‘கைதி’ விமர்சனம்


கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  சாம் சி.எஸ் இசையமைப்பில்  எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வந்துள்ள ’கைதி’ படம் எப்படி உள்ளது?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே  ஒரே இரவில் நடக்கும் கதையாக ’மாநகரம்’ படத்தை உருவாக்கினார் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்துள்ளார்.இதற்கான தளம் வேறு. சொல்லியிருக்கும் விதம் வேறு. இதன் பரபரப்பு வேறு.   கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது.
சரி ..படத்தின் கதை என்ன?

போதைப் பொருட்களை கடத்தும் கும்பலிடம் இருந்து நரேன் தலைமையிலான போலீஸ் குழு போதை மருந்துகளைப் பறிமுதல் செய்கிறது. இதனையடுத்து இந்த போதை பொருட்களை மீட்டெடுக்க ஆட்களை அனுப்புகிறது வில்லன்கள் குழு.  அதே நேரம்,  அவர்கள் தங்கள் கும்பலுக்குள் ஊடுருவியுள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொல்லவும் நினைக்கிறார்கள்.

பின்னர் இந்த மொத்த போலீசும் ஒரு சூழ்ச்சியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிக் கொள்கின்றனர். அதன் பின்னர் கைதி கார்த்தி அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் கதை செல்லும் பயணம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்திக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு படம்.  கார்த்தி வழக்கம் போல தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் சாதுர்யமான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஒரே  அழுக்கு உடையுடன் படம் முழுக்க வருகிறார். அவர் தன் முன்கதை சொல்லும்போது முகபாவங்களில் தன் நடிப்பு வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்  கொண்டிருக்கிறார்.சபாஷ்.
அதுமட்டுமல்ல உடன் நடிக்கும் நரேன், ஜார்ஜ் மரியான் போன்ற துணைக் கதாபாத்திரங்களுக்கும்  நல்ல வாய்ப்பு கொடுத்து தனது பெருந்தன்மையை நிரூபித்துள்ளார் கார்த்தி. அதற்காக  அவரைப் பாராட்டலாம்.


 வில்லன்களாக நடித்துள்ள நால்வரில் அன்புவின் கதாபாத்திரம் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்கிறது.

மோனிகா குழந்தையின் நடிப்பு ரசிகர்களை கவரும்.

பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த ஜார்ஜ் மரியானுக்கு இந்தப் படம் தகுந்த கவனத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மறுபடியும் தலைகாட்டியிருக்கிறார் நரேன். அவருக்கும் இது ஒரு நல்ல  மறு பிரவேசம்.  

தொடக்கத்திலிருந்தே சீரான நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது கதை. மயக்கத்திலிருக்கும் காவல்துறை அதிகாரிகளை லாரியில் ஏற்றிய பிறகு, பரபரக்கிறது படம்.
அந்த லாரி கடக்கவிருக்கும் 80 கி.மீ. தூரத்திற்குள் வரும் சவால்களும் அதை முறியடிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் ஒரு சிறந்த விறு விறு பொழுதுபோக்கு அனுபவங்கள்.
 பாடல் இல்லாமல் காமெடிகள் இல்லாமல் நடனம் இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் கதை  அமைப்பு படத்தின் பெரிய பலம்.

சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். படத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு காட்சியில் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. அதிலும் தன்னுடைய சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி படமாக்கியுள்ளார்.

பிலோமின் ராஜ் படத்திற்கு என்ன தேவையோ அந்த காட்சிகளை சிறப்பாக தேர்வு செய்து படமாக கொடுத்துள்ளார்.

பாடல்கள், நாயகி, நடனம் என எதுவும் இல்லாமல் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து அதிலும் வெற்றி கண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் .படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் இடையில் செண்டிமெண்ட் காட்சிகளை வைத்து நம்மை கட்டி போடவும் மறக்கவில்லை.

மற்றொரு பக்கம் காவல் நிலைய முற்றுகையை முறியடிக்க ஒற்றைக் காவலராக ஜார்ஜ் மரியான் எடுக்கும் நடவடிக்கைகள். இதில் அதிரடி ஏதும் இல்லையென்றாலும் பார்ப்பவர்களைத் தடதடக்கச் செய்கின்றன அந்தக் காட்சிகள்.

ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் – பொழுதுபோக்குத் திரைப்படத்தை விரும்புபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டார்கள்.

அனேக இடங்களில் எழும் லாஜிக் கேள்விகளை தனது தொய்வில்லாத திரைக்கதை மூலம் சமன் செய்து விடுகிறார் இயக்குநர் .பரபரப்பு குறையாமல் கொண்டு செல்லும் வேகத்தில் கேள்விகளை மறந்து ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஒரு முழுமையான விறுவிறுப்பான ஆக்ஷன் படம் அனைவரையும் கவரும் .

Pin It

Comments are closed.