’சக்ரா’ விமர்சனம்

விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கியுள்ள ’சக்ரா’ திரைப்படம்  எப்படி?

மொபைலில் ஒவ்வொரு ஆப்பும் டவுன்லோட் செய்யும் போது நம்முடைய ரகசியங்களை திருடிக் கொள்வோம் என்று தான் அவர்கள் நமது அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அப்போது நாம் கண்டுகொள்வதில்லை அனுமதி கொடுத்து விடுகிறோம்.இதன் விபரீதத்தை விளக்கும் படம் தான் ’சக்ரா’.  டிஜிட்டல் உலகில் நம்மையே அறியாமல் திருடப்படும் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு ஆபத்தானதாக பயன்படுத்த முடியும் என்பதே சக்ராவின் ஒற்றைவரி.

படத்தில் வழக்கமான மிலிட்டரியில் வேலை பார்க்கும் மிடுக்கான கதாநாயகனாக வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் ஷ்ரத்தா.

ஒரு தொடர் திருட்டுச் சம்பவத்தை விசாரிக்க விஷாலின் உதவியை நாடுகிறார் ஷ்ரத்தாஸ்ரீநாத். விஷாலும் அந்த திருட்டு சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்ததால் உதவ முன்வருகிறார். ஆனால் ஷ்ராத்தாவை முழுக்க முழுக்க ஓரம் கட்டிவிட்டு விஷாலே அனைத்தையும் விசாரித்து முடிக்கிறார். 

வழக்கமாக டான்ஸ்களுக்கு மட்டும் நடிகைகளை பயன்படுத்தாமல் ஷ்ரத்தாவுக்கு காவல்துறை அதிகாரி வேடம் கொடுத்திருக்கிறார்கள் .படத்தின் பின்பாதி ஆக்கிரமிக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா . அவரது பின்புலம் அவரது முன்கதை சற்றே அதிர வைக்கிறது.அழுத்தப்பட்ட மனப் பிரச்சனைக்கு ஆளானவர் அவர்  இந்த கொள்ளைக் கூட்டத்தின் பின்புலத்தில் நின்று இயக்குகிறார். அது விறுவிறுப்பைக் கூட்டுகிறது. அவரது அனாயாசமான நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

பாடல்களை எதிர்பார்க்கத் தோன்றாத விறுவிறுப்பான காட்சிகள் இடையே சில முதிராத காட்சிகளும் உள்ளன.படத்தில் சிறிய நேரத்தை கூட வீணடிக்காமல் நேரடியாக கதைக்குள் செல்கிறார்கள். ஆரம்ப காட்சியே திருட்டு, தொடர்ந்து விசாரணை என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. ஆனால் துப்புகளை விஷால் கண்டுபிடிக்கும் விதம் முதிர்ச்சியின்மை போல உள்ளது. வழக்கத்தை விட சக்ரா படத்தில் விஷால் நிறைய அரசியல் பேசுகிறார். மேடைகளில் உளறும் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும் காட்சிகளும் உள்ளன. 

அப்பாவிகளைப் பகடைக்காயாக்கி பின்னாலிருந்து இயங்கும் வில்லனின் கதைதான் என்றாலும் வில்லனுக்கு நிறைய எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறார்கள். அந்த பாத்திரத்துக்கேற்ற  எடை கூட்ட வில்லன் நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல நாட்களுக்கு பின் கே.ஆர்.விஜயா சக்ராவில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் சில நேரமே நீடித்தாலும் நடிப்பு சிறப்பு. கதை விறுவிறுப்பாக நகர்வதால் இடையிடையே வரும் ரோபோ ஷங்கரின் காமெடி எடுபடவில்லை.

மொத்தத்தில் ரசிக்கக்கூடிய திரில்லர் படம்தான்  ’சக்ரா’ .