’காலா ’விமர்சனம்

கதைக்காக மட்டுமே நடிகர்கள் என்கிற போக்குடைய ரஞ்சித் இயக்கியுள்ள காலா என்ன கதை?

திருநெல்வேலியில் இருந்து பிழைப்புக்காக மும்பையில் குடிபெயர்ந்தவர்  வேங்கையன் .அவரது மகன்தான் கரிகாலன் என்கிற ரஜினிகாந்த் .அதாவது காலா. ஒரு காட்பாதர் போல மும்பை தாராவி பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு பல உதவிகளையும்  செய்து வருகிறார். அரசியல் பலம் கொண்ட நானா படேகர், மும்பையைச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் தாராவி மக்களை  அகற்றி விட்டு அந்த இடத்தை அபகரிக்க நினைக்கிறார். இதற்கு ரஜினி எதிர்ப்பு தெரிவிக்கிறார். ரஜினியை அழிக்க நானா படேகர் பல சதிகளைச் செய்ய, அந்த சதிகளை முறியடித்து தாராவியை காலா ரஜினி எப்படி மீட்கிறார், என்பது தான் படத்தின் கதை.

ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்த படமாகவே ‘காலா’ வை இயக்குநர் ரஞ்சித் கையாண்டுள்ளார். ரஜினியின் வயதுக்கு ஏற்றவாறு அவரின் கதாபாத்திரத்தை சித்தரித்திருக்கிறார்., அதே சுறுசுறுப்பு விறுவிறுப்பு என்று ரசிகர்கள் கைதட்டும் அளவுக்கும் ரஜினியை காட்டியிருக்கும் ரஞ்சித், ‘கபாலி’-யில் வைத்த சில குறைகளை இதில் சரி செய்துவிட்டார்  எனலாம்.

தனக்காக படத்தின் போக்கை மாற்றாமல் படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின், ஹீரோயிசம் எந்த அளவுக்கு ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறதோ அதே அளவுக்கு அவரது நடிப்பும் ரசிக்க வைக்கிறது. நரைத்த தாடியுடன் தனது மனைவியை கொஞ்சுவதும், முன்னாள் காதலியைப் பார்த்ததும் பழைய நினைவில் ஏங்குவது என்று நடிப்பில்  மின்னுகிறார்.

ரஜினியை சுற்றி மட்டுமே கதை நகராமல், அவரை சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

நிலம் தான் மக்களின் உரிமை, என்பதை காட்சிகள் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரஞ்சித், முதல் முறையாக  வில்லன் இமேஜ் உள்ள ராவணனை ஜெயிக்க வைத்திருக்கிறார்.

சிறுமி ரஜினியின் காலில் விழ வரும்போது,  வணக்கம் சொன்னால் போதும், காலில் விழ வேண்டாம், என்று சொல்லும் காட்சி சமத்துவத்தை பேசுவதோடு, சிறுவர்களை எப்போதும் நல்லா படிக்கணும்…படிக்கணும்…என்று அவர் சொல்லும் காட்சிகள், படிப்பு தான் மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதையும் வலியுறுத்துகிறது.

 வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கிறார் நானா படேகர். . ரஜினியின் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், ஹூமா குரோஷி ஆகியோரம் நடிப்பால் மக்கள் மனதில் பதிகிறார்கள். சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் தங்களது நடிப்பால் மக்கள் மனதில் நின்றாலும், ரஜினியின் மகன்களின் ஒருவராக லெனின் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ரொம்பவே கவனிக்க வைக்கிறார்.

முரளி.ஜி யின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

மும்பை தாராவி போல செட் அமைக்கப்பட்டிருந்தாலும், அதை செட் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு பிரம்மாண்டத்தோடு ஒரிஜினலாக இருக்கிறது. கலை இயக்குநருக்கு சபாஷ்.

திரைக்கதை, காட்சிகள் வடிவமைப்பு, நடிகர் நடிகைகளின் நடிப்பு என்று அனைத்து ஏரியாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குநர் ரஞ்சித் பதிகிறார்.  ரஜினியை வைத்தே அரசை சில இடங்களில் விமர்சித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் ரஜினிக்கே தெரியாமல் தாராவி பகுதியில் பில்டர் ஒருவர் பூமி பூஜை போட, ஒரு இளைஞர் சொல்லிய பிறகு ரஜினிக்கு அந்த விஷயம் தெரிய வருகிறது. தாராவியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஜினிக்கு தெரியாமல் பூமி பூஜை நடக்கும் காட்சி  நம்பகமின்றி  இருக்கிறது.

நானா படேகர், தாராவி பகுதிக்கு வந்து ரஜினியை மிரட்டி விட்டு போகும் போது, ரஜினிகாந்த் ‘நான் உன்ன போகவே சொல்லலயே…” என்று சொன்ன பிறகு, அங்கு நடக்கும் சம்பவங்களும், அதை பார்த்து அதிர்ந்து போகும் நானா படேகர், திரும்பி வந்து ரஜினியிடம் அனுமதி கேட்கும் காட்சி கைதட்டல் பெறும்.

ரஜினிகாந்த் – நானா படேகர் இடம்பெறும் காட்சிகள் எல்லாமே அனல் பறக்கும் காட்சிகள். அவை  மக்களின் உரிமையை பற்றி பேசும் காட்சிகளாகவும் உள்ளன.

 மொத்தத்தில் காலா எளிய மக்களின் குரல் உயர்த்தி  ஒலிக்கும் படம்.

Pin It

Comments are closed.