‘கொடி வீரன்’ விமர்சனம்

இயக்குநர் முத்தையா குட்டிப்புலி, கொம்பன், மருது படங்கள்  வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் . வழக்கமாக குடும்பம் சார்ந்த கதையை எடுக்கும் முத்தையா, இந்தப் படத்தில் அண்ணன் தங்கை, மாமன் மச்சான் உறவை கதைக்களமாக வைத்திருக்கிறார்.

சசிகுமார்   ஊரில் குறி சொல்பவராக இருக்கிறார் . சிறுவயதிலேயே தாயை இழந்த அவர், தனது தங்கை சனுஷா மீது பெரும் பாசம் கொண்டு தங்கையை உயிராக நினைத்து வாழ்கிறார். அவருக்கு ஏதாவது என்றால் ஆவேசமாகி விடுவார்.

கல்லூரியில் சனுஷாவுடன் படித்து வரும் நாயகி மகிமாவை பார்த்தவுடன் சசிகுமாருக்குப் பிடித்து விடுகிறது. தங்கை சனுஷாவும், தன்னுடைய அண்ணன் சசிகுமாரைத் திருமணம் செய்து கொள்ள மகிமாவிடம் கேட்கிறார்.

அதற்கு மகிமா, உன் அண்ணனை திருமணம் செய்ய வேண்டும் என்றால், என் அண்ணன் விதார்த்தை  நீ திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு சசிகுமார் சம்மதம் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், வட்டாட்சியரான விதார்த்தை அதே ஊரில் இருக்கும் பசுபதி, தன் தங்கையின் கணவர் விஷயத்தில் அவர் பிரச்சனை செய்வதால், வித்தார்த்தை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

விதார்த்தை விட்டுவிடும்படி சசிகுமார் பசுபதியிடம் கேட்கிறார் . ஆனால் பசுபதியோ தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்.இந்த நிலையில், விதார்த் சசிகுமாரின் தங்கை சனுஷாவைத் திருமணம் செய்து கொள்கிறார்.

பிறகு என்ன ? தனது மைத்துனர் பிரச்சினையைத்  தனது பிரச்சினையாக எண்ணி களத்தில் இறங்குகிறார் சசி.

இறுதியில் பசுபதி, விதார்த்தை கொலை செய்தாரா?  மைத்துனர்  விதார்த்தை சசிகுமார் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், குறி சொல்பவராகவும், தங்கை மீது பாசம் கொண்டவராகவும், கோபம் வந்தால், ஆவேச  வீரனாகவும் நடித்திருக்கிறார்.

அவருக்கே உரிய பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  பி அண்ட் சி நாயகன் இமேஜைத்  தக்க வைத்துள்ளார்.நாயகி மகிமா கொடுத்த வேலையை சிறப்பாகச்செய்து ள்ளார்.

 வட்டாட்சியராக வந்து மனதை கவர்ந்திருக்கிறார் வித்தார்த்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் சனுஷா. அவர் ரேணிகுண்டா’ படத்திற்கு பிறகு  அழுத்தமான வேடத்தில் நடித்து மனதில் நிற்கிறார்.  வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும்பூர்ணாவும் மிரட்டியிருக்கிறார்.

மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா என்று அனைத்து நடிகைகளுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். வெட்டு, குத்து, காட்சிகளை குறைத்திருக்கலாம். கர்ப்பிணி தாய் தற்கொலை செய்யும் காட்சி நெருடல் ரகம்..

ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்  இதம். பின்னணி இசையையும் சிறப்பாக உள்ளது. கதிரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கூடுதல் பலம்.

மொத்தத்தில் ‘கொடி வீரன்’   கண்மூடித்தனமான   பாச வீரன்.

 

 

 

 

 

 

 

Pin It

Comments are closed.