொடுத்திருக்கிறார். அம்மாவை ஈடுசெய்ய மனைவி வருவார் ஆனால் அப்பாவுக்கு இணையாக வாழ்வில் யாரும் வரமாட்டார்கள் என்பது உட்பட பல நல்ல வசனங்களை எழுதியிருக்கிறார்.
கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சங்களையும் கலந்திருந்தால் கார்பன் பிரதியின் வெற்றி தெளிவாக இருந்திருக்கும். ஆனாலும் எடுத்துக்கொண்ட கதைக்கும் திரைக்கதைக்கும் நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர்.