குடிகாரர்களின் காலில் விழும் மன்சூரலிகான்!

adhiradi2“ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன், ராவணன், வாழ்க ஜனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, என்னைப் பார் யோகம் வரும், லொள்ளு தாதா பராக் பராக்” போன்ற படங்களைத் தயாரித்த ராஜ்கென்னடி பட நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘அதிரடி’.

இப்படத்தில் மன்சூர் அலிகான், மௌமிதா சௌத்ரி (வெஸ்ட் பெங்கால்), சஹானா, பூவிஷா, கவ்யா, காயத்ரி, ராதா ரவி, செந்தில், சிசர் மனோகர் , ஸ்ரீ ரங்கநாதன் ,சங்கர், கிங்காங், நெல்லை சிவா, போண்டாமணி, சுப்புராஜ், மஞ்சப் பை சேகர், நடேசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். செந்தில் படகோட்டியாக நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.
இதன் கதைதான்  என்ன?

மறைந்து கொண்டிருக்கின்ற சிலம்பம், களரி, வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற சண்டைப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் பயில்வானாக கதாநாயகன் மன்சூர். காலையில் இளைஞர்களுக்குப் பயிற்சிக் கொடுப்பவர், மாலையில் சமூக சேவை செய்யும் கதாநாயகனாக மாறுகிறார்.  மதுபானக் கடைகளுக்குச் சென்று குடிப் பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை கேடு விளைவிக்கும் எனக் கூறி அந்தப் பழக்கத்தில் இருப்பவர்களின் காலில் விழுந்து தடுக்கிறார்.

நிஜமான பயில்வானை தேடிப் படமெடுக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு மனசூரலிகானுடைய அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போக பயில்வானான மன்சூரலிகானை படத்தின் கதாநாயகனாக ஆக்குகிறார். பயில்வானுக்கு மறைமுக எதிரிகளால் தொல்லை கொடுக்கப்படுகிறது. தயாரிப்பாளரை ஏமாற்றி உடன் இருந்தவர்கள் பணத்தை விரயம் செய்கின்றனர். இதையெல்லாம் முறியடித்து படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தாரா பயில்வான்? எதிரிகளின் சூழ்ச்சி வெல்லப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் கலந்த அதிரடியாகக் கொடுப்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

மேலும் சீனாவிலிருந்து பிரத்தியேகமாக சண்டை பயிற்சியாளர்களை வரவழைத்து படமாக்கபடவுள்ளது. மூன்று அதிரடி சண்டைக்காட்சிகளும், பரபரப்பான 2 சேஸிங் காட்சிகளும் படத்தை அதிர வைக்கின்றன.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள்..படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், மீனவ குப்பங்கள், கடற்கரை ஒரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.

தொழில் நுட்பக் கலைஞர்கள்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு – மன்சூர் அலிகான்
இயக்கம் – பாலு ஆனந்த் ,ஒளிப்பதிவு –  பிரெட்டேரிக்  (Frederick)