‘கொலைகாரன்’ விமர்சனம்

 

தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி, பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் கோ.தனஞ்செயன் வெளியிட்டிருக்கும் ‘கொலைகாரன்’ எப்படி என்பதை பார்ப்பாம்.

ஒரு கொலை, அதில் சம்பந்தப்படும் நாயகன். அவனை சந்தேகப்படும் ஒரு காவல்துறை அதிகாரி. இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம். இந்த சுவாரசியமான களத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம் கொலைகாரன்.

ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்க்கிறார் பிரபாகரன். அவரது ஃப்ளாட்டிற்கு எதிர் ஃப்ளாட்டில் வசிக்கும் தாரிணியும் அவரது தாயும் ஒரு சிக்கலில் மாட்டப்போக, அவர்களுக்கு உதவ முன்வருகிறார் பிரபாகரன். அந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன் மூவரையும் சந்தேகிக்க, இவர்களுக்கு இடையேயான விறுவிறு ஆட்டத்தையும் அத்தனை முடிச்சுகளுக்கான பதிலையும் பல திருப்பங்களுடன் சொல்கிறது கொலைகாரன்.

முதல் காட்சியிலேயே நாயகி கொலை செய்யப்படுகிறார்., அடுத்த காட்சியில், தான் ஒரு கொலை செய்ததாக கூறி, நாயகன் விஜய் ஆண்டனி காவல் நிலையத்தில் சரண்டராகிறார். தகவல் உயர் போலீஸ் அதிகாரியான அர்ஜுனுக்கு போக, விஜய் ஆண்டனி கொடுக்கும் வாக்கு மூலத்தால், நாம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடும் அளவுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் படு சுவாரஸ்யமாக நகரத் தொடங்குகிறது.

விஜய் ஆண்டனி கொலை செய்தது நான் தான், என்று கூறி சரணடைந்தாலும், வழக்கை விசாரிக்கும் அர்ஜுன் ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி கொலை செய்யவில்லை, என்ற முடிவுக்கு வருவதோடு, அவர் கொலை செய்திருக்கிறார், என்றும் கூறுகிறார். அவரது இந்த முரண்பட்ட விசாரணைக்குப் பின் பலவிதமான மர்மங்கள் நிறைந்திருப்பதை, எந்தவித குழப்பமும் இல்லாமல் புரிய வைத்திருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் அமைத்திருக்கும் காட்சிகள் அத்தனைக்கும் அப்ளாஸ் கொடுக்கலாம்.

அழுத்தமான வேடத்தை அசால்டாக செய்யக்கூடிய விஜய் ஆண்டனிக்கு ஏற்ற கதை. இப்படிப்பட்ட படங்களுக்கு சரியான தேர்வு விஜய் ஆண்டனி மட்டுமே, என்று முத்திரை குத்தும் அளவுக்கு மனுஷன் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டுள்ளார்.

பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் அர்ஜூனுக்கு இந்த போலீஸ் வேடம் புதுசு தான். ரொம்பவே அமைதியாக கொலை குறித்து விசாரணை நடத்தும் அர்ஜுன், எந்த இடத்திலும் நடிக்கணும் என்று நினைக்காமல், இயல்பாக வலம் வந்து, தன்னையும் ஹீரோவாக நிலை நிறுத்தியுள்ளார்.

ஹீரோயின் அஷிமா நர்வாலை சுற்றி கதை நகர்ந்தாலும், அவரை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் இருக்குநருக்கு இருந்த தெளிவை, அவரது நடிப்பிலும் பார்க்க முடிகிறது. சீதா, நாசர் போன்றவர்கள் ஒரு சில காட்சிக்கு வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் முகேஷ் பரபரப்பை கூட்டும் விதத்தில் காட்சிகளை கையாண்டிருக்கிறார். சாதாரண காட்சிகளைக் கூட ரசிகர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக அவர் வைத்த பிரேம்கள் அனைத்தும் திரில்லராகவே இருக்கிறது. சிமோன் கிங்கின் இசையில் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் .

இரண்டு விதமான கதைகளை ஒரே நேர் கோட்டில் சொல்லி புரிய வைப்பது என்பதே சவாலானது. அதுவும் இதுபோன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர்  படத்தை அப்படி  சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுக்கு, எடிட்டர் ரிச்சர்ட் கெவின் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். 

படம் பார்ப்பவர்களை யூகிக்க விடாமல், தொடர் திருப்புமுனைகளோடு படம் நகர்ந்தாலும், கொலைக்கான காரணமாக சொல்லப்படுவது சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், நேர்த்தியான கதை சொல்லல், சுவாரஸ்யமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றால் நமது முழு கவனமும், எண்ட் டைடில் கார்டு போடும் வரை திரையிலேயே இருக்கிறது. முதல் காட்சியிலே கதையை துவங்கியிருப்பது, சில திருப்பங்களை பார்வையாளர்களை யூகிக்கச் செய்து பின் அதைவிட பெரிய திருப்பத்தை அதில் புகுத்தியிருக்கும் உத்தி, கதையை விட்டு வேறெங்கும் விலகாத காட்சிகள், சின்ன சின்ன புத்திசாலித்தனங்கள், கடைசிவரை விறுவிறுப்பு குறையாத திரைக்கதை போன்ற பல விஷயங்கள், கொலைகாரனை ஒரு சுவாரசியமான த்ரில்லர் என்று சொல்லவைத்து விடுகின்றன.

Pin It

Comments are closed.