‘குலேபகாவலி ‘விமர்சனம்

நடனத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த  பிரபுதேவா பொறுப்புள்ள நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். அவர்  கலகலப்பான நாயகனாக நடித்துள்ள படம் தான் ‘குலேபகாவலி’

ஒரு புதையலைத் தேடும் மரகதநாணயம் ரகக்கதை.

இந்தியாவில் இருந்து வெளியேறும் வெள்ளைக்காரனிடம் இருந்து வைரக் கற்களை  திருடும்  இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற ஊரில் புதைத்து விட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார். இந்த  ரகசியம் அவரது பேரனுக்குத் தெரிகிறது. அவர்  தாத்தா புதைத்து வைத்த வைரத்தை எடுக்கும் முயற்சியில்  இறங்குகிறார்.

 கோயில் சிலை திருடும் பிரபு தேவா, ஆண்களை ஏமாற்றி  களவாடும் ஹன்சிகா ஆகியோரை   இதற்காகத்  தேர்வு செய்யும் அவர், தனது அடியாள் முனிஷ் காந்தையும் அவர்களுடன் அனுப்புகிறார்.  கார்களை திருடி விற்கும் ரேவதியும்  இவர்களுடன்  இடையில்சேர்கிறார்.

இந்த நான்கு பேரும்,  வைரப்புதையலை எடுக்கும் முயற்சியில்  இறங்குகிறார்கள்.  அதை  எடுத்தார்களா இல்லையா என்பது தான் ‘குலேபகாவலி’ படத்தின் கதை.

பிரபு தேவா, கதைத்  தேர்வில் அதிக கவனம் செலுத்துவார். ஆனால் இதில்  ஏமாற்றமே . அந்த அளவுக்கு  அலுப்பான கதையாக இருக்கிறது.

படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், காமெடிக் காட்சிகள் சுமார் ரகமே.

மிகையான நாயகனாக இல்லாமல்  கதாபாத்திரமாக அடக்கி வாசித்திருக்கும் பிரபு தேவா அளவான நடிப்பை வெளிப்படுத்தி, மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சபாஷ்!

 நாயகி என்பதற்காக இரண்டு பாடல்களில் நடனம் ஆட வைத்திருக்கிறார்களே தவிர, மற்றபடி  ஹன்சிகாவுக்கு  எந்த வேலையும் இல்லை.ரேவதி முதல் முறையாக சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.  வில்லனாக நடித்துள்ள ஆனந்தராஜின் வசனங்கள் கூட சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்த்துகின்றன.. ஆனால் யோகி பாபு, முனிஷ் காந்த், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் காமெடி என்ற பெயரில் அறுக்கிறார்கள். 

விவேக் மெர்வின் இசையில் ஆரம்ப பாடலும், அந்த பாடலை படமாக்கிய விதமும்  நன்றாக  உள்ளன. ஆர்.எஸ்.ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும்  வண்ணமயம்.

 படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் என்றால், பிரபு தேவாவின் அறிமுகமும், யோகி பாபுவின் இடைவேளை ரைட்டிங்கும் தான். 

துரத்தல், கடத்தல்,  காதல் என்று அனைத்திலும் காமெடி மசாலா தூவப்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் காலம், வெள்ளக்கார துரை, அவரிடம் இருந்து வைரத்தை அபேஸ் பண்னும் இந்தியர், என்று அமர்க்களமாகவும், ஆர்வமாகவும் படத்தை தொடங்கும் இயக்குநர் எஸ்.கல்யாண்,  அடுத்த காட்சிகளின் மூலம் ரசிகர்களை  சோதிக்கிறார்.

இயக்குநர் கல்யாண் கதையை விட, படத்தில்  வரும் கார்கள் பற்றியே அதிகமாக யோசித்திருக்கிறார். அந்த அளவுக்கு பல பழமையான கார்களை பயன்படுத்தியிருப்பவர். பாடல் காட்சியில் கூட கார்களை வைத்து செட் போட்டிருக்கிறார்.

மொத்தத்தில்,  பொழுதுபோக்கான ஒரு படமாக இந்த ‘குலேபகாவலி’ இருக்கிறது. 

Pin It

Comments are closed.