குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது : நடிகை பாலக் லால்வானி !

எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் தன்னை தன்னியல்பாக உருமாற்றிக் கொள்வது தான் ஒரு கலைஞரைப் பாராட்ட வைக்கிறது. நிச்சயமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்பு தான் மிகவும் தேவையான விஷயம். அத்தகைய அனைத்து குணாதிசயங்களுடன், பாலக் லால்வானி ஏற்கெனவே அனைவரது கவனத்தையும், குறிப்பாக குப்பத்து ராஜா ட்ரைலர் மூலம் ஈர்த்திருக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். 
 
“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதற்றம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குநர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” என்றார் பாலக் லால்வானி.
 
படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது, “நான் முன்பே குறிப்பிட்டது போல சென்னையின் சேரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். டிரைலர் மற்றும் பிற காட்சி விளம்பரங்களில் பார்க்கும்போது, படம் சீரியஸான விஷயங்களை பேசுவது போல உள்ளது, உங்கள் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என கேட்டால், “பாபா பாஸ்கர் சார் என்னிடம் ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே, கதையில் கமெர்சியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது குறித்து மிகவும் உற்சாகமடைந்தேன். நீங்கள் குறிப்பிட்டு என் கதாபாத்திரத்தை சொன்னால், அது மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்றார். 
 
ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் KL படத்தொகுப்பில்  உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா.
 
பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.
 
சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் ‘லோக்கல்’ பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, “உண்மையில் நான் ‘லோக்கல்’ என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை ‘நேட்டிவிட்டி’ என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் தான்” என்கிறார்  பாபா பாஸ்கர்.
 
குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் YouTubeல் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த படம் ஒரு தனித்துவமான கதையை கொண்டுள்ளதும் தெளிவாகிறது. மேலும், ‘குப்பத்து ராஜா’ தலைப்புக்கு ஏற்றவாறு, டிரைலரில் வரும் சம்பவங்களை தொடர்புபடுத்தி பார்த்தால், இது குப்பத்துக்கு ‘ராஜா’ ஆக விரும்பும் இருவருக்கு இடையில் நடக்கும் மோதல் என்ற பார்வையை அளித்துள்ளது. எனவே பார்த்திபன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் சண்டை போடுகிறாரா? என பல கேள்விகள் உள்ளன. அதில் எதையாவது ஒன்றை சொன்னாலும் கதையை சொல்ல வேண்டிவரும்” என நகைச்சுவையாக கூறுகிறார் பாபா பாஸ்கர்.
 
மேலும் அவர் கூறும்போது, “டிரைலரில் நாம் பார்த்ததை விட ஆழமான கதை படத்தில் உள்ளது. கதையுடன் இணைந்து பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்கும். ஹீரோ மற்றும் வில்லன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், படத்தில் தான் அதை பார்க்க வேண்டும். ஏனெனில் அதில் சில வியக்கதகு தருணங்கள் இருக்கும்” என்றார்.
 
Pin It

Comments are closed.