வில்லன் நடிகர்கள் கூட வெளிமாநில இறக்குமதியா: வில்லன் நடிகர்ஆர்யன் குமுறல்!

_A8A7790கஸ்தூரிராஜா மூலம் ‘ட்ரீம்ஸ்’ படத்தில் அறிமுகமான ஆர்யன், விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ யில் பான்பராக் ரவியாக நடித்தபிறகு  பான்பராக் ரவி என்கிற அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கே போனாலும்அந்தப் பெயர் சொல்லியே  அழைக்கிறார்களாம். இனி ஆர்யனுடன் பேசுவோம்!

கொஞ்சம் முன்கதை..? 

நடிப்பு மீதுள்ள காதலில் நாடகங்களில் நடித்து வந்தேன். லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட் ப்ளே தியேட்டர்ஸில் நிறைய நடித்தேன்.அவற்றில் ‘எட்டு திருடர்கள்’, ‘ஜீசஸ் க்ரைஸ்ட்’ முக்கியமானவை ,பல முறை அரங்கேற்றப் பட்டவை. இன்று என்னை ‘பான்பராக்ரவி’ என்கிறார்கள். ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள்.ஆனால் நான் ஜீசஸாக.- ஏசு கிறிஸ்துவாக நடித்தவன். ‘ஜீசஸ் க்ரைஸ்ட்’ என்கிற அந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் அச்சு அசலாக என் தோற்றம் ஏசு கிறிஸ்துவைப் போலவே இருப்பதாகக் கூறுவார்கள். இப்படி இருந்த நான், கஸ்தூரிராஜா சாரால் ட்ரீம்ஸ்’ படத்தில் அறிமுகமானேன். அதன் வெளியீடு தாமதப் பட்டது. அதில் வந்திருந்த படங்கள் மூலம் என் தோற்றத்தை, பார்த்து பேரரசு சார் மூலம் ‘திருப்பாச்சியில்’ பான்பராக் ரவி பாத்திரத்தில் அறிமுகமானேன் அந்தப் பெயர்தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

_A8A7870ஒரு பாத்திரம் பேசப்படுவது இயற்கைதானே?

ஒரு பாத்திரம் பேசப்படுவது இயற்கைதான் .அது அந்த அளவுக்குப் பேசப்படுகிறது, போய்ச் சேர்ந்திருக்கிறது மகிழ்ச்சிதான். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிட்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருந்துவிடக் கூடாது. காரணம் எந்த ஒரு கலைஞனுக்கும் மாற்றம் தேவை. ஒரு வட்டத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டு இருந்து விட முடியாது.அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.

‘திருப்பாச்சி’ க்குப் பிறகு ‘ஆறு’, ‘ஆழ்வார்’,’சபரி’, ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ ,’அலெக்ஸ் பாண்டியன்’ சமீபத்தில் வந்த சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ வரை இருபது படங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனாலும் இன்னமும் என்னை பான்பராக் ரவி என்றே கூப்பிடுகிறார்கள் என்றால் அதைத் தாண்டும் அளவுக்கு  அடுத்த படம் பண்ணவில்லை என்றுதானே அர்த்தம்..? எனவேதான் அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.

இடையில் இடைவெளி ஏன் ?

‘திருப்பாச்சி’ படத்துக்குப் பிறகு அதே போல ரவுடி ,தாதா, பொறுக்கி என்றே வாய்ப்புகள் வந்தன என்று தவிர்த்து வந்தேன். நான் பாசிடிவ் நெகடிவ் என்று எப்படியும் நடிக்கத் தயார். ஆனால் ஒரே மாதிரி நடிக்க விருப்பமில்லை.
இடைவெளி யோசிக்க வைத்தது. பக்குவம் கொடுத்தது. நிறைகுறைகளை ஆராயவைத்தது. நாம் என்ன செய்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்த்து யோசிக்க வைத்தது.

இப்போது நடித்து வருபவை?

இப்போது நல்ல மாற்றத்தை உணர்கிறேன்.  புதிய மாற்றமாக இப்போது நல்ல நல்ல வித்தியாசமான வாய்ப்புகளில் நடித்து வருகிறேன்.  பரத் – இனியா நடிக்கும் ‘பொட்டு’ என்கிற படத்தில் நடிக்கிறேன்.வடிவுடையான் இயக்கும் படம்.பரத், நெப்போலியன், நான்,என்று நல்ல கூட்டணி.

அதில் எனக்கு முழுக்க  முழுக்க பாசிடிவான  ரோல். இது நிச்சயம் எனக்குத் தலைகீழ் மாற்றமாகத் தெரியும். இரண்டு பாடல் காட்சி உண்டு என்றால் பாருங்கள் .படத்தின் முதல்பாதி கிராமம், மறுபாதி நகரம் என்று இருக்கும். கொல்லி மலையில் படப்பிடிப்பு நடந்தது.

இன்னொரு படம் ‘முத்துராமலிங்கம்’ . கௌதம் கார்த்திக் நாயகன். ப்ரியா ஆனந்த் நாயகி. முழுக்க முழுக்க இது நேட்டிவிட்டி சட்ஜெக்ட். ராஜதுரை இயக்குகிறார். திருநெல்வேலி மண் சார்ந்த கதை.

அஞ்சலி நடிக்கும் ‘காண்பது பொய்’ மற்றொரு நல்ல வாய்ப்பு. பெண்களை மையப் படுத்திடும் கதை.  _A8A7745

இது தவிர ‘ராதானேகண்டா’ என்கிற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறேன். கோமல் குமார் நாயகன். பூர்ணா நாயகி. இது ஒரு சினிமா உலகம் சம்பந்தப்பட்ட கதை.

கதாநாயகிகளைப் போலவே வில்லன் நடிகர்களையும் பிற மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்கிறார்களே?

கலைக்கு மொழி கிடையாதுதான். ஆனாலும் இங்கேயே ஆட்கள் இருக்கும் போது வெளியிலிருந்து அதுவும் வில்லன் நடிகர்களை அழைத்து வருவது வருத்தமாக இருக்கிறது இங்கே இலையென்றால் பரவாயில்லை, திறமையானவர்கள் பலர் இங்கேயே இருக்கும் போது இப்படிச் செய்யலாமா?  வருத்தமாக இருக்கிறது.

உடன் நடித்த கதாநாயக நடிகர்களிடம்  பிடித்தவை?

‘திருப்பாச்சியில் நடித்த போது விஜய் சார்கூட நெருங்கிப் பழகத் தயக்கம். ஏனென்றால் அது எனக்கு முதல் படம் மாதிரி. அவர் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். ‘ஆழவாரில்’ அஜீத் சார்கூட நடித்த போது யதார்த்தமாகப் பேசுவார் பழகுவார் .எதுவும் நிரந்தரமில்லை என்று கூறிக் கொண்டே இருப்பார். நாம் நம் வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார்.

சூர்யா, கார்த்தி இருவரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்கிற பந்தா இல்லாமல் சகஜமாகப் பழகினார்கள். அவர்களது பழக்கம் கண்டு, குடும்ப வளர்ப்பு பற்றி பெருமைப் பட்டேன். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருஅனுபவம்.