குக்கூ விமர்சனம்

கண்தெரியாத காதலர்கள் சம்பந்தப்பட்ட கதையைத் தன் முதல் படமாக எடுத்துக் கொண்ட துணிச்சலான முயற்சிக்கு முதலில் புதுமுக இயக்குநர் ராஜுமுருகனை கைகுலுக்கிப் பாராட்டலாம்.

பார்வையற்றோர் விடுதியில் படித்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள சுதந்திரக்கொடிக்கும் பார்வையற்ற இளைஞன் தமிழுக்கும் செவியில் விழுந்து இதயம் நுழைந்து விடுகிறது காதல்.

சுதந்திரக்கொடியின் அண்ணன் தன் தங்கைக்குஅரசுவேலை வாங்கி இன்னொருவனுக்கு மணம் முடித்து அவளது சம்பளத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறான். வேலை வாங்க வருங்கால
மாப்பிள்ளை நண்பனிடம் கடனும் வாங்குகிறான். திருமண ஏற்பாடும் நடக்கிறது. மீறி சுதந்திரக்கொடி, தமிழ் காதல் நிறைவேறியதா என்பதே கதை.

கதை என்னவோ காதல், இடையூறுகள் தடைகள். அதை மீறி ஜெயிப்பது என்கிற வழக்கமான பாதைதான் என்றாலும் கதை மாந்தர்கள் கதை நிகழ்விடம் என்கிற தளங்கள் புதியன.

கண் பார்வையற்றவர்களின் உலகில் நம்மை கொண்டு சேர்த்து விடுகிறார் இயக்குநர். அவர்களுக்கு உடம் பெங்கும் உணர் கொம்புகள் இருப்பதையும் செவிகளையே விழிகளாக உணர்வதையும் உடல் மணத்தைக் கொண்டு இனம் காண்பதையும் அழகாகக் கூறியுள்ளார் இயக்குநர்.

தமிழாக நடித்துள்ள அட்டகத்தி தினேஷ் அசத்தியுள்ளார். நடை உடை பாவனை உடல் மொழி என எல்லாவற்றிலும் வாழ்ந்திருக்கிறார்.

கண் பார்வையற்ற சுதந்திரக்கொடியாக மாளவிகா ,முக மொழிகள் மூலமே ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். நடிப்பில் சுதந்திரமாகக் கொடிகட்டிப் பறக்கிறார்.

படத்தில் வரும் உடல் ஊனமுற்ற பலரது உரையாடலும் கலகலப்பூட்டுகின்றன. அந்த நாடகக் குழுவினர் எபிசோட் ரசனை ரகளை. சூழலுக்கேற்ப பழைய இளையராஜா பாடல்களையே பின்னணி இசையாக்கி பின்னி எடுத்துள்ளது சுவை.

ஒரு காவியத் தன்மையடன் போய்க் கொண்டிருந்த கதையில், காட்சிகளில் சினிமாத்தனமான யதார்த்தம் மீறிய நம்ப முடியாத காட்சிகள் எனப் பல ஓட்டைகளை வைத்து அதைக் கெடுத்து விட்டாரே இயக்குநர்.

ஒரு சாமான்ய ரசிகனுக்கும் தெரியும் பல ஓட்டைகள் அவருக்குத் தெரியவில்லையா?

உதாரணங்கள். சென்ட் மணத்தை வைத்து காதலனை அடையாளம் காணும் காட்சி. எல்லாருக்கும் தமிழ் சென்ட் அடித்து விடுவான். சென்ட் மணமறிந்து ஒரு முறை வேறு ஆளைத்தமிழ் என்று சுதந்திரக்கொடிநினைத்து விடுவாள்.இப்படி தவறு நேர்ந்து விட்டது என்று தெரிந்தும் உறுதி செய்யாமல் எல்லாரிடமும் பேசுவது.

கண் பார்வையற்ற மாளவிகா நள்ளிரவில் தெருவெங்கும் சுதந்திரக்கொடி தப்பித்து ஓடுவது டூமச்.   3லட்சம் பணப்பையுடன் தமிழ் தனியே போவது த்ரீமச். ஒருவரைக் கூட உதவிக்கு அழைத்து வரக் கூடாதா?

விபத்தில் சிக்கிய தமிழும் சுதந்திரக்கொடியும் ஒரே வேனில் பயணிப்பதும் காதலன் தொலைந்த நிலையில் அருகில் இருப்பது யார் என்று கூட கேட்காமல் காதலி இருப்பதும் போர்மச் இப்படி நிறைய துவாரங்கள் உள்ளன.புதியதளம், புதிய முயற்சியில் இறங்கிய துணிவுக்கு இயக்குநர் பாராட்டு பெறுகிறார்.