‘கிரிஷ்ணம் ‘விமர்சனம் 

பதின்பருவ மாணவன் ஒருவன் நோயில் விழுந்து மரணத்தை வென்ற கதையே கிரிஷ்ணம் படமாக உருவாகி இருக்கிறது. இதுகேரளாவில் ஒருவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.P.N.பலராமன் கதை எழுதி தயாரித்துள்ள இப்படத்தில், அக்ஷ்யகிருஷ்ணன் , ஐஸ்வர்யா உல்லாஸ் . சாய்குமார் ,சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு, அஞ்சலி உபாசனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனம், இயக்கம் : தினேஷ் பாபு.

 இசை : ஹரிபிரசாத்.R .

வரும் 15ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது.

ஒரு பக்திப்படத்தை அப்படியே எடுக்காமல் அழகான சமூகப்படமாக உருவாக்கியுள்ளனர் .

 

கல்லூரி மாணவன் அக்ஷய் கிருஷ்ணாவுக்கு வந்திருக்கும் பிரச்சினை 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வருவது. 
 அவரது பிரச்சினை குணமாகும் சாத்தியம் 10 சதவீதம்தான் என்கிறார் டாக்டர் ஒருவர்.  ஒரு சதவீதம்தான்  என்கிறார் மற்றொருவர் .  சாத்தியமே இல்லை என்கிறார் இன்னொருவர் . இப்படி  செய்வதறியாது நின்று மருத்துவ நிபுணர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது படம் . ப்ளாஷ் பேக்காக முன் காட்சிகள் விரிகின்றன.

அக்ஷய் கிருஷ்ணாவின்  அப்பா பாலகிருஷ்ணன் ஒரு  பிசினஸ்மேன். மகனுக்குச் செலவழிக்கப் பணத்தையும்  செயல்பட உரிமையையும் வாரி வழங்குகிறார். அம்மா மீராவும் பாசத்தைக் கொட்டுகிறார். 

இப்படிப்பட்ட அக்ஷய்  படிப்பில் விளையாட்டில் படு சுட்டி.  உற்சாகம் பீறிட ஆர்வத்துடிப்பு  டன் இருக்கும் அவனுக்கு நண்பர்கள் அதிகம். அதே கல்லூரியில் படிக்கும் ராதிகா என்கிற மாணவி மீது காதல். அவளோ ஆச்சாரம் குறையாத பிராமண குடும்பத்துப் பெண். முதலில் தவிர்க்கிறாள். விலகுகிறாள். பிறகு மனம் மாறுகிறாள்.

இப்படி இருக்கும் சூழலில் கல்லூரிகளுக்கிடையிலான  நடனப் போட்டிக்குத் தயாராகிறார்கள்.

 அக்ஷய் நண்பர்கள் சூழ பயிற்சி எடுக்கிறான். ஆயத்தப் பயிற்சியின்போது கீழே விழுந்து அடிபடுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.முதலில் சின்னப் பிரச்சினை என்று தொடங்குகிறது. ஆனால்  போகப்போக உள்ளுறுப்புகள் செயலிழப்பதாகப்  பெரிது பெரிதாகச் சொல்லி டாக்டர்கள் பயமுறுத்துகிறார்கள்.

பிழைக்கும் சாத்தியக்கூறுகள் குறைந்து கொண்டே போகும் தருணம் அவனது அப்பா மட்டும்  குருவாயூரப்பன் மீது நம்பிக்கையில் இருக்கிறார். அது கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருந்தாலும் அவர் விடவில்லை ;மனம் தளரவில்லை. கடைசியில் ஒரு அற்புதம் நிகழ்கிறது மருத்துவ அறிவுக்கு எட்டாத அதிசயம் அது. அனைத்து பிரச்சினைகளையும் சவால்களையும் சிக்கல்களையும் துடைத்தெறிகிறது அந்தத் தருணம்.  அது என்ன என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

இதில் நிஜ வாழ்க்கையில் அனுபவப் பட்ட  கதையின் நாயகன் அக்ஷய கிருஷ்ணாவே படத்தில் நடிகராக அந்தப் பாத்திரத்தில்  நடித்து இருக்கிறார் .ஒரு தேர்ந்த நடிகரைப் போல அத்தனை பாவங்களும் காட்ட வாய்ப்பு .நடிப்பு அனுபவம் உள்ளவரைப் போல் இயல்பாக நடித்துள்ளார்.  அனுபவம்  இல்லாத ஒருவர் போல் தெரியவில்லை. நிஜ அனுபவசாலியே பாத்திரமேற்றுள்ளவர் என்பதை அறியும் போது அவர் மீது கூடுதல் அனுதாபம் ஏற்படுகிறது.காதலி ராதிகாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா உல்லாஸ் சுமார் மூஞ்சி குமாரி. சாதாரண நடிப்பை வழங்கியுள்ளார்.

 தந்தையாக நடித்திருக்கும் சாய்குமார் ஒரு நோயாளி மகனின் தந்தையாக மனப் புழுக்கத்தையும் பாசப்போராட்டத்தையும் ஆரவாரமில்லாமல்  வெளிக்  காட்டியுள்ளார். அம்மாவாக நடித்திருக்கும் சாந்தி கிருஷ்ணா அழகான பாசமுள்ள அம்மாவாக வருகிறார். மகனுக்கு நேர்ந்தது அசாதாரண பிரச்சினை என்பதை அறிந்து தவிக்கும் தவிப்பை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் கதையும் காட்சிகளும் 90% நிஜத்தில் நிகழ்ந்தவை. அவற்றைப்  படமாக்கும்போது ஆவணப்படமாக – ஒரு டாகுமெண்டரி ஆக மாறிவிடும் ஆபத்து உள்ளது .ஆனால் அந்த விபத்து நிகழ்ந்துவிடாமல் காட்சிகளைச் சுவாரஸ்யப்படுத்தி உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தினேஷ் பாபு. அவரே ஒளிப்பதிவாளராக இருந்ததால் மேலும் நேர்த்தியாக காட்சிகளை அமைத்துள்ளார். அளவான  தேவையான  லொக்கேஷன்களே பயன்படுத்தப்பட்டுள்ன என்றாலும் கதையின் போக்கில் அவற்றில் நம் கவனம் செல்லவில்லை. பாத்திரங்களும் உணர்ச்சிகளுமே முக்கியம் என்பதால் மற்றவற்றை புறந்தள்ளி விடுகிறோம்.

படத்தின் முதல் பாதி மித வேகத்தில் சென்றாலும் இரண்டாம் பாதி நம்மை இறுக்கத்துடன் கட்டிப் போட்டு இருக்கை நுனியில்அமர்த்தி வைத்து விடுகிறது. காரணம் குறையில்லாத  திரைக்கதை .

பாடல்கள் பெரிதாகக் கை கொடுக்கவில்லை என்றாலும் பின்னணியில் அதை சமன் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் ஹரிபிரசாத்.

 குருவாயூரப்பன் பக்தி மகிமை பற்றிய ஒரு டாகுமெண்டரி கதையை எடுத்துக்கொண்டு போரடிக்காத திரைக்கதை  , அளவான வசனங்கள் ,அழகான ஒளிப்பதிவு என்று திரை வடிவம் கொடுத்து படமாக்கிய விதத்தில்  இயக்குநர் தினேஷ் பாபு வெற்றி பெற்றிருக்கிறார்.
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 

Pin It

Comments are closed.