‘கீ’ விமர்சனம்

ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது நடிப்பில் அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘கீ’ எப்படி ?
 
 ஜீவா, ஆர்ஜே பாலாஜி இருவரும் ஒன்றாக கல்லூரியில் படிக்கின்றனர். அனைத்து தேர்விலும் தோல்வி என்றாலும் ஜீவா ஹேக்கிங்கில் அதிக ஆர்வம் கொண்டு அதில் திறமையை வளர்த்துக்கொள்கிறார்.  கல்லூரித்தேர்வு நடக்கும் முன்பு கேள்வித்தாளைத் திருடுவது, பெண்கள் பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் போனை ஹேக் செய்வது என சில விஷயங்களுக்காக ஹேக்கிங் செய்துவருகிறார் ஜீவா. அதே நேரத்தில் காலேஜ் ஜூனியர் நிக்கி கல்ராணி உடன் காதல் செய்கிறார்.

ஆனால் மற்றொருபுறம் வில்லன் சிலரின் போன்களை ஹேக் செய்து அதில் உள்ள டேட்டாவை பயன்படுத்தி அவர்கள் மிரட்டி பணம் பறிப்பது, கொலை செய்வது, தூண்டிவிட்டு தற்கொலை செய்து கொள்ளவைப்பது என சில மோசமான விஷயங்கள் செய்துவருகிறார்.

அந்த வில்லன் குழுவை ஜீவா தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பது தான் மீதி படம்.

உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு வசதிகள் இருக்கிறதோ அதை விட பல மடங்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை தான் இயக்குநர் காளீஸ் இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார். 

 
 ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா ஆகியோர்  பற்றி குறிப்பிட்டு சொல்ல அவர்களது கதாபாத்திரம் மனதில் நிற்கும்படி இல்லை.
 
 விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே ஏதோ படத்தில் இருக்க வேண்டுமே என்ற நிலையிலேயே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவுக்கும் அதே நிலை தான்.
 
இயக்குநர் காளீஸ், சீரியஸான இடத்தில், குடும்ப செண்டிமெண்ட், காதல் பிரிவு, காமெடி என்று திரைக்கதையை வேறு பாதையில் பயணிக்க வைப்பதோடு, ஹீரோ கதாபாத்திரத்தை இடைவேளை முடிந்த பிறகு கூட கதைக்குள் கொண்டு செல்ல வில்லை.

ஹேக்கிங் செய்பவர்கள் அனைவரும் ஒரு 100 இன்ச் ஸ்க்ரீன் முன்பு அமர்ந்து தான் அனைத்தையும் செய்வார்கள் என்பது போல காட்டப்பட்டிருப்பது மிகை. திரைக்கதையை இயக்குநர் காளீஸ்   குழப்பத்தோடு சொல்லியிருப்பதோடு, சாதாரண மக்களுக்கு புரியாதபடியும் சொல்லியிருக்கிறார்.

மேலும் படத்தின் கதையோட்டத்திற்கு பெரிய தடையாக இருந்தது ஜீவா மற்றும் அவரது அப்பா இடையேயான செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

ஆர்ஜே பாலாஜி செய்த காமெடி ஒரு சில மட்டுமே சிரிப்பூட்டியது. படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் தர்மகோல் மினிஸ்டர் முதல் விஜய் மல்லையா வரை அவர் பேசும் வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

 
மொத்தத்தில், ’கீ’ மூலம் நல்ல விஷயத்தை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர், அதை எப்படி சொல்ல வேண்டும், என்பது தெரியாமல் திணறி உள்ளார்.
 
 
Pin It

Comments are closed.